Skip to content

சொல் பொருள்

(வி) 1. இரு, உட்கார், 2 பொருந்து, 3. விரும்பு, 4. போர்செய்,  5. மாறுபடு, 6. அடக்கமாயிரு, அடக்கு,

2. (பெ) 1. போர், 2. விருப்பம்

சொல் பொருள் விளக்கம்

இரு, உட்கார்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

abide, remain, be seated, be constituted, comprise., wish, desire, be at war, be at strife, be composed, restrain, battle, war, desire, wish

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல் – கலி 81/9

ஆலமரத்தின் கீழ் இருக்கும் இறைவனின் அழகு அமைந்த மகனான முருகனை

கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – பெரும் 75

கடம்பிடத்தே இருந்த நெடிய முருகனை ஒத்த தலைமைச்சிறப்பையும்

அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – திரு 255

அறுவராலே பெறப்பட்ட ஆறு வடிவு பொருந்தின செல்வனே

தன்னொடு புணர்த்த இன் அமர் கானல் – நற் 267/6

தன்னோடு தலைவியைச் சந்தித்த இனிமை பொருந்திய கடற்கரைச் சோலைக்குத்

ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன்
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி – பெரும் 175,176

ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன் கன்றுகளை விரும்பும் ஆனிரைகளோடே காட்டில் தங்கி,

தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே – நற் 348/6

தாம் விரும்பும் துணையோடு வண்டுகள் ஒலிக்கின்றதானது;

பேர் அமர் கண்ணி இருந்த ஊரே – குறு 131/2

பெரிய போர்செய்யும் கண்ணையுடைய தலைவி இருந்த ஊர்
– தம்மைக் கண்டாரின் நெஞ்சோடு போர்செய்யும் கண்களையுடையாள்
– பொ.வே சோ.உரை, விளக்கம்

முருகு அமர் பூ முரண் கிடக்கை – பட் 37

மணம் பொருந்திய பூக்கள் நிறத்தால் தம்முள் மாறுபட்டுக் கிடப்பதினால்

கொடும் குழைக்கு அமர்த்த நோக்கம் – அகம் 3/17

வளைந்த குழையோடு மாறுபட்ட நோக்கமானது

அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்
விளி நிலை கேளாள் தமியள் – அகம் 5/1,2

நாம் அளிசெய்யும் நிலையினைப் பொறாமல் மாறுபட்ட முகத்தினளாய்
நாம் அழைத்தலைக் கேளாமலேயே நாண் முதலியவற்றைத் துறந்தவளாய்

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தைக் காண்க

மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 272

மிக்குச் செல்கின்ற போர்களை முடித்த வென்று அடுகின்ற (உன்னுடைய)மார்பிடத்தே

வேத்து அமர் கடந்த வென்றி நல் வேல் – அகம் 27/15

மன்னர்களைப் போரில் வென்ற வெற்றியை உடைய நல்ல வேல்

பேர் அமர் மழை கண் கொடிச்சி – குறு 286/4

பெரிய விருப்பத்தைச் செய்யும் குளிர்ந்த கண்களையும் உடைய கொடிச்சி
– பொ.

பெண்களின் கண்களை வருணிக்கப்படும்போது அமர் என்ற சொல் பல இடங்களில் பயன்பட்டிருப்பதைக் காண்கிறோம். உரையாசிரியர்கள் அவற்றுக்குப் பல்வேறான பொருள்களைத் தருகின்றனர். அமர் கண் என்பதற்கு போரிடுதலைச்செய்யும், விருப்பத்தைச் செய்யும் என்ற பொருள்களில் உரையாசிரியர்கள் உரை எழுதியிருப்பதைக் கண்டோம். பெண்களின் கண்கள்,அமர் கண் என்ற அடையுடன் காணப்படும் இடங்களைப் பொதுவாக
இரண்டாகப் பிரிக்கலாம்.

1. துயரமான சூழலில், கண்ணிருடன் காணப்படும் பெண்களின் கண்கள் அமர் கண் எனப்படல்.

இங்கே அமர் கண் என வரும் அடிகளும், அவற்றுக்கு உரையாசிரியர் கூறியுள்ள பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

பேர் அமர் மழை கண் ஈரிய கலுழ – நற் 29/9

தன்னுடைய பெரிய மதர்த்த குளிர்ந்த கண்கள் நீர் சுரந்து சொரிய – ஔவை.சு.து
பெரிய அமர்த்த குளிர்ச்சியையுடைய கண்கள் நீர் வடிவனவாய்க் கலுழ – பின்னத்.

பேர் அமர் மழை கண் தெண் பனி கொளவே – நற் 391/10

பெரிய அமர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீர்த்துளிகளைச் சொரியவிட்டு – ஔவை.சு.து
பெரிய அமர்த்தலையுடைய குளிர்ச்சியுற்ற கண்களிலே தெளிந்த நீர் வழியும்படி – பின்னத்.

பேர் அமர் மழை கண் கழில தன் – ஐங் 214/4

பெரியவாய் மதர்த்துக் குளிர்ந்த கண்கள் நீர் சொரிய – ஔவை.சு.து.
பெரிய அமர்த்த குளிர்ந்த கண்கள் கலங்கி நீர் வாரும்படி – பொருந்தும் கண் – கண்டோர் விரும்பும் கண்ணுமாம் – பொ.வே.சோ.

பேர் அமர் மழை கண் புலம்பு கொண்டு ஒழிய – அகம் 337/3

பெரிய அமரிய குளிர்ந்த கண்களையுடைய தலைவி தனிமையுற்றுப் பிரிந்திருக்க – நாட்டார்

நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண் – அகம் 395/3

நீரால் நிறைந்த பெரிய அமர்த்த குளிர்ந்த கண்களினின்று – நாட்டார்

இந்த இடங்களிலெல்லாம், அமர் என்ற சொல்லுக்கு நேரான எளிய பொருளைத் தராமல் ஆசிரியர்கள் ஏறக்குறைய அதே சொல்லைச் சொல்லிச் செல்வதால், இந்தச் சொல்லுக்குரிய நேர்ப்பொருள் தெரியவில்லை. ஆனால்,

சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன-கொல்லோ
———————————— ——————-
மாண் நலம் கையற கலுழும் என்
மாய குறுமகள் மலர் ஏர் கண்ணே – – நற் 66/7-11

சிவந்து ஒளி மழுங்கிக் கலக்கமடைந்தனவோ?
——————————— ————— –
தனது மாட்சிமைப்பட்ட அழகானது அழிந்தொழியுமாறு கலுழாநிற்கும் எனது
அழகிய இளம்புதல்வியின் மலர் போன்ற கண்கள்
– பின்னத்.

என்று வரும் இந்த இடத்தில் கண்ணீர்விடும் கண்கள் அமர்த்தன என்ற தொடருக்கு, கலக்கமடைந்தன என்ற பொருள் பின்னத்தூராரால் கொடுக்கப்பட்டுள்ளது. இது இத்தகைய ஏனை இடங்களுக்கும் ஒத்து வரும் எனத் தோன்றுகிறது. இருப்பினும் இப்பொருள் எந்த அகராதியிலும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இதனை ஒட்டி சில பொருள்கள் அமைகின்றன. Tamil – English Dictionary – viswanatha Pillai என்ற அகராதியில் அமர்த்தல் என்பதற்கு அமர்த்துதல், quieting, tranquilizing, pressing down என்ற பொருள் காணப்படுகிறது. பெரிதாய் எடுத்து அழாமல், அடக்கமாக, அமர்த்தலாய் அழுவதை இது குறிக்கலாம். இர.பாலகிருட்டிண முதலியார் தொகுத்து தென்னிந்திய தமிழ்ச்சங்கம் வெளியிட்ட தமிழ்-ஆங்கில அகராதியில் அமர்த்தல் – அமர்த்துதல் – tranqullize, restrain என்ற பொருள் காணப்படுகிறது. இதுவும் கண்ணீரைக் கட்டுக்குள் வைத்திருக்கும் கண்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். Vaidehi Herbert அம்மையாரும் பேர் அமர் மழைக்கண் என்பதனை your large calm moist eyes என்றே மொழிபெயர்த்திருக்கிறார்.

2. கண்களைப் பாராட்டும்விதமாக அமைந்த பயன்பாடுகள்.

பேர் அமர் கண்ணி இருந்த ஊரே – குறு 131/2

– பெரிய அமர்த்தலையுடைய கண்னையும்பெற்ற தலைவி – உ.வே.சா
பெரிய போர்செய்யும் கண்ணையுடைய தலைவி இருந்த ஊர்
– தம்மைக் கண்டாரின் நெஞ்சோடு போர்செய்யும்
– பெரிய விருப்பத்தைச் செய்யும் கண் எனினுமாம் – பொ..வே.சோ

பேர் அமர் மழை கண் கொடிச்சி – குறு 286/4

பெரிய அமர்ந்த குளிர்சியையுடைய கண்களையுடைய கொடிச்சி – உ.வே.சா
பெரிய விருப்பத்தைச் செய்யும் குளிர்ந்த கண்களையும் உடைய கொடிச்சி – பொ..வே.சோ.

பேர் அமர் மழை கண் கொடிச்சி கடியவும் – ஐங் 282/2

பெரிய விருப்பத்தைச் செய்கின்ற குளிர்ந்த கண்களை உடைய கொடிச்சி – பொ..வே.சோ.
பெரிய மதர்த்த கண்களையுடைய கொடிச்சி -ஔ.

பேர் அமர் கண்ணி ஆடுகம் விரைந்தே – ஐங் 412/4

பெரியவாய் ஒன்றோடொன்று போர்செய்வன போன்று பிறழும் கண்களையுடைய – பொ..வே.சோ.

பேர் அமர் மலர் கண் மடந்தை நீயே – ஐங் 427/1

பெரிய விருப்பம் தருவதற்குக் காரணமான மலர் போன்ற அழகிய கண்கள் – பொ..வே.சோ.

பேர் அமர் கண்ணி நின் பிரிந்து உறைநர் – ஐங் 496/3

– கண்களைப் பாராட்டினான் – பொ..வே.சோ.

அமர் கண்
நகை மொழி நல்லவர் – கலி 40/1,2

முகத்திற்குப் பொருந்தின கண்ணினையும்
மகிழ்ச்சியைத்தரும் மொழியினையுமுடைய நல்ல மகளிர் – நச்.

தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் – கலி 57/9

– போரையுடைய கண்கள் – நச்.

பேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல் – அகம் 326/2

பெரிய அமர்செய்யும் குளிர்ந்த கண்களையும் பெரிய தோளினையும் சிறிய நெற்றியினையுமுடைய – நாட்டார்.

பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய – கலி 60/16

பெரிய அமர்த்த உண்கண்ணினையுடைய நின் தோழி உறுத்தின – நச்.

பேர் அமர் கண்ணார்க்கும் படு வலை இது என – கலி 74/14

பெருத்து அமர்த்த கண்ணினையுடைய பரத்தையர்க்கும் அவர்கள் அகப்படும் வலை இது என – நச்.

அமர் கண் மகளிர் அலப்பிய அ நோய் – கலி 75/7

போரைச் செய்யும் கண்ணினையுடைய மகளிர் தம்மை அலைத்த அந்த நோயை – நச்.

பல்லும் பணை தோளும் பேர் அமர் உண்கண்ணும் – கலி 108/16

பல்லும், பணை போலும் தோளும் பெரிய அமர்செய்யும் உண்கண்ணும் – நச்.

அலமரல் அமர் உண்கண் அம் நல்லாய் நீ உறீஇ – கலி 113/2

சுழலுதலையுடைய முகத்தோடு பொருந்தின கண்ணினையும் அழகினையுமுடைய நல்லாளே – நச்.

பேர் அமர் உண்கண் நிறை மல்க அ நீர் தன் – கலி 146/7

பெரிய அமர்த்த உண்கண் நீர் நிறைகையினாலே – நச்.

அமர் கண் அஞ்ஞையை அலைத்த கையே – அகம் 145/22

அமர்ந்த கண்களையுடைய என் மகளை துன்புறுத்திய கைகள் – நாட்டார்

பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக – புறம் 71/6

பெரியவாய் முகத்தோடு பொருந்தின மையுண்ட கண்ணினையுடைய இவளினும் நீங்குவேனாக – ஔவை.சு.து.

இந்த இடங்களில், பொருந்துகின்ற, போர்செய்கின்ற, விருப்பம் தருகின்ற என்ற பொருள்கள்
கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.இவை ஏற்கனவே அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *