சொல் பொருள்
(வி) 1. பேரொலி எழுப்பு, 2. கருணைகாட்டு, அனுதாபம் கொள்,
சொல் பொருள் விளக்கம்
1. பேரொலி எழுப்பு,
பேரிரைச்சலோடு கூடிய முழக்கம் இரங்குதல் எனப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
roar
show sympathy or grace
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாறைகளுக்கு நெடுவே பாய்ந்துவரும் ஆற்று நீரை, கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று – புறம் 192/8 என்கிறது புறநானூறு கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை – மலை 324 இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரி – புறம் 174/8 கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி – குறு 134/5 என்ற அடிகளும் இதனை வலியுறுத்தும். சிலநேரங்களில் பொங்கிவரும் அலைகளைக்கொண்டு கரைகளில் மோதிப் பேரிரைச்சலைக் கடல் உருவாக்கும். அப்பொழுது அதனை இரங்கு கடல் என வருணிக்கின்றன நம் இலக்கியங்கள். இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை – அகம் 152/6 பாடு எழுந்து இரங்கு முந்நீர் – அகம் 400/25 முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை – அகம் 70/14 என்ற அடிகளால் இதனை உணரலாம். முரசுகளைப் பலவிதங்களில் ஒலிக்கலாம். அதனைப் பெருமுழக்கத்தோடு ஒலிக்கும்போது அதனை இரங்கு முரசு என்கிறோம். இரங்கு முரசின் இனம் சால் யானை – புறம் 137/1 முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று – புறம் 211/5 பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை – புறம் 388/14 இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப – புறம் 397/5 போன்ற அடிகள் பெருமுழக்கத்தை எழுப்பும் முரசுகளை இரங்கும் முரசு என்று குறிப்பதைக் காணலாம். மாட்டுவண்டியில் கரடுமுரடான பாதையில் பயணம்செய்திருக்கிறீர்களா? கற்களின் மேலும், கற்பாறைகளின்மேலும் சக்கரம் ஏறி இறங்கும்போது ஏற்படும் பெரும் சத்தத்தையும் இரங்குதல் என்கின்றது அகநானூறு. இங்கே ஒரு குதிரை பூட்டிய தேரின் சக்கரம் எழுப்பும் ஒலியைக் கேளுங்கள். விடுவிசைக் குதிரை விலங்கு பரி முடுகக் கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக் கார்மழை முழக்கு இசை கடுக்கும் – அகம் 14/18-20 மேகங்கள் கடமுட என்று முழங்குவதைப் போல், கற்கள் உள்ள பாதையில் விரைந்து செல்லும் தேரின் சக்கரங்கள் கல்லில் மோதி இரங்குகின்றன என்கிறார் புலவர். கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் பிணிக்கும்காலை இரங்குவிர் மாதோ – புறம் 195/4,5 மழுவாகிய கூர்மையான படைக்கலத்தையும், கடும் வலிமையும் கொண்ட ஒருவன் (யமன்) கட்டிக்கொண்டு போகுங்காலத்து நீர் நிலைக்கு பரிதவிப்பீர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்