இருங்கோவேள் –சங்ககாலச் சிற்றரசன், வேளிர் தலைவருள் ஒருவன்
1. சொல் பொருள்
(பெ) சங்ககாலச் சிற்றரசன், இருங்கோவேள் என்பான் பதினெண்குடி வேளிருள் ஒருவன்.
கிருஷ்ணன் – சமற்கிருதச் சொல், இருங்கோவேள் – தமிழ்ச் சொல்
2. சொல் பொருள் விளக்கம்
சங்ககாலச் சிற்றரசன், வேளிர் தலைவருள் ஒருவன்.
அன்றைய தமிழகத்தின் வடபகுதியாகிய எருமைநாட்டைச் (இன்றைய மைசூர்ப்பகுதி) சேர்ந்த துவரை என்னும்
நகர்க்கண்ணிருந்து ஆட்சிபுரிந்த வேந்தர் வழியினன். பாரி இறந்த பின்னர், அவன் மகளிர் இருவரை மணந்துகொள்ளும்படி கபிலர் இவனை வேண்ட இவன் மறுத்துவிட்டான். புறம் 201,202 ஆகிய பாடல்கள் இவனைப் பற்றிய செய்திகளைக் கூறும்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், இருங்கோவேள் உள்ளிட்ட எழுவரைப் போரில்
வென்றான்.
இந்த இருங்கோவேள் அரசர்கள் சங்க காலம் என்ற காலப்பகுதியில் வாழ்ந்த இருங்கோவேள் அரசர்களே என்று ஆரோக்கியசாமி என்ற ஆய்வாளர் கருதினாலும் இரு வம்சத்தவருக்கும் எந்த தொடர்புமில்லை என்று மயிலை சீனி. வேங்கடசாமி என்பவர் மறுத்துமுள்ளார்.
இருங்கோவேள் என்பான் பதினெண்குடி வேளிருள் ஒருவன். தமிழகத்தின் வடபகுதியாகிய எருமை (மைசூர்) நாட்டைச்சேர்ந்தது வரையென்னும் நகர்க்கண்ணிருந்து ஆட்சிபுரிந்த வேந்தர்வழியினன். இத்துவரை துவார சமுத்திரம் எனப்படுகிறது. இருங்கோவேள் அவ் வேளிருள் நாற்பத்தொன்பதாவது தலைமுறையினன். புலி கடிமால் என்பது இவன் குடி
முதல்வனுக்குப்பெயர். இவ் வேளிர் வள்ளன்மை சிறந்தவர்; போர்வன்மை மிக்கவர். இவர் நாடு புதுக்கோட்டைச் சீமையிலுள்ள மலைநாடு. இவற்றிற்கு மேற்கிலுள்ள கோடைமலைத்தொடர் பொன்படுமால்வரையென
(Imp. gazette. Coimbatore) ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர். பாரிமகளிரைக் கொணர்ந்த கபிலர் இவனையடைந்து, “இம் மகளிரை யான்தர மணந்து கொள்க” என வேண்டுகின்றவர், “இவர்கள் முல்லைக்குத் தேரீந்து நல்லிசை நிறுவிய பறம்பிற்கோமானாகிய பாரியின் மகளிர்; யான் இவருடைய தந்தையாகிய வேள்பாரிக்குத் தோழன்; அந்தணன் புலவன்”
என்று கூறுகின்றார்.
இவர் யார்?
என்குவை ஆயின், இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை
படுமணி யானைப் பறம்பின் கோமான்
5 நெடுமாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்; இவர்என் மகளிர்;
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்புபுனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை
10 உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்,
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய
15 ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான்தர இவரைக் கொண்மதி; வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ, வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்
20 கெடல்அருங் குரைய நாடுகிழ வோயே! – புறநானூறு 201
உரை: ”இவர்கள் யார்?” என்று கேட்பாயாயின் , இவர்கள் தன்னுடைய ஊர்களையெல்லாம் இரவலர்க்கு அளித்ததோடு மட்டுமல்லாமல், முல்லைகொடிக்குத் தன் தேரையும் அளித்ததால் பெற்ற அழியாப் புகழையும், ஒலிக்கும் மணிகளை அணிந்த யானைகளையும் உடைய பறம்பு நாட்டின் தலைவனாகிய உயர்ந்த பெருமையுடைய பாரியின் மகளிர். நான் இவர்களின் தந்தையின் தோழன். ஆகவே, இவர்கள் எனக்கு மகளிர் (போன்றவர்கள்). நான் ஒரு அந்தணன்; மற்றும் ஒருபுலவன். நான் இவர்களை அழைத்து வந்தேன்.
வடக்கே இருந்த முனிவன் ஒருவன், எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட “தடவு” என்று சொல்லப்படும் இடம் ஒன்றில் வழ்ந்தான். உன் முன்னோர்கள் அந்தத் தடவிலிருந்து வந்தவர்கள். நீ அவர்கள் வழியினன்; நீ செம்பால் அலங்கரிக்கப்பட்ட நெடிய உயர்ந்த மதிற்சுவர்களைக்கொண்ட கோட்டைகளையுடையவன்; விரும்பத்தக்க ஈகைத் தன்மையுடையவன்; துவரை நகரத்தை ஆண்ட நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள்களுக்குள் சிறந்த வேள். போர்களில் வெற்றிபெற்ற தலைவ! மாலையணிந்த யானையையுடைய பெருமைமிக்க இருங்கோவேளே! நீ தலைவனின் கடமையை அறிந்து பாணர்களுக்கு உதவுபவன். தழைத்த மாலையையுடைய புலிகடிமாலே!
வானத்தின் வளைவுக்குள் பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் அரிய வலிமையுடைய, பொன் விளையும் பெரிய மலைக்குத் தலைவ! வெற்றி பொருந்திய வேலும், பகைவர்கள் அஞ்சும் படையும், அழியாத பெருமையும் உடைய நாட்டுக்கு உரியவனே! நான் இவர்களை உனக்கு அளிக்கிறேன்; நீ இவர்களை ஏற்றுக்கொள்.
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்
கடிய கதழும் நெடுவரைப் படப்பை
5 வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி
இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்
கோடிபல அடுக்கிய பொருள்நுமக்கு உதவிய
நீடுநிலை அரையத்துக் கேடும் கேளினி
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
10 ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்!
எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்றுஇவர்
15 கைவண் பாரி மகளிர் என்றஎன்
தேற்றாப் புன்சொல் நோற்றிசிற் பெரும!
விடுத்தனென்; வெலீஇயர்நின் வேலே; அடுக்கத்து
அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
20 இரும்புலி வரிப்புறம் கடுக்கும் புறநானூறு 202
இப்பாடலில், கபிலர் பல கருத்துகளை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். இருங்கோவேளின் முன்னோர்களில் ஒருவன் கழாத்தலையாரை இகழ்ந்ததால் அரையம் அழிந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, தன் சொல்லைக் கேளாமல் தன்னை இகழ்ந்ததால் இருங்கோவேளின் நாட்டுக்குக் கேடு வரும் என்று கூறாமல் கூறுகிறார். அடுத்து, அரையத்தின் அழிவைப் பற்றிக் கூறும்பொழுது, “நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்” என்று இருங்கோவேளின் முன்னோர்களின் ஒருவன் இருங்கோவேளைப்போல் அறிவில்லாதவன் என்று மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். ”நுந்தை தாயம் நிறைவுற எய்திய” என்று அவனுடைய நாடு மற்றும் செல்வம் அனைத்தும் அவன் தந்தையால் அவனுக்கு அளிக்கப்பட்டதே ஒழிய அவன் தன் சொந்த முயற்சியால் எதையும் பெறவில்லை என்று மறைமுகமாகக் கூறுகிறார். தன்னுடன் வந்த பெண்கள் பாரியின் மகளிர் என்பதால் அவர்களை மணந்தால் மூவேந்தருடன் பகை வரக்கூடும் என்ற அச்சத்தால் இருங்கோவேள் அவர்களை மணக்க மறுக்கிறான் என்று கபிலர் கருதுகிறார். அஞ்ச வேண்டாதவற்றை எண்ணி அவன் அஞ்சுகிறான் என்பதை, வேங்கைப் பூக்கள் பரவிக் கிடக்கும் பாறை, புலியின் முதுகுபோல் இருக்கிறது என்று மறைமுகமாக அவன் அச்சத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.
மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்துஇழுது மறப்பச்
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும்
5 அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப
உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்புகுறித்து எறிந்த
10 புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
வாள்வடக்கு இருந்தனன் ஈங்கு
நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே! – புறநானூறு 65
கரிகால் வளவன், வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும் பதினொரு வேளிர்குலச் சிற்றரசர்களையும் வென்றான். வெண்ணியில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியது. தன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான். அவனுடைய மரணத்தால் பெருந்துயருற்ற கழாத்தலையார், தம் வருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.
செம் கண்ணால் செயிர்த்து நோக்கி
புன் பொதுவர் வழி பொன்ற
இருங்கோவேள் மருங்கு சாய – பட்டினப்பாலை 282
கரிகால் வளவன் இடை. நிலங்களில் வாழ்ந்த பொதுவர் என்பாரை (இடை. நில அரசரை) வென்றனன்; இருங்கோவேள் முதலிய வேளிரைத் தனக்கு அடங்கியவர் அக்கினன். அரையம் என்ற நகரின் தலைவன்.
இருக்குவேளிர்கள் கொடும்பாளூரைத் தலைநகராகக் கொண்டு அப்பகுதியை ஆண்டனர். இன்று விராலி மலையிலிருந்து ஐந்து கி. மீ. தூரத்தில் உள்ள இந்தக் குக்கிராமம் அன்று ஒரு பெரும் நகராக இருந்ததற்குத் தடயங்கள் உள்ளன. பாண்டிய நாட்டின் தலைநகரையும் சோழ நாட்டின் தலைநகரையும் இணைத்த பெருவழியில் அன்றைய கொடும்பாளூர் அமைந்திருந்தது. அங்கே கிடைத்த கல்வெட்டொன்று இந்நகரை இப்படி வர்ணிக்கிறது: “கொடிகள் பறக்கும் கோபுரங்களும் கோட்டை கொத்தளங்களும் பெருந்தூண்கள் கொண்ட மண்டபங்களும் நீண்ட மதிற்சுவரும் கொண்டது.” சிலப்பதிகாரத்திலும் இந்நகரிலிருந்து மற்ற இடங்களுக்குச் செல்லும் சாலைகளைப் பற்றிய ஒரு குறிப்பு காணப்படுகிறது:
கொடும்பை நெடும் குள கோட்டகம் புக்கால்
பிறை முடி கண்ணி பெரியோன் ஏந்திய
அறை வாய் சூலத்து அரு நெறி கவர்க்கும் – சிலப்பதிகாரம். மது:11/71
கொடும்பாளூர் வம்சம் தொன்றுத் தொட்ட இருங்கோவேள் வம்சமாக கருதப்படுகிறது. Boothi Vikramakesari was a Velir chieftain and a feudatory of Parantaka II. He suceeded his father as the Irunkovel king of Kodumbalur.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a chieftain of sangam period, irunkovel, irungovel, irukkuvel
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப
சேரல் செம்பியன் சினம் கெழு திதியன்
போர் வல் யானை பொலம் பூண் எழினி
நார் அரி நறவின் எருமையூரன்
தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று
எழுவர் நல் வலம் அடங்க – அகம் 36/13-20
கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள் பூட்டிய கொடி பறக்கும் தேர் உடைய நெடுஞ்செழியன்
தலையாலங்கானத்து அகன்ற போர்க்களம் செந்நிறம் அடைய –
சேரன், சோழன், சினம் மிக்க திதியன்,
போரில் வல்ல யானையை உடைய பொன் அணிகள் அணிந்த எழினி,
நாரால் அரிக்கப்பட்ட கள்ளினையுடைய எருமையூரன்,
தேன் மணம் கமழும் மார்பினில் பூசிப் புலர்ந்த சந்தனத்தையுடைய
இருங்கோவேண்மான், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையுடைய பொருநன் என்ற
எழுவரின் சிறந்த வெற்றிகள் அடங்கிப்போக
சோழன் கரிகாலன் இவன் குலத்தை அழித்தான்.
பல்ஒளியர் பணிபு ஒடுங்க
தொல் அருவாளர் தொழில் கேட்ப
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல்கெடச் சீறிமன்னர்
மன்எயில் கதுவும் மதனுடை நோன்தாள்
மாத்தானை மற மொய்ப்பின்
செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப்
புன்பொதுவர் வழி பொன்ற
இருங்கோவேள் மருங்கு சாய – பட் 282
ஒளிநாட்டார் பலரும் பணிந்து அடங்கவும் , தொன்மையான அருவா நாட்டினர் பணிந்து ஏவலைக் கேட்டு நடக்கவும், வட நாட்டவர் தோல்வியுறவும், குடநாட்டவரின் ஊக்கம் குறையுமாறும் வெற்றி கொண்டவன். பாண்டியனுடைய வலிமை அழியுமாறு , சினம் கொண்டு சீறி எழுந்து நிலைபெற்ற மதிலரண்களைக் கைப்பற்றும் செருக்கும் , வலிமையோடு போர் செய்யும் முயற்சியினையுமுடைய பெரும்படையினை உடையவன் . வீரமும் வலிமையும் ஒருங்கே பெற்ற திருமாவளவன், சினம் மிகுந்து தன் சிவந்த கண்ணால் நோக்கிய பார்வையிலே , சிறிய பகுதிகளை ஆண்டுவரும் பொதுவரின் (இடைக்குல மன்னர் ) சந்ததியினரும் அழிந்தனர். இருங்கோவின் குலமும் அழிந்தது(ஐம்பெருவேளிர் குலமுழுதுங் குறைய).
வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போரண்ணல்!’ (புறநானூறு – 201)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்