Skip to content

சொல் பொருள்

(வி) ஆழத்திலிருந்து நீரை எடு

(பெ) 1. குடிசை வீட்டுக் கூரையின் சாய்வான பக்கம், 2. நீட்டிக்கொண்டிருக்கும் கூரையின் உட்பக்கம், 3.தோளிலிருந்து இரண்டு பக்கமும் இறங்கும் பகுதி, 4. அரசுக்குச் செலுத்துவது, 5. அரசன், தலைவன், 6. சிறிதளவு, 7. முன்கை, 8. தங்குதல், 9. கடவுள், 10. மரத்தின் தாழ்வான பகுதி,  11. உயரம்

சொல் பொருள் விளக்கம்

(1) இறை எனப்படுவார் தந்தையரும் ஆசிரியரும் அரசரும் முதலாயினார். (தொல். பொருள். 256. பேரா.)

(2) தமிழில் இறை என்பது இறைவன் நிலத்தின் பேரில் வாங்கும் ஆறில் ஒரு கடமைக்குப் பெயராகும். அதனால் தான் இறைவனுக்கும் (அரசன்) அப்பெயர் வந்தது. இறை வாங்குபவன் இறைவன் அல்லவா ! இவ்விதக் கடமையை இறைவனுக்குச் செலுத்தாத நிலங்கள் ஆலயங்களுக்குத் தானமாகக் கொடுக்கப் பட்டிருந்தால் “இறையிலி தேவதானம்” என்று பெயர் பெறும். (செந்தமிழ்ச் செல்வி. 12: 80 -81.)

(3) இறை அல்லது இறைவன் என்பது, அரசனுக்கும் கடவுட்கும் பொதுப்பெயர். ‘கடவுள் எங்கும் தங்கியிருப்பது போல, அரசனுடைய ஆணை, அவனுடைய நாடெங்கும் தங்கியிருக்கிறது என்பது கருத்து, இறுத்தல் – தங்குதல். (சொல். கட். 24.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

draw water as from a well, sloping roof, eaves of a roof, that part of the body that descends from the shoulders., share of the produce accruing to the king as rent; king, master, chief, an insignificant quantity, forehand, abiding, supreme god, lower part of a tree, height

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உண சென்று அற்று ஆங்கு – குறு 99/4,5

உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைகளைத் தொட்டுக்கொண்டு சென்ற பெருவெள்ளம்
கையால் இறைத்து உண்ணும் அளவுக்குக் குறைந்து அற்றுப்போய்விடுவது போல

பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக
புறங்காலின் போக இறைப்பேன் – கலி 144/46,47

பெருகி வரும் கரிய கடலே! நீ வெறும் மணல்வெளியாய்ப் போகும்படி
என் புறங்காலால் உன் நீரை எல்லாம் இறைத்துவிடுவேன்,

குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 265

ஒடுக்கமாக இறங்கும் கூரையினையுடைய குடிசையின் பறியையுடைய முன்பக்கம்

இறைஉறை புறவின் செம் கால் சேவல் – பெரும் 439

இறங்கிய கூரையின் நீட்டிய பாகத்தின் உட்பக்கத்தில் தங்கும் புறாவின் சிவந்த காலையுடைய சேவல்

நேர் இறை முன்கை பற்றி நுமர் தர – குறி 231

அழகிதாக இரண்டுபக்கமும் இறங்கும் முன்கையைப் பிடித்து உம் வீட்டார் தர

திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என – மலை 319

திருத்தமான வேலினை உடைய அரசனுக்குப் புதிதாக அளிக்கும் பொருளாக இருக்கும் என்று

அஞ்சல் என்ற இறை கைவிட்டு என – நற் 43/8

அஞ்சவேண்டாம் என்ற அரசன் கைவிட்டான் என்று

உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை – நற் 113/1

மான்கள் அண்ணாந்து உண்டதால் சிறிதளவே வளைந்த உயர்ந்த கிளைகள்

இறை ஏர் எல் வளை குறு_மகள் – நற் 167/10

முன்கையிலுள்ள அழகிய ஒளிவிடும் வளையல்கள் அணிந்த சிறுபெண்

இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த – குறு 92/3

தங்கும்படியாக உயர்ந்த வழியை அடுத்துள்ள மரத்தில்

சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் – பரி 8/79

தண்டிக்கின்ற இறைவனை ஆற்றுங்கள், அவன் அடியினைச் சேர்ந்து புகழுங்கள்.

இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும் – அகம் 103/9

கிளைகள் தழ்ழ்ந்திருக்கும் நிழலின் ஒரு பக்கத்தில் தனிமைத் துயரோடு பெருமூச்செறியும்

ஏந்து கொடி இறை புரிசை – புறம் 17/27

ஏந்திய கொடிகளும்,உயர்ந்த கோட்டைமதிலும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *