Skip to content
ஈங்கை

ஈங்கை என்பது ஒரு புதர்முட் செடி

1. சொல் பொருள்

(பெ) – இண்டு, வெள்ளிண்டு, சிவப்பிண்டு, இண்டை, இண்டஞ்செடி, இண்டங்கொடி, புலி தடுக்கி கொடி, ஈயக்கொழுந்து, காட்டுச்சிகை.

2. சொல் பொருள் விளக்கம்

இண்டஞ்செடி, நிறையப் பூக்கக்கூடியது, இலைக்காம்பில் இரட்டையான கூரிய முட்கள் இருக்கும். தண்டு முழுதும் முட்கள் நிறைந்திருக்கும். இது கொடி இனத்தைப் போல வேறு தாவரத்தைப் பற்றி ஏறுவதில்லை

  1. மணல்பாங்கான இடத்தில் வளரக்கூடியது
  2. ஈங்கையின் அரும்பும், காட்டு மல்லிகை மலரும் உயர்ந்த மணலால் அமைந்த மேட்டினில் உதிர்ந்து பூக்கள் குருவிக்குஞ்சைப் போல் இருக்கும்
  3. மொட்டுகள் சிவப்புநிறத்தில் வட்டமாகவும், பூக்கள் தலையில் பஞ்சுப்பிசிரையும் கொண்டிருக்கும்
  4. மொட்டுகள் இரவம் விதையைப் போன்று இருக்கும்
  5. ஈங்கை வெண்ணிறத்தில் பூக்கும். பூக்கள் ஆலங்கட்டியைப் போன்று வெண்மையாகவும் இருக்கும்
  6. வளைவான,நுண்மையான முட்களை உடையது
  7. குளிர்ச்சியாகவும் புதராகவும் வளரும்
  8. கிளைகள் கொடி போல் வெண்மையாகவும், செடி பசுமையாகவும் இருக்கும்
  9. வளைந்த துளையினையுடைய பவளத்தைப் போல் பூ இருக்கும்
  10. இதனை மாமரத்துக்கு வேலியாகப் பயன்படுத்துவர்
ஈங்கை
ஈங்கை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Species of a sensitive shrub, Mimosa rubicaulis, Acacia caesia, Senegalia pennata;

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இண்டு
இண்டு
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ – நற் 79/1
(வீ – பூ)

மணல்பாங்கான இடத்தில் வளரக்கூடியது

ஈங்கை/முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் – நற் 124/4,5

ஈங்கையின் அரும்பும், காட்டுமல்லிகை மலரும் உயர்ந்த மணலால் அமைந்த மேட்டினில் உதிர்ந்து பூக்கள் குருவிக்குஞ்சைப் போல் இருக்கும்

நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன
சிறு பல் பிள்ளையொடு – நற் 181/4,5

நெறிப்பு விளங்கிய ஈங்கையின் பூவைப் போன்ற
சிறிய பலவாகிய பிள்ளைகளும்

மொட்டுகள் சிவப்புநிறத்தில் வட்டமாகவும், பூக்கள் தலையில் பஞ்சுப்பிசிரையும் கொண்டிருக்கும்

அட்டு அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை
துய் தலை புது மலர் – நற் 193/1,2

உருக்கிய அரக்குப்போன்ற சிவந்த வட்டமாகிய மொட்டுக்களையுடைய ஈங்கையின்
பஞ்சு போன்ற தலையை உடைய புதிய மலரின்

மொட்டுகள் இரவம் விதையைப் போன்றும், பூக்கள் ஆலங்கட்டியைப் போன்று வெண்மையாகவும் இருக்கும்

இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலி அன்ன வால் வீ தாஅய் – அகம் 125/3,4

இரம் = இரவ மரம், Mesua ferrea; காழ் = விதை, ஆலி = ஆலங்கட்டி வால் = வெண்மை)

வளைவான,நுண்மையான முட்களை உடையது

கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் – நற் 205/9
நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த – குறு 110/5

குளிர்ச்சியாகவும் புதராகவும் வளரும்

பனி புதல் ஈங்கை அம் குழை – நற் 312/2

கிளைகள் கொடி போல் வெண்மையாகவும், செடி பசுமையாகவும் இருக்கும்

வெண் கொடி ஈங்கை பைம் புதல் அணியும் – ஐங் 456/3

மழைக்காலத்தில் தளிர்விடும்

மாரி ஈங்கை மா தளிர் அன்ன – அகம் 75/17

வளைந்த துளையினையுடைய பவளத்தைப் போல் பூ இருக்கும்

வாங்கு துளை துகிரின் ஈங்கை பூப்ப – அகம் 243/2

துகிர் = பவளம்
சிவப்பிண்டு
சிவப்பிண்டு
ஈங்கை என்பதற்கு இண்டஞ்செடி என்ற பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon).
ஆனால், இண்டு என்பதற்கு கொடிவகை (Acacia intsiacaesia) என்றும், sensitive plant (Mimosa) – தொட்டாற்சுருங்கி
என்றும், sensitive- tree (Mimosa rubicaulis) என்றும் மூன்று பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே – நற் 2/6


என்ற நற்றிணை அடிகளால் இண்டு, ஈங்கை என்பன வெவ்வேறானவை எனத் தெரியலாம். இண்டு இவர் என வருவதால் இண்டு என்பது கொடிவகை என்றும், அது ஈங்கை மீது படர்வதால் அது ஒரு மரம் / செடி எனத் தெளியலாம். இண்டு இவர் ஈங்கைய என்பதற்கு இண்டங்கொடியுடனே ஒருசேரப் படர்கின்ற ஈங்கையையுடைய எனப் பொருள்கொள்வார் பின்னத்தூரார். இவர் கூற்றுப்படி இரண்டுமே கொடிவகை ஆகின்றன. 

ஆனால், இதே தொடருக்கு, இண்டைக்கொடி பின்னிப்படர்ந்த ஈங்கை மரங்களையுடையவாய் எனப் பொருள்கொள்வார் ஔவை.சு.து.அவர்கள். எனவே, ஈங்கை என்பதற்கு sensitive- tree (Mimosa rubicaulis) என்று பொருள்கொள்வதே
சிறந்தது எனத் தோன்றுகிறது.

ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை - குறி 86

சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ - நற் 79/1

கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை/நல் தளிர் நயவர நுடங்கும் - நற் 86/7,8

நீங்கல் வாழியர் ஐய ஈங்கை/முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் - நற் 124/4,5

நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன - நற் 181/4

அட்டு அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை/துய் தலை புது மலர் துளி தலை கலாவ - நற் 193/1,2

கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் - நற் 205/9

பனி புதல் ஈங்கை அம் குழை வருட - நற் 312/2

நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த - குறு 110/5

வெண் கொடி ஈங்கை பைம் புதல் அணியும் - ஐங் 456/3

வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக - கலி 31/3

மாரி ஈங்கை மா தளிர் அன்ன - அகம் 75/17

இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை/ஆலி அன்ன வால் வீ தாஅய் - அகம் 125/3,4

மாரி ஈங்கை மா தளிர் அன்ன - அகம் 206/7

வாங்கு துளை துகிரின் ஈங்கை பூப்ப - அகம் 243/2

யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கை/துய் அவிழ் பனி மலர் உதிர வீசி - அகம் 252/9,10

துய் தலை பூவின் புதல் இவர் ஈங்கை/நெய் தோய்த்து அன்ன நீர் நனை அம் தளிர் - அகம் 294/6,7

முள் கொம்பு ஈங்கை துய் தலை புது வீ - அகம் 306/3

கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த - அகம் 357/1

மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே - நற் 2/6

யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கைய/வண்ண துய்ம் மலர் உதிர - குறு 380/5,6
இண்டை
இண்டை
ஈங்கை பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண் எம்மான் காண் கைம்மாவின் உரி போர்த்தான் காண் - தேவா-அப்:2614/1

வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல் - திருப்:800/3

ஈங்கையும் இலவும் தேம் காய் நெல்லியும் - உஞ்ஞை:52/43

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *