Skip to content

சொல் பொருள்

(வி) 1. மீதியாக இரு, மிஞ்சு, 2. கெடு, 3. நீங்கு, பிரி, 4. குறை, குன்று, 5. வரம்புகட, 6. இற, 7. ஒழி, முடிவுறு, 8. தனக்குப் பின் உரிமையாக வை,  9. நிலை, நீடித்திரு

சொல் பொருள் விளக்கம்

1. மீதியாக இரு, மிஞ்சு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

remain, be left over, be marred, be impaired, leave, part with, diminish, be deficient, transgress, go beyond, overstep, die, cease, refrain from doing something, leave behind, as to one’s heir, abide, survive

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது என்று – குறி 206,207

விருந்தினர் உண்டு மீந்துபோன உணவை, உயர்ந்த குணநலமுடைய பெண்ணே,
உன்னோடு (நான்)உண்பதும் உயர்ந்ததேயாம்”, என்று கூறி,

உள் நின்ற நோய் மிக உயிர் எஞ்சு துயர் செய்தல் – கலி 60/6

உள்ளே இருக்கும் காமநோய் மிகும்படி அவரின் உயிர் போகும் துயரைச் செய்தல்

எழில் எஞ்சு மயிலின் நடுங்கி சேக்கையின் – கலி 137/6

பீலி இழந்து அழகு அழிந்த மயிலைப் போல் நடுங்கி,

மாலையும் அலரும் நோனாது எம்_வயின்
நெஞ்சமும் எஞ்சும்-மன் தில்ல எஞ்சி
உள்ளாது அமைந்தோர் உள்ளும்
உள் இல் உள்ளம் உள்ளுள் உவந்தே – கலி 118/22-25

இந்த மாலைப்பொழுதையும், ஊராரின் பழிச்சொற்களையும் பொறுக்கமாட்டாமல் எம்மிடம்
நெஞ்சம் இன்னமும் எஞ்சியிருக்கிறதே! நம்மைப் பிரிந்து
நம்மை நினையாமல் பிரிந்திருப்போரை நினைத்துக்கொண்டிருக்கும்
உள்ளே உறுதியில்லாத உள்ளம் உள்ளுக்குள் உவந்துகொண்டு.
– நச். உரை; மா.இரா உரை
– எஞ்சி – ruined, leaving – Vaidehi Herbert

தம் துணை
துறையின் எஞ்சாமை நிறைய கற்று – பதி 90/3,4

தமக்குரிய அளவாக வகுக்கப்பட்ட
கல்வித்துறையின்கண் கற்பன குறைவுபடாது நிரம்பக் கற்று

இரக்கு வாரேன் எஞ்சி கூறேன் – பதி 61/11

உன்னிடன் இரந்து வரவில்லை; உன்னை மிகைபடக் கூறமாட்டேன்

வெம் சின யானை வேந்தனும் இ களத்து
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் என – புறம் 307/11,12

வெவ்விய சினமுள்ள யானையையுடைய வேந்தனும் இக்களத்தில்
இறத்தலினும் சிறந்த செயல் ஒன்று வேறு யாதும் இல்லை என்று கருதி
– ஔ.சு.து.உரை

அம்_சில்_ஓதி ஆய் வளை நெகிழ
நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம் வாழி தோழி – குறு 211/1-3

அழகிய, சிலவான முடிந்துவிட்ட கூந்தலையுடைய உனது ஆய்ந்தணிந்த வளைகள் நெகிழும்படி
வருந்தியும் நமக்கு அருளைச் செய்யாமல் பிரிந்துசென்றவரின் பொருட்டாக அஞ்சுதலைத்
தவிர்ந்தோம், வாழ்க தோழியே!,
– எஞ்சினம் – தவிர்ந்தேம் – பொ.வே.சோ.உரை விளக்கம்

நின்ற துப்பொடு நின் குறித்து எழுந்த
எண் இல் காட்சி இளையோர் தோற்பின்
நின் பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையே
அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின்
இகழுநர் உவப்ப பழி எஞ்சுவையே – புறம் 213/14-18

நிலைபெற்ற வலியோடு நின்னைக் கருதிப் போர்செய்தற்கு எழுந்த
சூழ்ச்சியில்லாத அறிவுடைய நின் புதல்வர் தோற்பின்
நினது பெருன்ம் செல்வத்தை அவர்க்கொழிய யாருக்கு விட்டுச்செல்வாய்
போரை விரும்பிஅய செல்வனே! நீ அவர்க்குத் தோற்பின்
நின்னை இகழும் பகைவர் உவப்ப பழியை உலகத்தே நிலைநிறுத்துவை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *