Skip to content
எண்கு

எண்கு என்பது கரடி

1. சொல் பொருள்

(பெ) கரடி

2. சொல் பொருள் விளக்கம்

கரடியின் பெயர் சங்க நூல்களில் எண்கு என்றே வழங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது … தெலுங்கு மொழியில் கரடியை ‘ எலுகு’ என்று வழங்குகின்றனர். இச்சொல் சங்ககாலச் சொல்லான எண்கு என்பதன் மறு உருவமே. (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 211.) சங்க இலக்கியத்தில் கரடியைப்பற்றிச் சில செய்திகள் காணப்படுகின்றன. கரடி என்ற பெயர் சங்க இலக்கியத்தில் வழங்கவில்லை . எண்கு , உளியம் பெயர்களே கரடியின் பெயர்களாக வழங்கின. தெலுங்கு மொழியில் கரடியை எலுகு என்று வழங்குகின்றனர் . இச்சொல் சங்க காலச் சொல்லான எண்கு என்பதன் மறு உருவமே . கரடியின் சங்க காலப் பெயர் தெலுங்கில் இன்றும் காணப்படுவது வியப்பே . பாறைகளின் இடுக்குகளிலும் வெடிப்புக்களிலும் வெயிற்கும் மழைக்கும் பாதுகாப்பாகக் கரடிகள் வாழ்வதாகக் கூறுவர் . குன்றத்துக் கவான் (அகம் , 201) , மலைச் சுரநீளிடை (நற்றிணை , 192) வரை சேர் சிறுநெறி (நற்றிணை , 336) ஆகிய சூழலில் கரடிகள் காணப்பட்டதாகச் சங்க நூல்கள் கூறுகின்றன.

எண்கு
எண்கு

கரடியின் மயிர் பெரிதாக நீண்டு காணப்படுவதால் ( Long shaggy and coarse hair) ” எண்கின் பரூஉமயிர் ஏற்றை ” என்று (நற்றிணை , 325 ) கூறுகிறது . இதன் வலிமை பொருந்திய கையைப் பற்றிச் சங்க நூல்கள் , பெருங்கை யேற்றை ( அகம் , 8) ” பெருங்கை எண்கு ( அகம், 144 , 201 , 307) , வண்கையெண்கு ( அகம் , 15 ) என்று குறிப்பிடுகின்றன . கரடியின் முன்கால்களில் நகங்கள் ( Long and large claws ) நீண்டு தந்தம் போல் காணப்படும் . கரடியின் முன் கால்களைக் கை என்று சங்க நூல்கள் அழைக்கின்றன . இரவில் கோட்டான் குரலிடும் வேளையில் , புலி திரியும் நேரத்தில் கரடி கத்தியதாகச் சிலம்பில் கூறப்பட்டிருக்கின்றது .”மாரி எண்கின் மலைச்சுர நீளிடை ” — நற்றிணை , 192 மாரிக் காலத்தில் வைகறைப் பொழுதிலேயே ஆட்டு மந்தைகளைப் போல கரடிகள் இரை தேடிய தாகக் கூறியிருப்பது கவனிக்கத் தக்கது .

–சிலம்பு . 13 – புறஞ்சேரியிறுத்த காதை . வரி 4-5 . சிலப்பதிகாரத்தில் கரடிகள் புற்றை அகழும் பழக்கம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது .கறையான் புற்றைக் கரடிகள் விரும்பித் தோண்டுவதையும் அழிப்பதையும் சங்க நூல்கள் தெளிவாகக் கூறுகின்றன . மின் மினிப் பூச்சிகள் மொய்த்த கறையான் புற்றில் குறும்பி தோண்டும் கரடி இரும்பை அடிக்கும் கொல்லனைப் போல் தோன்றியதாகக் கூறியது அழகிய உவமை . இரும்பைக் காய்ச்சி அடிக்கும்போது தெறிக்கும் நெருப்புப் பொறி மின்மினிப் பூச்சிக்கு ஒப்பிட்டது மிகவும் பொருத்தமாகும்.

எண்கு
எண்கு

புற்றுக்குள் இருக்கும் இரையைத் தேடிப் புற்றைத் தோண்டியதாகக் கூறியுள்ளனர் . புற்றத்துக்குள் இருந்த கறையான் புழுக்கள் , முட்டைகள் ஆகியவற்றை “ புற்றத்து ஒடுங்கிரை ” புற்றத்து அல்கிரை ” என்றும் , குறும்பி , குறும்பி வல்சி என்றும் கூறியுள்ளனர் . காதுக்குள் இருக்கும் அழுக்கை இக்காலத்தில் குரும்பி என்று வழங்குவர் . புற்றுக்குள் இருக்கும் இரையைக் குறிக்கச் சங்க காலத்தில் இச்சொல் வழங்கியது. ஊது உலையில் காற்று புகுந்து வெளிவரும்போது உண்டாகும் ஒலிபோல் ஓசை செய்து தோண்டி இரை தேடியதாக அகம் , 81 ஆம் பாடல் கூறுவதைக் கூர்ந்து கவனிக்கவும் . கொல்லனுடைய ஊது உலை மூக்கில் வரும் ஓசை போலக் கரடி உள்ளுயிர்த்து ( sucking ) அகழ்ந்ததாக நற்றிணை , 125 ஆம் பாடல் கூறுகின்றது .

கரடிகள் விரும்பும் மற்றோர் உணவு இலுப்பையின் பூவாகும் . மார்ச்சு – ஏப்ரலில் இலுப்பை மரம் பூத்துப் பூக்களை நிறைய உதிர்க்கின்றது . இலுப்பை மரத்தடியில் தடித்த இதழ்களையுடைய இலுப்பைப் பூக்கள் கம்பளம் விரித்தாற் போன்று கிடக்கும் . இப்பூக்களை விரும்பிக் கரடிகள் கூட்டம் கூட்டமாக வரும் . ஈனல் எண்கின் இருங்கிளை என்று குட்டிகளை ஈன்ற கரடிக் கூட்டம் இலுப்பைப் பூவை உண்டதாகக் கூறப்பட்டுள்ளது . கூட்டமாக உண்ணும் வழக்கை இருங்கிளை , ஈரினம் , எண்கினம் என்ற சொற்கள் குறிப்பிடுகின்றன . ஆடு பரந்தன்ன எண்கின் ( அகம் , 331 ) “ உருவத் துருவின் நாள்மேயல் ஆரும் ” ( நற்றிணை , 192) என்று வரும் வரிகளில் கரடிகள் ஆட்டு மந்தை போல் மேய்வது கூறப்பட்டுள்ளது .கரடிகள் மரத்தில் நன்றாக ஏறக் கூடியன . அகநானூறு 331 ஆம் பாடல் இலுப்பையின் பூவை சேடு சினையில் உருவி உண்டதாகக் கூறியிருப்பதைக் காணலாம் .-அகம் , 171 கீழே கிடந்த இலுப்பையின் பூக்களை உண்ணாது மேல் கிளைகளில் பழம்போல இனிப்பாக இருந்த இலுப்பைப் பூவை உண்பதற்காக மேலே ஏறியதாக அக நானூறு கூறுவது அரிய செய்தியாகும் . மெதுமெதுவாக மரத்தில் கரடி ஏறுவதையே ஊரும் என்ற சொல் குறிப்பிடுகின்றது .

இலுப்பையின் பழத்தையும் கரடி உண்ணும் என்பதை ” ஓங்கு சினை இருப்பைத் தீம்பழம் முனையின் ” என்ற அகநானூற்றுப் பாடல் வரி குறிப்பிடுகின்றது . ” கொன்றை யஞ்சினைக் குழற்பழங் கொழுதி , வண்கை யெண்கின் வயநிரை பரக்கும் அகநானூறு கொன்றைப் பழத்தைக் கரடி விரும்பி உண்பதைப் பற்றிக் கூறுகின்றது .

கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி என்று கூனிய முதுகையுடைய கரடி குறுகக் குறுக அடியிட்டு நடக்கும் நடை என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்த திறமை போற்றத்தக்கது . கரடி கருநிறமாகக் காணப்பட்டதை இருங்கிளை ” என்றும் ” ஈரினம் என்றும் கூறினார் . கரடியின் குட்டிகள் இளம்பருவத்தில் நன்றாகக் கருப்பாக இருக்கும் . இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளை என்று பொருத்தமாகவும் அழகாகவும் கரடிக் குட்டியைக் கூறினர் . மனிதர்கள் வாழ்ந்து விட்டு விட்ட பாழ் வீடுகளிலும் கடவுளுக்கான பாழடைந்த அம்பலத்திலும் கரடிகள் காணப்பட்டதாகக் கூறியிருப்பதும் உண்மையே .

எண்கு
எண்கு

கரடியின் பெயர் சங்க நூல்களில் எண்கு என்றே வழங்கி யிருப்பது குறிப்பிடத்தக்கது . பத்துப் பாட்டிலும் சிலப்பதிகாரத்திலும் எண்கு என்றும் , உளியம் என்றும் அழைக்கப் படுகின்றது . உரையாசிரியர்கள் காலத்தில் கரடி என்று வழங்கப்பட்டிருக்கின்றது .” ஊமை யெண்கின் குடாவடிக் குருளை ” என்று வரும் மலைபடுகடாம் (501 ) வரியில் குடாவடிக் குருளை என்று கூறியிருப்பதைக் கவனிக்கவும் . குடா என்ற சொல் பிள்ளைக் கரடியைக் குறிப்பதானால் குருளை என்ற சொல் கண் திறவாக் குட்டியைக் குறித்திருக்கலாம் . குடாவடி என்பது சிலப்பதிகாரத்திலும் மலைபடுகடாமிலும் கரடியின் குட்டியைக் குறித்தே வழங்கியிருப்பதைக் கவனித்தால் இது கரடிக் குட்டிக்கு வழங்கிய திசைச் சொல் என்றே தெரிகின்றது .கரடிக் குட்டிக்குத் தெலுங்கு மொழியில் குட்டெலுகு என்று பெயர் வழங்குகின்றது . குடா எலுகு என்பது குட்டெலுகு என மாறியிருக்கலாம் . எலு என்ற சொல் நிகண்டுகளில் கூறப்பட்டுள்ளது . ஆதலின் குடாவடி என்ற சொல் கரடியின் குட்டியைக் குறிக்கும் திசைச்சொல் என்பது பொருத்தமான தாகும். இந்தத் திசைச் சொல்லே தெலுங்கு நாட்டில் வழங்கியிருக்கலாம் கிளிக்குக் கூறப்பட்ட தத்தை என்ற திசைச்சொல் மலை யாளத்தில் வழங்குவது காண்க . கரடி என்ற பிற்காலச் சொல் அது வாழும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கிய பெயராகத் தோன்றுகின்றது .கரடு என்ற சொல் பாறைகளும் பெருங் கற்களும் நிறைந்த வறட்சியான நிலத்திற்கு வழங்கும் .

உளியம்
எண்கு

அத்தகைய கரடு நிலத்தில் வாழும் விலங்கை, கரடு நிலத்திற்குரியதாகக் கருதிய விலங்கைக் கரடி எனப் பெயரிட்டழைத்ததாகத் தெரிகின்றது . மலையாளத்தில் இதைப் பன்றிக் கரடி என்று அழைப்பர் . பன்றி போன்று நீண்ட முகமும் நிலத்தை அகழுந்தன்மையும் இருப்பதன் காரணமாக இப்பெயர் வந்தது போலும். பிங்கலந்தை நிகண்டில் மிளிறு என்ற பெயர் கரடிக்குச் சொல்லப் பட்டுள்ளது . பாறைகளைப் புரட்டிப் பார்த்து உணவு தேடுவதால் ( Rocks displaced ) மிளிர்க்கும் விலங்குக்கு மிளிறு என்ற பெயர் வந்தது . தமிழ் நாட்டில் வாழும் கரடி இமயமலைக் கரடியிலிருந்தும் வேறானது . இக் கரடி இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டும் காணப்படுகின்றது .

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

bear, melursus ursinus, sloth bear

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை – நற் 125/1

இரையைத் தேடித்திரியும் கரடியின் பிளந்த வாயையுடைய ஆணானது

ஊமை எண்கின் குடா அடி குருளை – மலை 501

மாரி எண்கின் மலை சுர நீள் இடை – நற் 192/5

கவி தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை – நற் 325/1

வன் கை எண்கின் வய நிரை பரக்கும் – அகம் 15/16

ஈனல் எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 95/9

கூனல் எண்கின் குறு நடை தொழுதி – அகம் 112/1

பெரும் கை எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 149/4

பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை – அகம் 201/16

இரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை – அகம் 247/4

பெரும் கை எண்கின் சுரன் இறந்தோரே – அகம் 171/15

பிள்ளை எண்கின் மலை வயினானே – அகம் 257/21

மயிர் கால் எண்கின் ஈர் இனம் கவர – அகம் 267/8

குருளை எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 275/12

ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின்/தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் – அகம் 331/3,4

இரை தேர் எண்குஇனம் அகழும் – நற் 336/10

பெரும் கை எண்குஇனம் குரும்பி தேரும் – அகம் 307/10

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *