Skip to content
கடமா

கடமா என்பது கலைமானினத்தில் மிகப் பெரியது

1. சொல் பொருள்

(பெ) ஒரு வகை கலைமான், கலைமானினத்தில் மிகப் பெரியது கடமானாகும்.

2. சொல் பொருள் விளக்கம்

கலைமா ( Deer ) னினத்தைச் சேர்ந்த வேறொவகை மான் கடமா என்பதாகும். இந்த மான் காடுகள் நிறைந்த குன்றின் சாரல்களிலும், வயல் வெளிகளுக்கு அண்மையிலும் வாழும் . கலைமானினத்தில் மிகப் பெரியது கடமானாகும்

கடமா
கடமா

எற்படு பொழுதி னினந்தலை மயங்கிக்
கட்சிக் காணாக் கடமா னல்லேறு
மடமா னாகுபிணை பயிரின் விடர் முழை
இரும்புலிப் புகர்போத் தோர்க்கும்
பெருங்க னாடனெம் மேறைக்குத் தகுமே – புறம் , 157 .

வெட்சிக் கானத்து வேட்டுவ ராட்டக்
கட்சி காணாக் கடமா நல்லேறு – புறம் , 202

கல்லென் கானத்துக் கடமா வாட்டி
எல்லு மெல்லின்று ஞமலியு மிளைத்தன – குறுந்தொகை , 179 .

கடமை மிடந்த துடவையஞ் சிறுதினைத்
துளரெறி நுண்டுகட் களைஞர் தங்கை – குறுந்தொகை 392.

கள்ளியங் காட்ட கடமா விரிந்தோடத் – திணைமாலை நூற்றைம்பது , 84

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை –நாலடி , 300 -10

கடமா
கடமா

மேலே காட்டிய ஒரு சில சங்கநூற் பாடல்களில் தான் கடமா கூறப்பட்டிருக்கின்றது . கடமா மலைப்பகுதியில் கானத்தில் வாழ்வதாகக் கூறப்படுகின்றது . கடமா சிறு சிறு மந்தையாகக் காணப்படும் என்பர் . ஒவ்வொரு மந்தையிலும் ஒருசில பெண்மான்களும் ஓர் ஏறும் காணப்படும் . இதையே இனந்தலை மயங்கிய கடமா னல்லேறு ” என்று கூறுவதில் உணர்ந்து கொள்ளலாம். கடமை மிடைந்த துடவையஞ் சிறுதினை சொல்லியிருப்பதைக் கொண்டு கடமா விளைநிலத்தில் புகும் என்று விலங்கு நூலார் கூறுவதைச் சங்கப்புலவர்கள் அறிந்திருந்தனரெனத் தெரிகின்றது . கடமானிற்கு எதிரி புலியாகுமென்பர் . கடமானேறு தன் இனத்தை அழைக்கும் குரலைப் புலிப் போத்துக் கேட்கும் என்று புறம் 157 ஆம் பாடல் கூறுகின்றது . இந்த நிகழ்ச்சியை வேட்டையாளர் பலர் நேரில் கண்டுள்ளனர் .

கடமான் குரலைக் கேட்டுப் புலி இரவில் வேட்டையாடச் செல்வதைக் கவனித்து வேட்டையாளர் புலியையே வேட்டையாடுவதுண்டு. கடமானைக் கொன்ற புலியை நாலடியாரும் கூறியுள்ளது . கடமாவை விரும்பிக் கானவர் வேட்டை யாடுவதாகவும் கடமா அலைக் கழிக்கப் படுவதாகவும் கூறியுள்ளனர் . கடமா அடர்ந்த காடுகளில் காணப்படுவதால் கடமாவைக் காட்டில் கண்டுபிடித்து வேட்டையாட மோப்ப சக்தியுடைய வேட்டை நாய்களைப் பயன்படுத்துவது இன்றும் வேட்டையாளர் கைக்கொள்ளும் வழக்கம் . குறுந்தொகைப் பாடல் ( 179 ) கடமானை அலைக்கழித்துச் சோர்வுற்ற வேட்டை நாய்களைப் பற்றிக் கூறியிருப்பதைக் காண்க. கட்சி காணக் கடமா னல்லேறு புறநானூற்றுப் பாடல் 157 – ம் , 202- ம் கூறுவதன் பொருளைப் பலரும் உணர்ந்திலர் .

கடமா
கடமா

கடமானின் ஆண்கள் காட்டில் தங்களுக்கென்று உரிமை இருப்பதுபோல வைத்துக்கொள்ள இடத்தைத் தேடிப் போரிட்டு இடம் பிடித்துக் கொள்வதுண்டு என்பதை விலங்கு நூலார் கண்டுள்ளனர் . ( The males fight for territory . Each stag fights to obtain sole rights over same favoured Valley. The victor becomes the master of the hind which enters it . The Stag s harem is limited to a few hinds ) இம்முறையாக இடந்தேடிக் கொண்ட கடமாவின் ஆணிற்குரிய காட்டுப்பகுதியையே கட்சி என்று சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன .

கட்சி என்றால் பறவைகள் தங்கும் ஆடு என்றும் பொருள் உண்டு . கடமா ஏறு தனக்குரியதாக ஆக்கித் தங்கும் காடும் கட்சி எனப்படும் . இனம் இனமாகக் காணும் கடமான் கூட்டத்தில் மயங்கிய கடமான் நல்லேறு ( Master of binds ) இருள்வரும் நேரத்தில் தன்னுடைய ” கட்சி ” ( Territory ) தெரியாது மயங்கியதாகப் புறம் 157 ஆம் பாடல் கூறியதைக் காணலாம் . வேட்டுவர் வெட்சிக் காட்டில் அலைக்கழித்ததால் தன்னுடைய கட்சியைக் காணாது கடமா நல்லேறு மயங்கியதாக மற்றொரு புறப்பாடல் கூறுவதையும் காணலாம்.

கடமா
கடமா

கட்சி என்ற சொல் அரிய அறிவியற் சொல்லாகச் சங்க நூல்களில் வழங்குவதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும் . இனம் இனமாக 5 முதல் 10 வரை கடமை மான்கள் காணப்படுவதாகக் கூறுவர் . இனந்தலை மயங்கி என்று கூறப்பட்டிருப்பதைக் காண்க . கலைமான் இறைச்சிக்காக மனிதர் நாய்களை வைத்து வேட்டையாடிக் கொன்று உண்பர். இயற்கையாக அமைந்த காவற்காடுகளில் காணப்பட்டதால் மிளையில் காணப்பட்ட விலங்கை மிளா என்றழைத்தனர். கடமை என்றும் கடமான் என்றும் தற்காலத்தில் அழைப்பர் . கன்னடத்தில் கடத்தி என்றழைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய மான் கடமாவாகும் . இதைக் காட்டுமான் என்றும் கூறுவர் . விலங்கு நூலார் கடமானை Rusa uniccler nigar என்று அழைப்பர் .

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Sambar deer, Rusa unicolor niger

கடமா
கடமா

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கல்லென் கானத்து கடமா ஆட்டி
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன – குறு 179/1,2

கல்லென்ற ஓசையிடும் காட்டினில் காட்டுமாடுகளை விரட்டி
பகற்பொழுதும் இருளாகிவிட்டது; வேட்டைநாய்களும் இளைத்துவிட்டன

கடமா
கடமா

கட்சி காணா கடமா நல் ஏறு – புறம் 202/2

வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை – மலை 175

கட்சி காணா கடமான் நல் ஏறு – புறம் 157/10

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *