Skip to content
கணையன்

கணையன் ஒரு சங்ககாலச் சிற்றரசன்

1. சொல் பொருள்

(பெ) ஒரு சங்ககாலச் சிற்றரசன்.

கணையர் – மலையில் வாழும் பழங்குடியினர். இவர்கள் வில் போர் புரிவதில் வல்லவர்கள்.

2. சொல் பொருள் விளக்கம்

சோழன் பெரும்பூண் சென்னியை எதிர்த்துப் போரிட்டவர் எழுவர் இந்த எழுவர் கூட்டணியில் கணையன் என்பவனும் ஒருவன். இக்கூட்டணி போரில் சோழர் படைத்தலைவன் பழையனைக் கொன்றது. பின்னர் பெரும்பூண் சென்னியே தலைமையேற்று போரிட்டபோது எழுவர் கூட்டணியில் அறுவர் தப்பி ஓடிவிட்டனர். கணையன் மட்டும் அகப்பட்டுக்கொண்டான். அவன் சோழநாட்டுக் கழுமலச்சிறையில் அடைக்கப்பட்டான். சோழனை எதிர்த்த எழுவரும் சேரன் படைத்தலைவர்கள், கணையன் சேரன் தலைமைப் படைத்தலைவன் என்பார் நாட்டார் தம் உரையில்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a chieftain of sangam period, A king who came from tribal tradition who use to live in mountain, hill region and are good at Archery.

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என
கண்டது நோனான் ஆகி திண் தேர்
கணையன் அகப்பட கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர் – அகம் 44/7-15

நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,
பருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக,
அதனைக் கண்டு பொறுக்காதவனாகி, திண்ணிய தேரையுடைய
கணையன் என்பானை அகப்படுத்தி, கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய
பிணைப்புள்ள அழகிய கண்ணியையும், மிகுந்த அணிகலன்களையும் அணிந்த சென்னியின்
அழும்பில் என்ற ஊரை ஒத்த, குறையாத புதுவருவாயையுடைய

கணையர்
கணையர்

பொய்கை நீர்நாய் புலவு நாறு இரும் போத்து
வாளை நாள் இரை தேரும் ஊர
நாணினென் பெரும யானே பாணன்
மல் அடு மார்பின் வலி உற வருந்தி
எதிர் தலைக்கொண்ட ஆரிய பொருநன்
நிறை திரள் முழவு தோள் கையகத்து ஒழிந்த
திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர்
கணையன் நாணிய ஆங்கு மறையினள்
மெல்ல வந்து நல்ல கூறி
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின்
சேரியேனே அயல் இலாட்டியேன்
நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை
தொடு மணி மெல் விரல் தண்ணென தைவர
நுதலும் கூந்தலும் நீவி
பகல் வந்து பெயர்ந்த வாள்நுதல் கண்டே – அகம் 386

பொய்கையிலுள்ள நீர்நாயின் புலால் நாறுகின்ற பெரிய ஆண்
வாளைமீனை நாள்காலை உணவுக்காகத் தேடித்திரியும் ஊரையுடைய தலைவனே!
நான் பெரிதும் நாணமுற்றேன், பெருமானே! பாணன் என்பவனின்
மற்போர் செய்யும் மார்பின் வலிமை மிகுதலால் வருந்தி
அவனுடன் எதிர்த்து மற்போர் செய்வதை மேற்கொண்ட ஆரியனாகிய வீரன்
அப் பாணனின் ஆற்றல் மிக்க திரண்ட மத்தளம் போன்ற தோளையுடைய கையினுள் அகப்பட்டு உயிர் போனதால்
தன் தன்மை வேறுபட்டுப் பிணமாகிக் கிடக்கும் நிலையைப் பார்த்து நல்ல போர்த்தொழிலையுடைய
கணையன் என்பவன் நாணியது போல, மறைவாக
மெல்ல வந்து இனிய மொழிகளைக் கூறி
“மை போன்ற கரிய கூந்தலையும் இளமையையும் உடைய பெண்ணே! நானும் உன்னுடைய
சேரியில் உள்ளவளே! உனக்கு அண்டை வீட்டில்தான் இருக்கிறேன்,
உனக்குத் தங்கை ஆவேன்” என்று சொல்லி, தன் கையின்
மணி பதித்த மோதிரம் அணிந்த மெல்லிய விரலால் உடல் குளிரும்படி தடவிக்கொடுத்து
நெற்றியினையும் கூந்தலையும் நீவிவிட்டு
பகற்பொழுதில் வந்துபோன ஒளிபடைத்த நெற்றியினையுடைய உன் பரத்தையைக் கண்டு

கணையர் கிணையர் கை புனை கவணர்
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட – நற் 108/4

அம்புகளோடும், கிணைப்பறையோடும், கையில் கட்டப்பட்ட கவண்களோடும்
பிறரை உரக்க அழைப்பவராய் தமது குடியின் புறத்தே ஆரவாரிக்கும் நாட்டினனே!

கணையோர் அஞ்சா கடுங்கண் காளையொடு
எல்லி முன் உற செல்லும்-கொல்லோ – அகம் 321/12

அம்பினை எய்யும் ஆறலைக் கள்வருக்குப் பயப்படாத அஞ்சாநெஞ்சினனாகிய காளைபோன்றவனுடன்
இரவுநேரத்தில் அவனுக்கு முன்னால் நடந்து செல்வாளோ?

கணையர்
கணையர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *