கழுதை என்பது ஒரு விலங்காகும்
1. சொல் பொருள்
(பெ) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும். இது ஒரு தாவர உண்ணி.
2. சொல் பொருள் விளக்கம்
கழுதையும் சங்க காலத்தில் தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்ட பழகிய விலங்காகும் . கழுதை இன்றும் இந்திய நாட்டில் கட்ச் ( Cutch ) பகுதிகளில் பாலை வனத்தில் இயற்கையாக , பழக்கப்படாத நிலையில் வாழ் கழுதைகள் பழங்காலத்திலேயே பழக்கப்படுத்தப்பட்டு , பொதிசுமக்கும் விலங்காகப் பயன் படுத்தப்பட்டன .
பொறைமலி கழுதை நெடுகிரை தழீ இய
திருந்துவாள் வயவர் அருந்தலை துமித்த -அகம் , 89 .
நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக்
குறைக்குளம்பு உதைத்த கற்பிறழ் இயவின்
வெஞ்சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை -அகம் , 207 .
நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப்
புறகிறைப் பண்டத்துப் பொறையசாஅக் களைந்த -அகம் , 343 .
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி
வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும் – புறம் , 392 .
புணர்ப் பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்
தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கு
முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும் – பெரும்பாண் , 79 – 81 .
கழுதைகளை நிரையாக ஓட்டிச் சென்று பொதிசுமக்கப் பயன்படுத்தினர் . அரிய சுரங்களைக் கடக்கவும் சாத்தொடு செல்லவும் கழுதைகள் பயன்பட்டன . கழுதையின் நிறம் நரைப்புறம் ( grey back ) என்று கூறப்பட்டுள்ளது . கழுதையின் வாய் வெள்வாய் என்று சொல்லப்பட்டது பொருத்தமே . நெடுஞ்செவி , அணர்ச் செவி என்று கழுதையின் காது கூறப்பட்டதோடு குறுங்கால் என்றும் கழுதையின் கால்கள் குறிப்பிடப்பட்டது . பகைவர்களை வென்று அவர் நிலத்தைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பின்னர்க் கொள்ளும் வரகும் விதைத்து விடுதல் வழக்கம் என்பதையும் அறிகிறோம் . தொல்காப்பியர் காலத்திலேயே குதிரையும் கழுதையும் தமிழ் நாட்டில் நன்கு பழக்கப்பட்ட விலங்குகளாக இருந்தன . ஆதலின் மரபியலில் இவற்றிற்குரிய பெயர்கள் விளக்கப்பட்டுள்ளன . குறிப்பாகக் குதிரையுள் ஆணிற்கு சேவல் என்ற பெயர் வழங்கும் தொல்காப்பியம் கூறுவதைக் கவனிக்க வேண்டும் .
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும் – பெரும் 80
நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி – பதி 25/4
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய – அகம் 89/12
நிரை பர பொறைய நரை புற கழுதை/குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின் – அகம் 207/5,6
நெடும் செவி கழுதை குறும் கால் ஏற்றை – அகம் 343/12
வெள் வாய் கழுதை புல்இனம் பூட்டி – புறம் 15/2 வெள் வாய் கழுதை புல்இனம் பூட்டி – புறம் 392/9
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது