Skip to content

1. சொல் பொருள்

(வி) 1. நுகர், அனுபவி, 2. கிளைபடு, பிரிந்துசெல்,  3. தெறி, மீட்டு, 4. பற்றிக்கொள், அகப்படுத்து, 5. அழை, 6. பெற்றுக்கொள், 7. வசப்படுத்து, ஈர், 8. விரும்பு,  9. கொள்ளையிடு, 10. தழுவு,

2. (பெ) 1. கவர்தல், 2. ஒரு வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்காலைக் ‘கவர்’ என்பது உழவர் வழக்கம்

2. சொல் பொருள் விளக்கம்

ஒரு வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்காலைக் ‘கவர்’ என்பது உழவர் வழக்கம். ஒரு பனை மேலே இரண்டாகப் பிரிந்து செல்லுதலால் கவர்பனை என்னும் பேரும் ஊரும் பெரம்பலூர் வட்டாரத்தில் உண்டு. கவர்த்தல், பிரிதல்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

enjoy, experience, bifurcate, fillip the strings of lute, seize, grasp, catch, call, invite, take, receive, attract, fascinate, desire, plunder, pillage, embrace, seizing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது
கொங்கு கவர் நீல செம் கண் சேவல் – சிறு 184

முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்
தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணையும் உடைய வண்டுகள்

கா எரி_ஊட்டிய கவர் கணை தூணி – சிறு 238

(காண்ட)வனத்தை நெருப்புண்ணச்செய்த கிளைபட்ட கணையைக் கொண்ட அம்பறாத்தூணியையுடைய

நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கை கவர் நரம்பின் இம்மென இமிரும் – குறி 146,147

நட்டராகம் முற்றுப்பெற்ற பாலை யாழை வாசிப்பதில் வல்லவன்
(தன்)கையால் தெறித்த நரம்பு போல, இம்மென்னும் ஓசைபட ஒலிக்கும்

மீமிசை கொண்ட கவர் பரி கொடும் தாள்
வரை வாழ் வருடை – மலை 502,503

மலையுச்சியில் பிடித்த (நிலத்தைப்)பற்றிக்கொண்டு ஓடும் வளைந்த கால்களையுடைய
மலையில் வாழும் மலையாடும்,

கான கோழி கவர் குரல் சேவல் – மலை 510

காட்டுக்கோழியை அழைக்கும் கூவலொலியுடைய சேவலும்,

புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு
கவர் படு கையை கழும மாந்தி – நற் 60/5,6

உண்ணுதற்குரிய அரிசியை வேகவைத்த மிக்க சோற்றுடன்
பெற்றுக்கொண்ட கையையுடையவராய் வாய் கொள்ள உண்டு,

காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
கண் கவர் வரி நிழல் வதியும் – நற் 256/9,10

வயிரம் பாய்ந்த வேலமரத்தின் தாழ்ந்த கிளைகள் கொடுத்த
கண்ணை ஈர்க்கும் வரிகள்கொண்ட நிழலில் தங்கியிருக்கும்

கவர் பரி நெடும் தேர் மணியும் இசைக்கும் – நற் 307/1

செல்லுதலை விரும்பும் குதிரை பூட்டிய நெடிய தேரின் மணியும் ஒலிக்கும்;

முனை கவர் முதுபாழ் உகு நெல் பெறூஉம் – நற் 384/5

போர் முனையில் கொள்ளையிட்டதால் முதிரப் பாழ்பட்டுப்போன நிலத்தில் சிந்திக்கிடக்கும்
நெல்மணியைக் கொத்திக்கொணரும்

மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் – ஐங் 337/2

மெய்யோடு மெய் சேரும்படி விரும்பிக் கைகளினால் தழுவிக்கொண்ட அணைப்பைக் காட்டிலும்

இரும்பு கவர் கொண்ட ஏனல் – நற் 194/9

இரும்பாலாகிய அரிவாளால் கவர்ந்துகொள்ளப்போகும் தினையின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *