Skip to content

சொல் பொருள்

(பெ) மேகலை, கொலுசு போன்ற அணிகலன்களில் கோக்கும் உலோகத்தாலான
உருண்டைகள் அல்லது வட்டங்கள்

சொல் பொருள் விளக்கம்

சங்க இலக்கியத்தில் காசு என்ற சொல்லைப்பற்றிய குறிப்புகள் 14 இடங்களில் கிடைக்கின்றன.
இந்தக் குறிப்புகளினின்றும் கிடைக்கும் செய்திகள்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

globules or coin shaped metal parts strung with the girdle.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காசு என்பது பெண்கள் தம் இடுப்பில் அணியும் மேகலையில் கோக்கப்பட்டிருக்கும்.

1. பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல் – புறம் 353/2

2. பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16

3. காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் – நற் 66/9

4. பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் – ஐங் 310/1

5. உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை
பொலம் காழ் மேல் – கலி 85/3

6. பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் – அகம் 75/19

7. பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் – அகம் 269/15

அல்குல் என்பது இடுப்பைச் சுற்றி, இடுப்புக்கும் சற்றுக் கீழான பகுதி.

பார்க்க : மேகலை

இந்த மேகலையில் காசுக்கள் கோக்கப்பட்டிருந்தன.

இந்தக் காசுகள் முட்டை வடிவில் அல்லது உருண்டை வடிவில் இருந்தன.

இழை_மகள்
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் – நற் 274/3-5

அணிகலன் அணிந்த ஒரு பெண்ணின்
பொன்னால் செய்யப்பட்ட காசு போன்று ஒள்ளிய பழங்கள் உதிரும்
குமிழமரங்கள் செறிந்துவளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகளில்
எனவே, இந்தக் காசுகள் குமிழம்பழம் உருவில் இருந்தன.
குமிழ் என்றாலே உருண்டை என்று பொருள்.
பார்க்க – காசு – குமிழம்பழம் –

கணை அரை
புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய்
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப
பொலம் செய் காசின் பொற்ப தாஅம் – அகம் 363/5-8

திரண்ட அடிமரத்தையும்
சிறிய இலையினையும் உடைய நெல்லியின் வடு அற்ற பசிய காய்கள்
கற்களையுடைய நெறிகளில் கடிய காற்று உதிர்த்தலால்
பொன்னால் செய்த காசுப் போல அழகுறப் பரவிக்கிடக்கும்.
இந்தக் காசுகள் பொன்னால் செய்யப்பட்டவை.

அகநானூற்றில் இன்னோர் இடத்திலும் இதே போன்ற உவமையைக் காணலாம்.

புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி
கோடை உதிர்த்த குவி கண் பசும் காய்
அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப – அகம் 315/10-12

புறா துளைத்து உண்ட புல்லிய காய்களையுடைய நெல்லியின்
மேல்காற்று உதிர்த்திட்ட குவிந்த கண்ணினையுடைய பசிய காய்கள்
அறுந்து போன நூலிலிருந்த உருண்ட பளிங்கின் துளையிட்ட காசுகளை ஒப்ப

இந்தக் காசுகள் பளிங்கினால் செய்யப்பட்டவை.

பார்க்க – காசு – நெல்லி

நெல்லிக்காய்கள் துளையிட்ட காசுகளைப் போன்று இருந்தன என்ற ஒப்புமை எவ்வளவு
சரியாக இருக்கிறது என்று பாருங்கள்.

இந்தக் காசுகள் வேப்பம்பழம் போல் உருண்டு இருந்தன என்கிறது குறுந்தொகை.

கிள்ளை
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் – குறு 67/2-4

கிளியானது
தன் வளைந்த அலகில் கொண்டிருக்கும் வேம்பின் ஒளிவிடும் பழம்
புதிய நூலைக் கோக்கும்பொருட்டு முனை சிறந்த நன்றாக வளர்ந்த நகங்களில் கொண்ட
பொன் அணிகலத்தின் ஒரு காசினைப் போன்றிருக்கும்

பார்க்க – வேப்பம்பழம்

இந்தக் காசுகள் கொன்றையின் மொட்டுக்கள் போல் இருந்தன என்கிறது இன்னொரு குறுந்தொகைப் பாடல்

காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/3

காசைப் போன்ற மொட்டுக்களை ஈன்ற கொன்றை

பார்க்க – காசு – கொன்றை மொட்டு

சில காசுகள் மணிகளால் செய்யப்பட்டிருக்கும்.

குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி
மணி காசு அன்ன மால் நிற இரும் கனி
உகாஅ மென் சினை உதிர்வன கழியும் – அகம் 293/6-8

குயிலின் கண்ணைப் போன்ற நிறமுள்ள காய்கள் முற்றி
மணியினால் செய்யப்பட்ட காசுகளைப் போன்ற கரிய நிறத்திலான பெரிய கனிகள்
உகாவின் மெல்லிய கிளைகளினின்றும் உதிர்ந்து ஒழியும்.

சில காசுகள் வட்டமாகத் தட்டை வடிவிலும் இருந்திருக்கின்றன.

பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் – ஐங் 310/1

பொன்னாற் செய்த புதிய வட்டவடிவக் காசுகளை வரிசையாகக் கோத்த வடம் தவழும் அல்குலையும்

பாண்டில் என்பது வட்டம் என்ற பொருள் தரும். இது இன்றைய காசுமாலையை ஒக்கும்.

பார்க்க – காசு – பாண்டில்

பாண்டில் என்பது பெண்கள் அணியும் ஓர் அணிகலன் என்பார் பெருமழைப்புலவர் சோமசுந்தரனார்.
அப்படியெனில் பாண்டில் காசுவும் ஏனைய காசுகளைப் போல் உருண்டை வடிவினதாகவே இருந்திருக்கலாம்.

இதுவரை காசு என்பது பெண்கள் இடுப்பில் அணியும் மேகலையில் கோப்பது என்று அறிந்தோம்.
ஆனால் சிறுவர்கள் காலில் அணியும் கொலுசு என்ற கிண்கிணியிலும் காசுகள் கோக்கப்படும் என்று
குறுந்தொகை கூறுகிறது.

செல்வ சிறாஅர் சீறடி பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி
காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/1-3

செல்வர்களின் சிறுவர்களின் சிறிய கால்களில் அழகுற விளங்கிய
தவளையின் வாயைப் போன்ற பொன்னால் செய்த சதங்கையின்
காசைப் போன்ற அரும்புகளை ஈன்ற கொன்றை

பார்க்க – காசு – கிண்கிணி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *