Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வடம், கயிறு,  2. மரவைரம்,  3. கருமை, 4. கழி, 5. விதை, 6. கட்டுத்தறி,  7. மரத்தூண், 8. கைப்பிடி, காம்பு, 9. இரும்பு முள், 10. கட்டு, பிணிப்பு, 11. குறுந்தடி, 12. அங்குசம், 13. பூச்சரம், 14. முத்து,மணி,வடம், 15. துடுப்பு, 16. உள்ளீடு,  17. அரிசி, 18. இரும்புக்கம்பி, 19. சந்தன, அகில் கட்டை,

சொல் பொருள் விளக்கம்

வடம், கயிறு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

string, thread, hard core of timber, blackness, pole, rafter, seed, post to which a cow is tied, wooden pillar, handle, stem, sharp iron, tie, fastening, short stick, elephant goad, garland of flowers, garland of pearls, gems, oar, inner solidity, kernel, rice, iron rod, sandalwood or akil piece

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16

பல பொற்காசுகளை வரிசையாக அமைத்த சில வடங்களை அணிந்த அல்குலினையும்

நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்
நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 32,33

நுண்ணிய பூணையுடைய மார்பில் அசைய, திண்ணிய வயிரத்தையுடைய
நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை,

கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல் – சிறு 6

மயிர் விரித்ததை ஒத்த கருநிறத்தைக் கொண்ட நுண்ணிய கருமணல்,

காழ் சோர் முது சுவர் கண சிதல் அரித்த – சிறு 133

(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கரையான் அரித்துக் குவித்த

களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 130

களர் நிலத்தே வளர்ந்த ஈந்தின் விதையைக் கண்டாற் போன்று,

கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் – பெரும் 244

கட்டின நெடிய தாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும்,

திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம் – மது 449

திண்ணிய கொடிக்கம்பங்களில் ஏற்ற அகலத்தினையுடைய பெருங் கொடிகளை

காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கி – மது 739

காம்பினுள் செருகின வேல்களுடன் அம்புகளும் சென்று நிலைகுலைத்தலின் நிலைகலங்கி,

நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய – பட் 80

நீண்ட தூண்டிலில் இரும்பு முள் சேர்த்துவைக்கப்பட்ட

சிறை குவிந்து இருந்த பைதல் வெண்_குருகு
பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருள – நற் 312/4

சிறகுகளைக் குவித்துவைத்திருக்கும் துன்பத்தையுடைய வெள்ளைக் குருகாகிய
பார்வைப் பறவையை வேட்டுவன் கால்கட்டை நீக்கி அருள்செய்ய நின்ற

மாலை வெண் காழ் காவலர் வீச
நறும் பூ புறவின் ஒடுங்கு முயல் இரியும் – ஐங் 421/1,2

மாலை நேரத்தில் வெண்மையான வயிரம்பாய்ந்த குறுந்தடியைப் புனங்காவலர் ஓங்கி எறிய,
நறுமணமுள்ள பூக்களைக் கொண்ட முல்லைக் காட்டினில் பதுங்கியிருக்கும் முயல்கள் வெருண்டோடும்

தேம் பாய் கடாத்தொடு காழ் கைநீவி
வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல்
——— ———– – உன் களிறு – பதி 53/17-21

தேனீக்கள் மொய்க்கும் மதநீரோடு, பாகரின் குத்துக்கோலுக்கும் கைமீறிக்கொண்டு,
வேங்கை மரத்தைப் புலி என்று நினைத்து அழித்த வடுக்கள் அமைந்த புள்ளிகளையுடைய நெற்றியையுடைய,
——— ———– – உன் களிறு

நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – கலி 54/7,8

அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை
விரலில் ஒழுங்காகச் சுற்றி மோந்துபார்க்கவும் செய்தான்

கதவவால் தக்கதோ காழ் கொண்ட இள முலை – கலி 57/19

முனைப்பான கோபம் கொண்டனவாய் இருப்பது தகுமோ அந்த முத்துவடம் கொண்ட இள முலைகளுக்கு?

வணங்கு காழ் வங்கம் புகும் – கலி 92/47

வளைந்த துடுப்புகளை உடைய படகுக்குள் நுழைவாள்

அம் தூம்பு அகல் அமை கமம் செல பெய்த
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி – அகம் 253/15,16

அழகிய உள்துளையினையுடைய அகன்ற மூங்கில் குழாயில் நிறையுமாறு இட்டுத்
திணித்த உள்ளீடாகிய உணவை உட்கொள்பவரின் தொழுவாகிய அறையினைக் கவர்ந்து

சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி – அகம் 393/10,11

திரிகையில் திரித்து, சுளகினால் கொழிக்கப்பட்ட வெண்மையான அரிசியை
பூண் சிறந்த உலக்கையினால் மாறிமாறிக் குத்தி

கயத்து வாழ் யாமை காழ் கோத்து அன்ன – புறம் 70/2

குளத்தில் வாழும் ஆமைகளை இரும்புக் கம்பியால் குத்திக் கோத்ததைப் போல

தேய்வை வெண் காழ் புரையும் – புறம் 369/19

கல்லில் தேய்த்து அரைக்கப்படும் வெண்மையான சந்தனக் கட்டையைப் போன்ற

காழ் என்பதற்குப் பொதுவாக, உறுதியானது, கெட்டியானது என்பதே பொருள். இதனை ஒட்டியே
பல பொருள்கள் ஆகுபெயராக வந்திருப்பதைக் காணலாம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *