Skip to content
கூவல்

கூவல் என்பது நீர் ஊறிவரும் குழி, கிணறு

1. சொல் பொருள்

நீர் ஊறிவரும் வகையில் தோண்டப்பட்ட குழி, கிணறு

2. சொல் பொருள் விளக்கம்

நீர் ஊறிவரும் வகையில் தோண்டப்பட்ட குழிகளைப் பண்டைத் தமிழர்கள் ‘கூவல்’ என அழைத்துள்ளனர். சிறுகுழி ‘பத்தல்’ என்றும், பெருகுழி ‘கூவல்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் பயின்றுவரும் ‘கூவல்’ என்னும் சொல் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்குமான ‘தண்ணீர்’ தேவைக்காகத் தோண்டப்பட்ட குழிகளையே சுட்டி நிற்கின்றது. 

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

well, pit

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கூவல் அன்ன விடர்அகம் புகுமின் – மலை 366

கிணற்றைப்போன்ற பெரிய பொந்துகளில் புகுந்துகொள்ளுங்கள்

வெயில் வெய்து-உற்ற பரல் அவல் ஒதுக்கில்
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வௌவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே – நற் 240

வெயிலால் வெப்பமுற்ற பரல் மிக்க பள்ளத்தின் ஒருபக்கத்தில்
குந்தாலியால் குழிவு ஏற்படுத்திய கிணற்றை அடைந்து
பசுக்களை நடத்திச்செல்பவர்கள் தோண்டிய குழிவான பள்ளத்தின் நீரை
யானைகளின் கூட்டமான திரள் கவர்ந்துண்ணும்
கானமானது திண்ணிய மலை போல் அழியாத தன்மையதாய் உள்ளது – அதில்

நோயினும் நோய் ஆகின்றே கூவல்/குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட – குறு 224/3,4

அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு
உவலை கூவல் கீழ
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே – ஐங் 203/3

அன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் தோட்டத்திலுள்ள
தேனைக் கலந்த பாலைக்காட்டிலும் இனிமையானது அவர் நாட்டிலுள்ள
இலைதழைகள் கிடக்கும் கிணற்றின் அடியிலுள்ள
விலங்குகள் உண்டு எஞ்சிய கலங்கல் தண்ணீர்.

கூவல் துழந்த தடம் தாள் நாரை – பதி 51/4

பள்ளங்களில் மீனைத் தேடித் துழாவிய பெரிய கால்களையுடைய நாரை,

அகநானூற்றுப் பாடலொன்றில் ‘வன்னிலத்தில் கோவலர் தோன்றிய கிணறு நீரின்றி போக கைவிடப் பட்டு சருகுகள் மூடிக் கிடக்கும். அவற்றை வேடர்கள் தம்மைப் பிடிக்க வைத்திருக்கும் குழிகள் என்று கருதி யானைகள் பெருங்கற்கள் கொண்டு தூர்க்கும்’ என்ற குறிப்பைத் தருகின்றது. அக்குறிப்பைத் தரும் பாடலடிகள்,

பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த

வல் வாய்க் கணிச்சி கூழ் ஆர் கோவலன்

ஊறாது இட்ட உவலை கூவல்/வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் – அகம் 21/23,24

நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய – அகம் 155/8

 ‘பசுக்கள் நீர் உண்ணும் பொருட்டுக் கோவலர், தாம் தோண்டிய கிணற்றினின்று வளைந்த வாயினையுடைய பத்தலால் இறைத்த நீர், ஒழுகிச் சென்று சிறுகுழியில் நிரம்பியது’ என்ற குறிப்பு வருகின்றது.

பிணர் அழி பெரும் கை புரண்ட கூவல்/தெண் கண் உவரி குறை குட முகவை – அகம் 207/10,11

கூவல்
கூவல்

அகல் இடம் குழித்த அகல் வாய் கூவல்/ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும் – அகம் 295/11,12

விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்/கன்று உடை மட பிடி களிறொடு தடவரும் – அகம் 321/8,9

களிறு பொர கலங்கு கழல் முள் வேலி
அரிது உண் கூவல் அம் குடி சீறூர் – புறம் 306/2

முள்ளையுடைய கழற்கொடிகளாலாகிய வேலி சூழ்ந்த, யானைகள் புகுந்து உழக்குதலால் கலங்கிச் சேறாகி,
உண்ணும் நீர் சிறிதளவே உள்ள நீர்த்துறையையும், அழகிய சிறுகுடிகளையுமுடைய சிற்றூரில் வாழும்,

களர் படு கூவல் தோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை – புறம் 311/1

களர்நிலத்தில் உள்ள கிணற்றைத் தோண்டி, நாள்தோறும்
வண்ணாத்தி துவைத்து வெளுத்த தூய ஆடை

சீறூர் மன்னன், பெருவேந்தன் ஏவலின் பொருட்டுப் போர்மேல் சென்றிருந்த காலத்தில், பாணன் ஒருவன் அம்மன்னனைக் கண்டு பொருள் பெற்றுச் செல்லலாம் என்று வருகிறான். அப்பொழுது அங்கிருந்த வீரன் ஒருவன், சீறூர் மன்னன் இல்லாத செய்தியுடன் மன்னன் சிறப்புகளையும் பாணனுக்குச் சொல்வதாக அமைந்தது அப்பாட்டு. அதில்,

பூவற் படுவில் கூவல் தோண்டிய

செங்கண் சில்நீர் பெய்த சீறில்

முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி

யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று

(புறம். 319: 1 – 4)

என்றொரு குறிப்பு வருகின்றது. இப்பாடலடிகள் ‘சிறிய இல்லத்தின் முற்றத்தில், செம்மண் நிலத்தில் தோண்டிய கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட சிவந்த நீர், அகன்ற வாயினையுடைய சாடியில் இட்டு வைத் திருப்பர். அதில் கடுக்காயை இட்டு வைத்தமையால் அந்நீர் சிறிது தெளிந்து மாசில்லாததாய் ஆயிற்று’ என்கிறது இந்தப் பாடலடிகள். செம்மண் நிலத்தில் கிணறு தோண்டி எடுக்கப்பட்ட கலங்கல் நீர், சாடிகளில் வைக்கப்பெற்று, கடுக்காய் இட்டுத் தெளிய வைக்கப் பெறும் என்ற குறிப்பைத் தருகின்றன. 

கல் அறுத்து இயற்றிய வல் உவர் கூவல்/வில் ஏர் வாழ்க்கை சீறூர் மதவலி – புறம் 331/1,2

சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
நெடும் சேண் சென்று வருந்துவர் மாதோ – நற் 41/4

காட்டுவழியின் தொடக்கத்தில் வருந்திய வருத்தம் மெல்ல மெல்ல
பாறைகள் மலிந்த சிறிய கிணற்று நீரில் தணிந்திட,
நெடுந்தொலைவு சென்று வருந்துவர்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *