Skip to content
கேழல்

கேழல் என்பது காட்டுப்பன்றி

1. சொல் பொருள்

(பெ) ஆண் காட்டுப்பன்றி, காட்டுப்பன்றி

2. சொல் பொருள் விளக்கம்

சங்க இலக்கியங்களில் காட்டுப் பன்றிக்குக் கேழல் என்ற பெயரே பல பாடல்களில் வழங்கியுள்ளது. காட்டுப் பன்றியைச் சங்க இலக்கியத்தில் கேழல் என்றும் ஏனம் என்றும் அழைத்தனர்

காட்டுப்பன்றியை வீட்டுப்பன்றியிலிருந்து பிரித்துணர உதவுவது முக்கியமாக அதன் முதுகிலும் கழுத்திலும் உள்ள கதிர் போன்று நீட்டியுள்ள ( Crest or mane of black bristles ) மயிர்க் கற்றையே யாகும். இந்த மயிரொழுங்கைப் பிணர்ச்சுவல் ( நற்றிணை, 336 ) , ‘பிணர் எருத்து ( மலைபடுகடாம் , வரி 246 ) ‘பரூஉமயிர் எருத்து (நற்றிணை, 98 ) என்று கூறப்பட்டுள்ளது . காட்டுப் பன்றியின் சுவல்மயிர் ( Crest ) பனைமரத்தின் கம்பிபோல் உள்ள செறாம்போடு ஒப்பிட்டுக் கூறப் பட்டது மிகப்பொருத்தமான அழகிய உவமையாகும் .மூங்கிலின் வேர் போன்று தடித்தமயிர் என்றது பொருத்தமான உவமம் . முள்ளம்பன்றியின் முள் போலக் கழுத்தில் பருத்த மயிர் என்று கூறுவதையும் கவனிக்கவேண்டும் . மயிர்க்கற்றையைப் பன்மயிர் என்றும் குறிப்பிட்டுள்ளனர் . காட்டுப்பன்றியின் பெண்ணிற்கு நான்கு காம்புகள் உள்ள மடி இருப்பதாகக் கூறியிருப்பதையும் காணலாம் .

கேழல்
கேழல்

சங்க இலக்கியத்தில் கோடு என்றும் மருப்பு என்றும் காட்டுப் பன்றியின் கடைவாய்ப் பற்கள் ( Tushes ) அழைக்கப்படுகின்றன. அகத்திப்பூவின் வளைந்த வெண்மையான பூப்போல் காட்டுப் பன்றியின் கொம்பு காணப்பட்டதாகக் கூறியது மிகவும் பொருத்தமான உவமையாகும் . பிறைபோன்று இருப்பதாகவும் வயிரம் போல உறுதியாக இருப்பதாகவும் கூறியிருப்பதையும் கவனிக்கலாம் . முருக்கமரத்தின் பூப்போல வளைந்து இருப்பதாகக் கூறியது பொருத்தமானதாகும் .

உளை நெடும் பெருங்காய் என்று அகப்பாடலில் ( 223 ) உளை நெடும் பொங்கர் என்றே பாடங் கொள்ளவேண்டும் , உளை என்ற சொல் பூவிற்கே அடைமொழியாக வரும் . பொங்கர் என்ற சொல் முருக்கம் பூவிற்கே அடைமொழியாக வரக்கூடியது .ஏனெனில் சில திராவிட மொழிகளில் பொங்கரா என்ற சொல் முருக்க மரத்தை அல்லது கலியாண முருக்க மரத்தையே ( கவிர் ) குறித்து வழங்கியதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் . அழகிய பூங்கொத்திற்குப் பொங்கர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் வழங்கி வந்துள்ளது .

காட்டுப் பன்றியின் தலையானது கீழே கவிந்து உரல்போன்று ( an elongate head with an abruptly truncated snout ) காணப்படுவதாகச் சங்க நூல்கள் கூறுவது அருமையான விளக்கமாகும் .

கேழல்
கேழல்

புறம் , 152 . காட்டுப் பன்றியின் முகம் வீழ்முகம் என்றும் உரல் போன்ற தலை யென்றும் கூறியிருப்பதை நோக்குக. உரலிற்கு ஒரு பக்கம் அகன்றும் ஒரு பக்கம் குவிந்து சிறுத்தும் காணப்படுவதைப்போல் பன்றியின் தலை காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது அரிய விளக்க மாகும். நன்றாக வளர்ந்த காட்டுப் பன்றியின் நிறம் கருமையாக இருக்கும். ஐங்குறு நூறு , 284 . பொன்னைத் தீட்டிப் பார்க்கும் கட்டளைக்கல் போன்று கரிய நிறத்துடன் காட்டுப்பன்றி காணப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது . கூதாளத்தின் பொன்னிறத்தாது விழுந்து காணப்பட்ட கரிய காட்டுப் பன்றியின் நிறத் தோற்றம் பொன்னுரைத்த கட்டளைக்கல் போன்று இருந்ததாக அகநானூறு ( 178 ) கூறுவது அழகிய உவமை .

களாப்பழம் போலக் கரியதாகவும் இருளைத் துணித்து வைத்தாற் போல இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது . காட்டுப் பன்றியின் உணவு பெரும் பாலும் காட்டுக்கிழங்குகளே யாகும் , மற்றும் வயலில் நுழைந்து விளைந்த பயிரையும் விரும்பித் தின்னும் . இதனால் காட்டுப் பன்றியை மனிதருக்குத் தீங்கிழைக்கும் விலங்காகக் கருதுவர் . தனது கூரிய முகத்தாலும் , வளைந்த கொம்புப்பற்களாலும் ( Tushes ) கிழங்குகளைத் தோண்டியும் விளைச்சலை அழித்தும் தின்னும் . கிழங்குகளைத் தோண்டி எடுப்பதற்காகப் பன்றிகள் உழுத நிலத்தில் ஆமைமுட்டைகளைக் கண்டு எடுத்ததாகவும் , அதே நிலத்தில் கானவர் உழாது தினை விதைத்து அறுவடை செய்த தாகவும் புறநானூறு கூறுகின்றது .

கேழல்
கேழல்

சங்க இலக்கியத்தில் பலபாடல்களில் மலையிலும் காட்டருகிலும் இருந்த விளைச்சலில் புகுந்து தினையையும் ஐவன நெல்லையும் உண்பதாகக் கூறப்பட்டுள்ளது. பல பாடல்களில் பன்றி தினைப்பயிரை உண்பதாகக் கூறப்பட்டுள்ளது . விளைச்சலைப் பாதுகாப்பதற்காகக் காட்டுப் பன்றியைப் பொறிவைத்துப் பிடிக்கும் பழக்கம் இருந்ததைச் சங்கப் பாடல்கள் கூறுகின்றன. காட்டுப்பன்றி விளைச்சலை உண்ணவரும் வழிகளில் விசைப்பொறி வைத்துப் பன்றியைப் பிடித்தனர் எனத் தெரிகின்றது.

காட்டுப் பன்றியைச் சங்க காலத்திலும் இன்றும் விரும்பி உண்ணும் வழக்கம் உள்ளது . இன்றும் உண்பதற்காகவே காட்டுப் பன்றியை வேட்டையாடும் வழக்கம் உள்ளது. காட்டுப்பன்றி மிகுந்த மன வலிமையும் தறுகண்மையும் உடையது . யானை மிக்க உடல் வலிமையுடையதாயினும் மனவலிமை உடையதன்று . காட்டுப் பன்றி உருவில் சிறியதாயினும் வீரமும் தறுகண்மையும் மிக்கது . காட்டுப் பன்றியை விரும்பி உண்ணும் புலியையும் ஆண்பன்றி எதிர்த்துப் போரிடக் கூடியது .

சில சமயங்களில் புலியையும் விரட்டியடிக்குமென வேட்டையாளர் கூறுவர் . காட்டுப் பன்றியின் இறைச்சியைப் புலியும் , சிறுத்தைப்புலியும் , செந்நாய்களும் விரும்பி உண்ணும் .

கேழல்
கேழல்

புலியொடு பெருஞ்சினத்துடன் ஆண்பன்றி போரிட்டதாக ஐங்குறு நூறு கூறுவதைக் காணலாம் . புலியானது நன்கு வளர்ந்த ஆண்பன்றியைத் தாக்குவது எளிதன்று . ஆதலின் பெண்பன்றியையும் பன்றிக் குட்டிகளையும் புலி பெரும்பாலும் கொன்று உண்ணும் . பெண் பன்றியையும் குட்டிகளையும் பாதுகாக்கப் புலியுடன் ஆண்பன்றி போராடுவதுண்டு. ஆண்பன்றியொடு வரும் காட்டுப் பன்றிக் கூட்டத்தைத் தாக்கப் புலி அஞ்சுமெனக் கூறுவர் . ஐங்குறு நூறு 265 ஆம் பாடலில் பெண் பன்றியையும் குட்டியையும் ஆண்பன்றி புலியிட மிருந்து பாதுகாப்பதாகக் கூறியிருப்பது உண்மையான இயற்கையில் நிகழும் செய்தியாகும். வேங்கைப் புலிக்குக் கூட அஞ்சாது மூங்கில் வளர்ந்த சாரலில் தூங்கும் பன்றி கூறப்பட்டுள்ளதையும் நோக்குக.

காட்டுப் பன்றியைச் சங்க காலத்தில் வேட்டையாடும் வழக்கம் இருந்தது. காட்டுப் பன்றியை வேட்டையாடுவது எளிய செயல் அன்று. காட்டுப் பன்றி மிகவும் அறிவுக் கூர்மையுடைய விலங்கு . மற்றும் தைரியமும் வீரமும் வாய்ந்தது . காட்டுப் பன்றி தன் கூர்த்த அறிவினால் கானவர் வைத்த பொறியிலிருந்து தப்பித்துக் கொள்வதையே பல்லியின் குரல்கேட்டுத் தப்பித்ததாகச் சங்கப் புலவர் கூறினர். காட்டுப் பன்றியின் மிகுந்த தைரியத்தையும் மனஉரத்தையும் கருதியே சங்கப் புலவர்கள் தறுகண்பன்றி ( அகம் , 248 ) கடுங்கட்பன்றி ( அகம் , 18 , 322 )கடுங்கட் கேழல் (புறம், 190 , புறம் , 168) பெருஞ்சின ஒருத்தல் (நற்றிணை, 82 , ஐங்குறுநூறு , 266 ) என்றெல்லாம் சுட்டிக்காட்டிப் பாடினர் .

கேழற்பன்றி
கேழற்பன்றி

சங்க இலக்கியத்திலும் காட்டுப் பன்றியின் குணங்களாகத் தறுகண்மையும் (indomitable courage கடுங்கண்மையும் ( fierceness ) பெருஞ்சினமும் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது . எவர்க்கும் அஞ்சாத இவ்விலங்கு புலிவேட்டைக்குச் செல்பவரையும் துணிந்து மீண்டும் மீண்டும் தாக்குமாம் .இம் முறையாக வழியை விலக்கித் தறுகண்மையுடனும் ஆண்மையுடனும் நின்ற ஓர் ஆண்பன்றியைப் பற்றி அருமையான அழகிய செய்தி அகநானூறு 248 ஆம் பாடலில் கூறப்பட்டுள்ளது . அகநானூற்றில் (அகம் , 248 ) கூறப்பட்டுள்ள இச்செய்தி இன்றும் வேட்டையாளர் அனுபவத்தில் காணக் கூடிய உண்மையான செய்தியாகும் . இரவில் நாய்களை வைத்துப் பன்றி வேட்டையாட வந்த இளைய வேட்டுவர்கள் தன் குட்டிகளை அணுகா தவண்ணம் வேட்டை நாயைத் தூக்கி எறிந்து போட்டுத் தடுத்துக் கானத்தை விட்டு வந்த ஆண்பன்றி அரிய வழியில் ஆட்களைத் தாக்க எதிர்த்து நின்றது .

அதைக் கண்ட தலைவனாகிய கானவன் நெருங்கி அம்பை எய்யவும் தன்னுடன் இருந்த பன்றிக் கூட்டம் ஓடி விடவும் தான் பெயராது வழியை அடைத்து எதிர்த்து நின்ற ஆண்பன்றியைப் பார்த்து அதன் பெருவிறலை வியந்து அம்பெய்யாது திரும்பிவிட்டான். காட்டுப்பன்றி வேட்டையில் தன் மாலைகள் தாறுமாறாகப் பிய்க்கப்பட்டு வெறும் நூல் தோளில் தொங்க வெறுங்கையோடு வந்த தலைவனைப் பார்த்துப் புரிந்து கொண்ட அன்னை தலைவியைப் பார்த்து , ‘நிரம்ப நன்றாக இருக்கின்றது , இச்செய்தி என்று நகைத்தாளாம் .

காட்டுப்பன்றி
காட்டுப்பன்றி

சங்க இலக்கியத்திலும் நாய்களைக் கொண்டே வேட்டையாடுவது கூறப்பட்டுள்ளது . நாய்களை முன்னே செலுத்தி மோப்பம் பிடிக்க வைத்துப் பின்னே வரிசையாக வளையமாகச் சிலர் வாயாலோ கருவிகளாலோ ஓசை யெழுப்புவர் . அதற்காகவே ஒரு வகைப் பறையும் இருந்ததாகத் தெரிகின்றது . அது பன்றிப் பறை என்று வழங்கப்பட்டது . காட்டுப் பன்றிகளிடமிருந்து சேப்பங்கிழங்கையும் மஞ்சள் கிழங்கையும் காக்கப் பன்றிப் பறையைப் பயன்படுத்தியதாக மலைபடுகடாம் கூறுகின்றது .காட்டுப் பன்றிக்கு மற்ற விலங்குகளைக் காட்டிலும் மிக்க கொழுப்பு மிக்க இறைச்சி உண்டு என்பதையும் மலைபடுகடாம் கூறுகிறது . இந்தக் கொழுப்பின் காரணமாகவே காட்டுப் பன்றியின் இறைச்சியை விரும்பி உண்கின்றனர் .

காட்டுப் பன்றியின் நிரைக்குத் தலைமையாக வலிமை பொருந்திய ஆண் பன்றி இருப்பதுண்டு. முக்கியமாக இணைசேரும் காலத்தில் தலைமைக்காக ஆண்பன்றிகள் போரிடும் . இந்த ஆண்பன்றிகளை Master Boar என்பர் . இந்த வலிமை வாய்ந்த தலைமை தாங்கும் ஆண்பன்றிகளை ஒருத்தல் ( நற்றிணை . 82 , ஐங்குறு நூறு 366 ) என்று சங்க நூல்கள் கூறுகின்றன. பெருஞ்சின ஒருத்தல் என்றும் கூறும். பன்றியென்ற சொல் சங்க இலக்கியத்தில் காட்டுப்பன்றியைக் குறித்துப் பல பாடல்களில் வழங்குவதைக் காணலாம். காட்டுப்பன்றியை வீட்டுப்பன்றியிலிருந்து விலக்கிப் பிரித்துக் கூறவே கேழற்பன்றி எனப்பட்டது . சங்க இலக்கியத்தில் கேழல் என்ற சொல் தனித்தே காட்டுப்பன்றிக்கு வழங்கும் .

காட்டுப்பன்றி
காட்டுப்பன்றி

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Sus Cristatus, The Indian wild boar, hog, boar

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

புலி கொல் பெண்பால் பூ வரி குருளை
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/1,2

புலியால் கொல்லப்பட்ட பெண் பன்றியின் அழகிய வரிகள் கொண்ட குட்டியை,
வளைந்த வெண்மையான கொம்பினையுடைய ஆண்பன்றி காத்துவளர்க்கும்

பன் மயிர் பிணவொடு கேழல் உகள – மது 174

வீழ் முக கேழல் அட்ட பூசல் – மது 295

விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி – மலை 193

தினை உண் கேழல் இரிய புனவன் – நற் 119/1

வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய – நற் 399/4

கட்டளை அன்ன கேழல் மாந்தும் – ஐங் 263/2

இளம் பிறை அன்ன கோட்ட கேழல்/களங்கனி அன்ன பெண்பால் புணரும் – ஐங் 264/1,2

வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/2

வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும் – ஐங் 268/3

கேழல் உழுது என கிளர்ந்த எருவை – ஐங் 269/1

கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில் – ஐங் 270/1

கள்ளி அம் கடத்து இடை கேழல் பார்க்கும் – ஐங் 323/2

கேழல் திகழ்வர கோலமொடு பெயரிய – பரி 2/16

கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை – அகம் 8/6

செந்நாய் ஏற்றை கேழல் தாக்க – அகம் 21/18

அத்த கேழல் அட்ட நல் கோள் – அகம் 111/10

ஆழல் வாழி தோழி கேழல்/வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய் – அகம் 223/3,4

கேழல் பன்றி வீழ அயலது – புறம் 152/4

கடுங்கண் கேழல் உழுத பூழி – புறம் 168/4

கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின் – புறம் 176/2

கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து என – புறம் 190/6

கோழி வய பெடை இரிய கேழலொடு/இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன – திரு 311,312

கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும் – பரி 3/24

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *