Skip to content
சிற்றில்

சிற்றில் என்பதன் பொருள் சிறிய வீடு, சிறு குடில், குடிசை, சிறுமனை, சிறுமியர் கட்டி விளையாடும் மணல்வீடு, சிற்றிற்பருவம்.

1. சொல் பொருள்

(பெ) 1. சிறிய வீடு, சிறு குடில், குடிசை, சிறுமனை

2. சிறுமியர் கட்டி விளையாடும் மணல்வீடு

3. சிற்றிற்பருவம்

2. சொல் பொருள் விளக்கம்

சிறுவர் சிறுமியர் மணல்வீடு கட்டி விளையாடும் பொழுதுபோக்குத் திளைப்பு ஆட்டத்தைச் சிற்றில் விளையாட்டு என்பர்.

புலவர்கள் தாங்கள் விரும்பிய கடவுளையோ, அரசனையோ, வள்ளலையோ, சான்றோரையோ குழந்தையாக எண்ணிப் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். இது குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் 21ஆம் மாதம் வரை ஒரு பருவத்திற்கு இரண்டு திங்கள் என வகுத்துக் கொண்டு பத்துப் பருவங்களில் வைத்துப் பாடப்படுவதாகும். இதில் ஒரு பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் பத்துப் பருவங்களுக்கு மொத்தம் 100 பாடல்கள் பாடப்படும். இவ்விலக்கியம் ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகைப்படும். இதில் பதினேழாவது மாதத்தில் பாடப்படும் பாடல்கள் சிற்றில் இடம்பெறும்.

மொழிபெயர்ப்புகள்

3.ஆங்கிலம்

small house

Toy house of sand built by little girls in play

hut, hovel

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

முள் மிடை வேலி
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண் – புறம் 116/4-6

முள்ளால் நெருங்கிய வேலியையும்
பஞ்சு பரந்த முன்றிலையுமுடைய சிறிய மனையிடத்தின்கண்

சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன்
யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன்
யாண்டு உளன்ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!– புறம் 86/1,2

சிறிய இல்லின்கண் நல்ல தூணைப் பற்றிக்கொண்டு, உன் மகன்
எவ்விடத்து உள்ளானோ என்று கேட்கிறாய்; என்னுடைய மகன் எவ்விடத்துளனாயினும் அறியேன்;புலி கிடந்துபோன கன்முழைபோல அவனைப் பெற்ற வயிறோஇஃது; அவள் செருக்களத்தின்கண்ணே தோன்றுவன்;அவனைக் காணவேண்டின் ஆண்டுச்சென்று காண்

கானல்
தொடலை ஆயமொடு கடலுடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும் – அகம் 110/5-7

கடற்கரைச் சோலையில்
மாலை போன்ற விளையாட்டுத் தோழியருடன் கடலில் சேர்ந்து விளையாடியும்,
சிறுவீடு கட்டியும், சிறுசோற்றை அட்டுக் குவித்தும்

சுடர் தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு, கலித்தொகை 51

ஒளியுடைய வளையல்களை அணிந்த தோழியே! இதை நீ கேட்பாயாக! நாம் தெருவில் விளையாடிய பொழுது, நம்முடைய சிறிய மணல் வீட்டை காலால் சிதைத்து, நாம் அணிந்த மலர் மாலையை பிடுங்கி, நம்முடைய வரிப் பந்தை எடுத்துக் கொண்டு ஓடிய அந்த குறும்புப் பையன், ஒரு நாள் அம்மாவும் நானும் வீட்டில் இருந்த பொழுது, அங்கு வந்து இல்லத்தில் உள்ளவர்களே! குடிக்க தண்ணீர் கொடுங்கள் 

5	புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம்
ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன், மற்று என்னை,
'முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்
சிற்றில் புனைகோ, சிறிது?' என்றான்; எல்லா! நீ, (கலித்தொகை  111).

கோடு வாய் கூடா பிறையை பிறிது ஒன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய
காணான் திரிதரும்-கொல்லோ மணி மிடற்று
மாண் மலர் கொன்றையவன்
தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே
வள்ளியை ஆக என நெஞ்சை வலியுறீஇ
உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான்
எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ – கலி 142/24-32

சிற்றில் விளையாடி, தலைவர் வருவாரா என்று காண மணலில் வட்டங்கள் இட்டேன், அதில் முனைகள் கூடாமல்
பிறை தோன்றிற்று, எனவே, தலைவர் வாரார் என அறிந்து, அந்தப் பிறைநிலவை
என் ஆடையால் மூடி மறைத்துவிட்டேன், ஆனால் தலையில் சூடுவதற்காகக்
காணாமல் அலைவான் அல்லவா, மணி நிறத்தைக் கழுத்தினில் கொண்ட
மாண்பு மிக்க மலரான கொன்றையைச் சூடிய சிவபெருமான் என்று எண்ணி,
நாம் தெளிந்த அறிவுடையோம் என்று சொல்லிக்கொண்டு, ஆராய்ந்து பாராமல், அதை நிலைநாட்டும் வகையில்
அப் பிறையைச் சிவனுக்கே அளித்து, வள்ளல் என்ற பெயரைப் பெறுவாயாக என்று நெஞ்சிற்கு உறுதியளித்துவிட்டு,
காதலர் நம்மை நினைத்து வருவாரோ?, வருந்தி நான்
இவரை இகழ்ந்திருப்பேனோ? என்று எண்ணியபடி இருக்க,

உரையாய்-வாழி, தோழி!-இருங் கழி
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி
வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை,
கானல் ஆயமொடு காலைக் குற்ற
கள் கமழ் அலர தண் நறுங் காவி
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும்
சிறு விளையாடலும் அழுங்கி
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே - நற்றிணை 123

ஆணும் பெண்ணுமாகிய இரண்டு ஞெண்டுகள்.சிற்றில்புனைந்து பரிசிறந்தோடி யென்றது தலைவி சிற்றில் புனைந்த அறியாப் பருவத்தே தலைவன் விருந்தாய் வந்தேனென ஆங்கே பூழிப் போனகமளித்த காலந்தொட்டு அவனை மணமகனாகக் கருதியிருந்தமை யறிவுறுத்தியதாம்.

எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில், - அகநானூறு 167. பாலை

ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
இளையர் அருந்த, பின்றை, நீயும்
இடு முள் வேலி முடக் கால் பந்தர்,
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில், - அகநானூறு 394. முல்லை

வெண்பாப் பாட்டியல் (செய்யுளியல் 7ஆவது பாடலின்) மூலம் காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் எனப் பத்துப் பருவங்களை உடையது பிள்ளைத் தமிழ் என்பதை அறிய முடிகிறது. இதில் முதல் ஏழு பருவங்கள் ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்கும், பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவாகும். கடைசி மூன்று பருவங்களான சிறுபறை, சிற்றில், சிறுதேர் ஆகியன ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குரியன. இம்மூன்று பருவங்களுக்குப் பதிலாக, கழங்கு, அம்மானை, ஊசல் என்ற மூன்று பருவங்களைப் பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குச் சேர்த்துக் கூறுவது மரபு.

17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும். (சிற்றில் = சிறு வீடு)

326. நெய்தல் - தலைவி கூற்று

துணைத்த கோதைப் பணைப்பெருந் தோளினர்
கடலாடு மகளிர் கான லிழைத்த
சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி
ஒருநாள் துறைவன் துறப்பின்
பன்னாள் வரூஉம் இன்னா மைத்தே. குறுந்தொகை 326

என் மகள்
செம்புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டீரோ கண் உடையீரே? (அகநானூறு 275, 17-19)

517	வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில்
      விசித்திரப் பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்
      அழித்தி யாகிலும் உன் தன் மேல்
உள்ளம் ஓடி உருகலல்லால்
      உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன்
      முகத்தன கண்கள் அல்லவே             (5) - நாலாயிர திவ்ய பிரபந்தம்

வெள்ளை நுண் மணலைக் கொண்டு அனைவரும் வியக்கும்படி இழைத்த அழகிய சிறு வீட்டை நீ
அழித்தாலும், அதற்காக எங்கள் நெஞ்சானது உருகும். உன் மேல் வெறுப்பு கொள்ள மாட்டோம். உன்
முகத்தில் இருப்பவை அருள் கண்கள் அல்லவோ என்கின்றார்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *