Skip to content
சூடு

சூடு என்றால் அணி என்று பொருள்

1. சொல் பொருள்

(வி) 1. அணி, தரி, 2. சூடாக்கு, சூடாகு, சூடேற்று, சூடேறு, சூடுபடுத்து, சூடுவை

(பெ) 1. பெண்களின் காதணிகளில் பதிக்கும் மணி, அரிந்த நெற்கட்டு, 2. வெப்பம், 3. கடப்பட்டது, 4. சுடுதல், 5. சூடுதல், அணிதல், 6. நெருப்பில் சுட்ட உணவுப் பண்டம்

2. சொல் பொருள் விளக்கம்

வேட்டையாடுவோர், பொதுவாகத் தாம் கொன்ற விலங்குகளின் இறைச்சியைத் துண்டங்களாக்கி, அந்த இடத்திலேயே நெருப்புமூட்டி, துண்டங்களை நெருப்பில் வாட்டி உண்பர். இவ்வாறு நெருப்பில் வாட்டப்பட்ட உணவே சூடு எனப்படுகிறது.

நெருப்பிற் சுட்ட இறைச்சியைப் பல்லில் கடித்து இழுத்துக் கிழித்துத்தானே உண்ணமுடியும்! இதனையே சூடு கிழித்த ஒக்கல் என்கிறது புறப்பாடல்.

சூடு
சூடு

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

put on, wear as flowers, gems inlaid in ear rings, Bundle of paddy sheaves, That which is heated, burnt, roasted;, the act of heating, the act of wearing or putting on

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நறும் பூ கண்ணி குறவர் சூட – பொரு 219

நறிய பூவால் புனைந்த கண்ணியைக் குறவர்கள் அணிந்துகொள்ளவும்

செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர – அகம் 86/27

சிவந்த மணிகள் பதித்த ஒள்ளிய குழை வளவிய காதின்கண் அசைய

அக வயல் இள நெல் அரி கால் சூடு
தொகு புனல் பரந்த என துடி பட ஒருசார் – பரி 7/27,28

வயலுக்குள் விளைந்து நின்ற இள நெற்பயிரை அறுத்து ஒருமுறை அடித்து வைத்த நெற்கட்டுகளின் மீது
மிகுந்த வெள்ளம் பெருகியது என்று துடியை முழக்கி ஒருபக்கமாய்ச் சிலர் அழைப்ப,

சூடு
சூடு

கடல் இறவின் சூடு தின்றும் – பட் 63

கடல் இறால்களின் (தசை)சுடப்பட்டதைத் தின்றும்,

சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும் – மது 512

சுடுதலுற்ற நல்ல பொன்னை விளங்கும் அணிகலன் செய்வாரும்,

சூடுற்ற சுடர் பூவின்
பாடு புலர்ந்த நறும் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்றம் ஆக – மது 225-227

சூடுதலுற்ற ஒளிவிடும் வஞ்சியினையும், 225
பூசினபடியே புலர்ந்த நறிய சந்தனத்தையுமுடைய
சீரிய பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு,

சூடு
சூடு

சூடு கோடு ஆக பிறக்கி நாள்-தொறும் – பொரு 243

சூட்டை மலையாக அடுக்கி, நாள்தோறும்

வயல் வெள் ஆம்பல் சூடு தரு புது பூ – நற் 290/1

வயலிலுள்ள வெள்ளைநிற ஆம்பலின் நெற்கதிர்க்கட்டுகளோடு வந்த புதிய பூவை,

சூடு நிலை உற்று சுடர்விடு தோற்றம் – பதி 74/14

சூடுவதற்குரிய நிலையை உண்டாக்கி, ஒளி திகழும் தோற்றத்தை உண்டாக்குவதால்

சூடு நறவொடு தாமம் முகிழ் விரிய – பரி 23/55

சூடியுள்ள நறவத்தின் மொட்டுடன் பூமாலையின் மொட்டுக்களும் மலர,

அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு/கள் ஆர் வினைஞர் களம்-தொறும் மறுகும் – அகம் 84/12,13

கதிர் அறுப்போர் இறுக்கக்கட்டிய, ஆடுகின்ற முகப்பைக் கொண்ட பெரிய நெற்கதிர்க்கட்டுகளை

குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு – புறம் 34/11

குறிய முயலின் கொழுத்த சுட்ட இறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு கூட

குறுமுயலின் குழை சூட்டொடு – புறம்.395/3

வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுசிர் – சிறு. 163

ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர் – சிறு. 177

தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் – பெரு 282

நீடு கதிர் கழனி சூடு தடுமாறும் – புறம் 61/7

நீண்ட கதிர்களையுடைய வயல்களில் அறுத்த நெற்கதிகர்களை இடுமிடம் தெரியாமல் தடுமாறுகின்ற

சுடுதல்
சூடு

ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ – புறம் 212/4

வதக்கிய கொழுத்த ஆரல் மீனைத் தம் கன்னத்தில் அடக்கித்

விடை வீழ்த்து சூடு கிழிப்ப – புறம் 366/17

ஆட்டுக் கடாவை அறுத்துச் சூட்டுக் கோலில் கோத்துச் சுட்ட இறைச்சியை உண்ணும்படி,

அரவு வெகுண்டு அன்ன தேறலொடு சூடு தருபு – புறம் 376/14

பாம்பு சீறினாற் போன்ற கள்ளின் தெளிவையும், சுட்ட இறைச்சியையும் எனக்குத் தந்து,

சூடு கிழித்து வாடூன் மிசையவும் – புறம் 386/4

சூட்டுக்கோலால் குத்திச் சூடுபடுத்தப்பட்ட இறைச்சியைத் தின்னவும்,

கொழும் தடிய சூடு என்கோ – புறம் 396/15

அவன் எமக்கு அளித்த கொழுத்த துண்டமாகிய சூட்டிறைச்சியைச் சொல்லவா!

நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு/மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல் – புறம் 397/13,14

நெய்யில் பொரித்ததும் தாளிப்பும் உடையதுமான பெரிய சூட்டிறைச்சித் துண்டுகளையும்,

தொடு தோல் கானவன் சூடு-உறு வியன் புனம் – அகம் 368/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *