Skip to content
தகை

தகை என்பதன் பொருள்உயரிய தன்மை,மேன்மை, சிறப்புmதன்மை, இயல்பு, குணம்.

1. சொல் பொருள்

  1. (வி) 1. தடுத்து நிறுத்து, 2. கட்டு, 3. அழகுபடுத்து, 4. உள்ளடக்கு, 5. சுற்று, 6. ஒத்திரு.

2. (பெ) 1. மாலை, 2. தன்மை, இயல்பு, குணம் 3. உயர்வு,உயரிய தன்மை, பெருமை, மேன்மை, சிறப்பு, மேம்பாடு 4. அழகு, 5. பொருத்தம், பொருத்தமாக அமைதல், ஒப்பு, இயைபு, 6. நன்மை, நலம், 7.நீர் வேட்கை, அயர்வு

2. சொல் பொருள் விளக்கம்

தகை என்பது நீர் வேட்கையாகும்.

தகைப்பு=களைப்பு, சோர்வு. ஓடி வந்தால் தகைப்பு ஏற்படும். மாடு வேலை செய்து வேலை விடுதலை தகைப்பாறுதல் (தைப்பாறுதல்) என்பர். தகைப்பின் மூலம் தகை. “தகையாக இருக்கிறது தண்ணீர் குடிக்க வேண்டும்” என்பது தென்னக வட்டார வழக்கு. பெருந்தகை, தகையோர் என்பவை உயரிய தன்மை என்பதன் வழிப்பட்ட இலக்கிய வழக்குச் சொல்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

stop, resist, bind, make beautiful, enclose, wind round, coil, garland, nature, characteristic, excellence, greatness, beauty, loveliness, fitness, suitability, goodness, virtue, weariness

தகை
தகை

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க
சென்றி பெரும நின் தகைக்குநர் யாரோ – அகம் 46/15,16

ஒளிரும் வளையணிந்த தலைவியின் அழகு குன்றினும் குன்றுக;
போய்விடு பெருந்தகையே! உன்னைத் தடுப்பவர் யாருமில்லை.

ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த
வில் விசை மாட்டிய விழு சீர் ஐயவி – பதி 22/22,23

உயர்ந்து நிற்கும் வாயில்களில், தொங்கிக்கொண்டிருக்கும்படி கட்டிய,
எந்திர வில்கள் பொருத்தப்பட்ட, மிகுந்த சிறப்பினையுடைய ஐயவித்துலா மரங்களும்

குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி
ஆடூஉ சென்னி தகைப்ப – அகம் 301/11,12

குவிந்த கொத்துக்களையுடைய எருக்கினது நெருங்கிய பூக்களாலான கண்ணி
ஆடவர் சென்னியை அழகுறுத்த

தண் கேணி தகை முற்றத்து – பட் 51

குளிர்ந்த சிறிய குளங்களை உள்ளேயடக்கின முற்றத்தையுடைய

தகை தார்
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்
கிள்ளிவளவன் படர்குவை ஆயின் – புறம் 69/14-16
https://solalvallan.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/
சுற்றப்பட்ட மாலையையும்
ஒள்ளிய எரியை ஒக்கும் நிறம் பொருந்திய பசும்பொன்னால் செய்யப்பட்ட பூணினையுமுடைய
கிள்ளி வளவனைடத்தே செல்குவையாயின்

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து – திரு 139

மொட்டு வாய் நெகிழ்ந்த மாலை சூழ்ந்த மார்பினையும் (கொண்ட)

முகிழ் தகை
முரவை போகிய முரியா அரிசி – பொரு 112,113

(முல்லை)அரும்பின் தன்மையையுடைய
(தீட்டப்படாத அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின்

கரும் கால் வேங்கை நாள் உறு புது பூ
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப
தகை வனப்பு உற்ற – நற் 313/1-3

கருமையான அடிமரத்தையுடைய வேங்கை மரத்தின் காலையில் பூத்த புதிய பூக்கள்
பொன்வேலை செய்யும் பொற்கொல்லனின் சிறந்த கைவேலைப்பாட்டைப் போல
சிறப்பான வனப்பைப் பெற்றன

தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே – நற் 370/11

அழகிய மலர் போன்ற மையுண்ட கண்களைத் தன் கைகளினால் மூடிக்கொண்டாள்

பொய் வலாளன் மெய் உற மரீஇய
வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து
அமளி தைவந்தனனே – குறு 30/2-4

அந்தப் பொய்சொல்வதில் வல்ல தலைவன் என்னை மார்புறத் தழுவிய
வாய்ப்பதற்கேதுவான பொய்க்கனவு மருட்ட, நினைவு பெற்று எழுந்து
படுக்கையைத் தடவிப்பார்த்தேன்!

எழில் தகை இள முலை பொலிய – ஐங் 347/2

அழகும் நலமும் சேர்ந்த என்னுடைய இளம் முலைகள் பொலிவுபெறும்படியாக

5. பயன்பாடு

தகைசால் தமிழர் விருது ஸ்டாலின் அறிவிப்பு .

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *