சொல் பொருள்
(பெ) 1. சங்க காலத்துப் பொதியமலை அரசன்.
2. சங்க காலத்து அழுந்தூர் வேள்
சொல் பொருள் விளக்கம்
1. சங்க காலத்துப் பொதியமலை அரசன்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திதியன் இன்றைக்குக் குற்றாலம் எனப்படும் பொதிகைமலைப் பகுதியை ஆண்டவன் பொருநர் செல் சமம் கடந்த வில் கெழு தட கை பொதியின் செல்வன் பொலம் தேர் திதியன் இன் இசை இயத்தின் கறங்கும் கல் மிசை அருவிய காடு – அகம் 25/18-22 பகைவர் எதிர்ந்துவரும் போரினை வென்ற வில்லினைக் கொண்ட பெரிய கையினை உடையானும் பொதியில் மலைக்கு உரிய செல்வனும் பொன்னாலான தேரினை உடையவனுமான திதியன் என்பானின் இனிய இசையை எழுப்பும் இசைக்கருவிகளிப் போல ஒலிக்கும் மலையுச்சியிலிருந்து விழுகின்ற அருவிகளையுடைய காடு இந்தத் திதியன் தலையாலங்கானத்துப் போரில் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் போரிட்டுத் தோற்ற எழுவரில் ஒருவன். கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன் ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப சேரல் செம்பியன் சினம் கெழு திதியன் போர் வல் யானை பொலம் பூண் எழினி நார் அரி நறவின் எருமையூரன் தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று எழுவர் நல் வலம் அடங்க – அகம் 36/13-20 கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள் பூட்டிய கொடி பறக்கும் தேர் உடைய நெடுஞ்செழியன் தலையாலங்கானத்து அகன்ற போர்க்களம் செந்நிறம் அடைய – சேரன், சோழன், சினம் மிக்க திதியன், போரில் வல்ல யானையை உடைய பொன் அணிகள் அணிந்த எழினி, நாரால் அரிக்கப்பட்ட கள்ளினையுடைய எருமையூரன், தேன் மணம் கமழும் மார்பினில் பூசிப் புலர்ந்த சந்தனத்தையுடைய இருங்கோவேண்மான், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையுடைய பொருநன் என்ற எழுவரின் சிறந்த வெற்றிகள் அடங்கிப்போக இந்தத் திதியன் வேல்படையும், தேர்ப்படையும் மிகுதியாகப் பெற்றிருந்தான். ஒளிறு வேல் தானை கடும் தேர் திதியன் – அகம் 322/8 ஒளிவிடும் வேலினையுடைய சேனையினையும், விரைந்து செல்லும் தேரினையும் உடைய திதியன். இந்தத் திதியன் பாணர்களுக்குப் பல அணிகலன்களை நல்கி அவர்களுக்கு அறத்துறையாக விளங்கினான் பாணர் ஆர்ப்ப பல கலம் உதவி நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன் – அகம் 331/11,12 பாணர்கள் மகிழ்ந்து ஆரவாரிக்க, பல அணிகலன்களை அளித்து நாளோலக்கம் கொண்டிருந்த கள்ளின் மகிழ்வினையுடைய திதியன் அழுந்தூர் என்னும் ஊர்ப்பகுதியினை ஆண்ட வேளிர் தலைவன் திதியன். இவன் கரிகால் சோழனின் தாய்வழிப் பாட்டன். அன்னி ஞிமிலி என்பாளின் தந்தை செய்த ஒரு குற்றத்துக்காக கோசர்கள் என்பார் அவனின் கண்ணைக் குத்தி ஊனமாக்கிவிட்டனர். இந்த அன்னி கோசரைப் பழிக்குபழி வாங்குவதாகச் சபதம் செய்துகொண்டாள். அரசன் திதியனிடம் தன் குறையைச் சொல்லி முறையிட, திதியன் தன் பெரும் படையுடன் சென்று ஊர்முது கோசரைக் கொன்றான். தந்தை கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய கடும் தேர் திதியன் அழுந்தை கொடும் குழை அன்னிமிஞிலி – அகம் 196/8-12 தன் தந்தையின் கண்ணின் அழகைக் கெடுத்த தவற்றிற்காக, அச்சம் உண்டாக நெடுமொழியினையுடைய கோசர்களைக் கொன்று மாறுபாடு தீர்ந்த விரைந்த தேரினையுடைய திதியனின் அழுந்தூரைச் சேர்ந்த வளைந்த குழையினை அணிந்த அன்னி மிஞிலி அன்னி என்ற பெயர் கொண்ட ஓர் சிற்றரசன், இந்தத் திதியனுடன் பகைமை கொண்டு, திதியனின் காவல் மரமான புன்னை மரத்தை வெட்டி வீழ்த்தினான். ஆனால் திதியன் அவனுடன் போரிட்டு அவனைக் கொன்றான். பெரும் சீர் அன்னி குறுக்கை பறந்தலை திதியன் தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணிய நன்னர் மெல் இணர் புன்னை போல – அகம் 145/10-13 பெரிய புகழையுடைய அன்னி என்பவன் குறுக்கைப் பறந்தலை என்னும் போர்க்களத்தில், திதியன் என்பவனின் பழைமை பொருந்திய பெரிய அடியை வெட்டித்துண்டாக்கிய நன்றாகிய மெல்லிய பூங்கொத்துக்களையுடைய புன்னை மரத்தைப் போல் பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி திதியனொடு பொருத அன்னி போல விளிகுவை கொல்லோ – அகம் 126/15-17 பொன் போன்ற கொத்துக்களாகிய நறிய மலர்களையுடைய (காவல் மரமான) புன்னையை வீழ்த்த விரும்பித் திதியனுடன் போரிட்ட அன்னியைப் போல நீ இறந்துபடுவாய் போலும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்