Skip to content

சொல் பொருள்

(வி) 1. அலைந்துதிரி, 2. திருக்குறு, 3. வேறுபடு, 4. முறுக்கேற்று, 5. சுழல்

(பெ) 1. திரிகை, 2. விளக்குத்திரி, 3. முறுக்கு

சொல் பொருள் விளக்கம்

1. அலைந்துதிரி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wander, be twisted, change, vary, twist as yarn, go round, whirl, grinding tool, Roll or twist of cloth or thread for a wick, twist

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர் – மது 405

பல வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு அலைந்து விற்பவரும்

இரலை
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி – கலி 15/6

கலைமானின்
கொம்பு போல திருக்குண்டும் முறுக்குண்டதுமாய் விழுகின்ற தாடியையும்,

வசை இல் புகழ் வயங்கு வெண் மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும் – பட் 1,2

பழிச்சொல் இல்லாத புகழையுடைய, சுடர் வீசும் வெள்ளியாகிய மீன்
(தான் நிற்பதற்குரிய)வடதிசையினின்றும் மாறி தென்திசையில் சென்றாலும்

வடி கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை – நற் 74/1

செம்மையாகச் செய்யப்பட்ட கதிர் என்னும் கருவியால் முறுக்கேற்றப்பட்ட வலிய கயிற்றால் பின்னிய பெரிய வலையை

அதரி திரித்த ஆள் உகு கடாவின் – புறம் 370/17

கடாவிடும்போது சுற்றிவந்த காலாட்கள் வீழ்ந்த கடாவிடுமிடத்தில்

களிற்று தாள் புரையும் திரி மர பந்தர் – பெரும் 187

யானையினது காலை ஒக்கும் (தானியங்கள் திரிக்கும்)திரிகை மரம் நிற்கும் பந்தலினையும்

நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ – முல் 48

நெய்யைக் காலுகின்ற திரிக்குழாயையுடையோராய் நெடிய திரியை (எங்கும்)கொளுத்தி

திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99

முறுக்குள்ள கொம்பினையுடைய புல்வாய்க்கலையோடே மடப்பத்தையுடைய மான் துள்ள,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “திரி”

  1. திரி என்பதன் பொருளாக மூன்று என்றும் சொல்லுகின்றனர் இப்பொருள் சரிதானா?.திரிக்குறள் என்பது திருக்குறள் என்றாயிற்று என்கின்றனர் இது சரிதானா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *