Skip to content
தீர்வை

தீர்வை என்பது கீரி

1. சொல் பொருள்

(பெ) கீரி, மூங்காப்பிள்ளை, மூங்கா; பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி; பாம்பை எளிதில் கொல்லும் வேகம் படைத்தது

2. சொல் பொருள் விளக்கம்

கீரிப்பிள்ளை தோல்காப்பியத்தில் மூங்கா என்ற பெயரில் வழங்கியுள்ளது;

மூங்கா வெருகெலி மூவரி யணிலோ
டாங்கவை நான்குங் குட்டிக் குரிய – தொல் . மரபியல் , 6 .

மூங்கா தொல்காப்பியத்தில் கீரிப் பிள்ளையைக் குறித்து வழங்கியிருப்பினும் சங்க இலக்கியத்தில் மூங்காவென்ற பெயரோ கீரிப்பிள்ளையோ குறிப்பிடப்படாதது விளக்க முடியாத புதிராக உள்ளது . கீரிப்பிள்ளையைப் பற்றிய செய்தி தமிழிலக்கியத்தில் சிலப்பதிகாரத்தில் பஞ்சதந்திரக் கதையைக் கூறுங்கால் வருகின்றது . மராத்தி முதலிய மொழிகளில் மங்கூஸ் என்ற பெயரில் கீரிப் பிள்ளை அழைக்கப்படுகிறது . வடமொழியிலிருந்து இப்பெயர் வந்ததாகத் தெரியவில்லை . மூங்கா என்ற சொல்லுடன் மராத்தியப் பெயர் நெருங்கிய தொடர்புடையது . மூங்கா என்ற சொல் ஊமை என்ற பொருளில் கீரிப்பிள்ளைக்கு வழங்கியதாகத் தோன்றுகிறது. பிற்காலத்தில் ஊமை என்ற பெயரே நிகண்டுகளில் கீரியைக் குறித்து வழங்கியுள்ளது. மராத்தியில் வழங்கும் கீரியின் பெயர் ஆங்கிலத்தில் கீரிக்குப் பெயராக வழங்கினும் மராத்திப் பெயர் தமிழிலிருந்து வந்திருக்கவேண்டும் . தோட்டந் துரவுகளில் எளிதில் காணப்படும் வகையைத் தமிழில் மூங்கா என்றழைத்தனர்

இந்தக் கீரியை ( Common Mangoose ) வீட்டில் வளர்க்கும் பழக்கம் இருந்தது . பேராசிரியர் மூங்கா , வெருகு , எலி , அணில் ஆகியவை ஒரு பிறப்பு என்று கருதி அவை குட்டி என்ற பெயர் பெறும் என்று கூறியது பொருத்தமின்று. விலங்கு நூற்படி இவை ஒரு பிறப்போ ஓர் இனமோ அன்று . பேராசிரியர் கீரியும் நாவியும் போல் பலவற்றைக் குட்டி என்று சிறு பான்மை கொள்ளலாம் என்றும் , நாவியை மூங்காவின் விகற்பம் என்றும் கொண்டது ஓரளவில் உண்மையடிப்படையுடையது. இவை இரண்டும் ஒரே மென சில விலங்கு நூலார் கருதினர் . மலைபடுகடாத்தில் மலையில் வாழும் விலங்காகத் தீர்வை என்ற பெயரில் ஒருவகைக் கீரி சொல்லப்பட்டுள்ளது .

தீர்வை
தீர்வை

மீமிசைக் கொண்ட கவர் பரிக் கொடுந்தாள்
வரைவாழ் வருடை வன் றலை மாத்தகர்
அரவுக் குறும்பெறிந்த சிறுகட் டீர்வை ” – மலைபடுகடாம் , வரி , 502-504 .

மலையில் வாழும் வருடையோடு , பாம்பின் குறும்பை அடக்கிய சிறிய கண்ணையுடைய தீர்வை என்ற கீரி மலைபடுகடாத்தில் கூறப்பட்டுள்ளதைக் கவனிக்கலாம் . வருடையாடு வாழும் மலையுயரத்தில் காணப்படும் கீரி வகை நாம் தோட்டத் துரவுகளினருகில் காணும் கீரியாக இருக்க முடியாது . மலையிலே வாழும் தனித்த ஒருவகைக் கீரியையே விலங்கு நூலார் கூறியுள்ளனர் . இந்தக் கீரி இளஞ் சிவப்பாகக் காணப்படும் . வாயிலிருந்து ஒரு கறுப்புக்கோடு கழுத்துவரை இருபக்கங்களிலும் காணப்படும் . இதைச் செங்கீரி என்று மலையாளத்தில் வழங்குவர் . தமிழில் பேச்சு வழக்கில் சாரைக்கீரி என்றும் , கன்னடத்தில் கெம்புக் கீரி என்றும் வழங்குவர். இந்தக் கீரிதான் ஆசியாவிலுள்ள கீரி வகைகளில் மிகப் பெரியது. தென்மேற்கு மலைத் தொடர்ச்சிகளில் ( Western Ghats ) உயரத்தில் காணப்படுகிறது . இந்தக் கீரி மிகவும் வல்லமை பொருந்திய தென்றும் , கொடுமை வாய்ந்த தென்றும் மலையாளத்தில் கருதுவர் . ஆதலின் அடங்காத சிறு பிள்ளைகளைப் பயமுறுத்த செங்கீரியைத்தான் இவனை அடக்க விடனும் என்று கூறுவர் . இந்தச் செங்கீரியே தீர்வை என்று சங்க நூல் குறிப்பிடும் கீரியாகும் . அரவின் குறும்பை அடக்குவதில் வல்லது என்று மலைபடுகடாம் கூறுகின்றது .

பாம்பை வெல்லும் விலங்காகத் தமிழ் இலக்கியத்தில் கீரியே கூறப்பட்டுள்ளது . சாரைக் கீரியென்ற பெயர் சாரைப் பாம்பைக் கொல்வதென்று வழங்கியிருக்கலாம் . இந்த மலைவாழ் கீரியை விலங்கு நூலார் The Stripe- necked mangoose என்றும் Hespestes vitticolis என்றும் கூறுவர் . வடமொழியில் தமனிய நகுலம் என்று அழைக்கப்படுவது இதுவே யாகலாம்.

தீர்வை
தீர்வை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Mongoose, Hespestes vitticolis, The Stripe- necked mangoose

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை – மலை 504

பாம்பின் வலிமையை அழித்த சிறிய கண்களையுடைய கீரியும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *