Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மேடை, திண்ணை, 2. மேட்டு இடம், 3. ஒரு மகளிர் விளையாட்டு, 4. ஒரு மரம்,

சொல் பொருள் விளக்கம்

1. மேடை, திண்ணை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

raised verandah, pial, elevated ground, mound, a tree

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தெற்றி உலறினும் வயலை வாடினும் – அகம் 259/13

மேடையிலுள்ள பூஞ்செடிகள் காய்ந்தாலும், வயலைக்கொடி வாடிப்போனாலும்

செறி அரி சிலம்பின் குறும் தொடி மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய – புறம் 36/3-5

செறிந்த உள்ளிடு பருக்கையையுடைய சிலம்பினையும், குறிய வளையினையுமுடைய மகளிர்
பொன்னால் செய்யப்பட்ட கழங்கினால் மேடை போல உயர்ந்த மணல்மேட்டின்மேல் இருந்து விளையாடும்
குளிர்ந்த ஆன்பொருநை நதியின் வெள்ளிய மணல் சிதற.

தெற்றி என்பது மகளிர் விளையாடும் ஒருவகை விளையாட்டு என்றும் கொள்வர்

செறி அரி சிலம்பின் குறும் தொடி மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய – புறம் 36/3-5

செறிந்த உள்ளிடு பருக்கையையுடைய சிலம்பினையும், குறிய வளையினையுமுடைய மகளிர்
பொன்னால் செய்யப்பட்ட கழங்கினால் தெற்றி என்ற விளையாட்டை ஆடும்
குளிர்ந்த ஆன்பொருநை நதியின் வெள்ளிய மணல் சிதற.

ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள்
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என்
அணி இயல் குறு_மகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நற் 184

ஒரே ஒரு மகளை உடையவள் நான்; அவளும்
போர்க்களத்தில் மிக்குச் செல்லும் வலிமையையுடைய கூரிய வேலையுடைய காளையோடு
பெரிய மலைகளினூடே செல்லும் அரிய வழியில் நேற்றுச் சென்றுவிட்டாள்;
இப்பொழுது தாங்கிக்கொள் உன் வருத்தத்தை என்று சொல்கிறீர்! அது
எப்படிச் சாத்தியமாகும்? அறிவுள்ள மக்களே!
நினைத்துப்பார்த்தால் நெஞ்சம் கொதிக்கிறது – மையுண்ட கண்களின்
மணிகளில் வாழும் பாவையானது வெளியில் வந்து நடக்கக் கற்றுக்கொண்டதைப் போல என்
அழகிய சாயலையுடைய சிறுமகள் விளையாடிய
நீல மணி போன்ற நொச்சியையும் தெற்றிக்காயையும் கண்டு

இது இக்காலத்துப் பாண்டி விளையாட்டு

எனப்படும் என்பர்- பொன் கழங்குக்குப் பதிலாக, இன்று
மண் ஓட்டாலான சில்லுவைப் பயன்படுத்துவர்)

இந்தத் தெற்றி விளையாட்டை, மகளிர் மாடத்திலும் விளையாடுவர்.

கதிர்விடு மணியின் கண் பொரு மாடத்து
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் – புறம் 53/2,3

ஒளிவிடுகின்ற மணிகளால் கண்ணைக்கூசவைக்கும் மாடத்தில்
விளங்கிய வளையையுடைய மகளிர் தெற்றி என்னும் விளையாட்டை ஆடும்

இந்தத் தெற்றியை, சிறுவர் விளையாடும் கிச்சுக்கிச்சுத் தாம்பாளம் என்ற விளையாட்டு என்றும் கூறுவர். முதலில் மணலை நீளமாகக் குவிக்கவேண்டும், ஒருவர். ஒரு சிறுகயிற்றுத்துண்டை முடிச்சுப்போட்டு, வலதுகை இருவிரல்களுக்குள் அதைப் பிடித்துக்கொண்டு, இடது கை விரல்களையும் வெறுமனே அதேபோல் பிடித்து, மணல் குவியலின் இரு பக்கங்களிலும் நுழைத்து நுழைத்துச் செல்வார். அப்போது, மணலுக்குள் ஓரிடத்தில் அந்த முடிச்சை ஒளித்து வைத்துவிட்டு, விரல்களை வெளியே எடுப்பார். அடுத்தவர், இரு கைகளையும் கோர்த்து மணல் குவியலில் ஏதாவது ஓரிடத்தில் கைகளை வைத்து மூடுவார். முதலாமவர், சிறிது சிறிதாக அந்த மணலைத் தோண்டி அந்த முடிச்சினை எடுக்கவேண்டும். எடுத்தால் அவருக்கு வெற்றி. இல்லாவிட்டால் மூடியவருக்கு வெற்றி. இத்தகைய விளையாட்டும் மணல் பரப்பில் விளையாடப்படும்.

தெறுவர
தெற்றி பாவை திணி மணல் அயரும்
மென் தோள் மகளிர் – புறம் 283/9-11

வெகுட்சி தோன்ற தெற்றிப்பாவையைத் திணிந்த மணலில் வைத்து விளையாடும்
மெல்லிய தோளையுடைய மகளிர்

என்ற அடிகள் இந்த விளையாட்டைக் குறிக்கும் எனலாம். கிச்சுக்கிச்சுத்தாம்பாளத்தின் முடிச்சு, இங்கே பாவை எனப்படுகிறது எனலாம். இப்படி, ஒரு புன்னைக்காயைக் கொண்டு விளையாடிய ஒரு சிறுமி, பின்னர் அதை மறந்துவிட,
அந்தக் காய் வளர்ந்து பெரிய மரம் ஆகி,அவளுக்குத் தங்கை ஆனது என நற்றிணைப்பாடல் 172 குறிக்கிறது.

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே – நற் 172/1-5

தெற்றி உலறினும் வயலை வாடினும் – அகம் 259/13

என்ற அடியில் காணப்படும் தெற்றி
ஒருவகை மரம் என்று தமிழ்ப் பேரகராதி கூறும்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *