நெடுமிடல் என்பவன் அதிகமான் நெடுமிடல் அஞ்சி
1. சொல் பொருள்
(பெ) ஒரு சிற்றரசன், நெடுமிடல் அஞ்சி இயற்பெயர்
2. சொல் பொருள் விளக்கம்
சிற்றரசர்களில் தகடூரை யரசாண்ட அதிகமான் அரசர் பேர்போனவர். அவர்கள்அதிகமான் என்றும், அதியமான் என்றும் கூறப்பட்டனர். தகடூர் இப்போது தர்மபுரி என்று பெயர் கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள தர்மபுரி வட்டமே பழைய தகடூர் நாடு. தகடூர் அதிகமான் அரசர் தகடூரில் கோட்டைக் கட்டிக் கொண்டு அரசாண்டார்கள். அது அதிகமான் கோட்டை என்று பெயர் பெற்றிருந்தது. அதிகமான் கோட்டை என்பது பிற்காலத்தில் ‘அதமன் கோட்டை’ என்று சிதைந்து வழங்கப்பட்டது. இந்த அதிகமான் கோட்டை தகடூரிலிருந்து (தர்மபுரியிலிருந்து) தென்மேற்கே 5 மைல் தூரத்திலிருக்கின்றது. சேலத்திலிருந்து வடக்கே 29 மைலில் இருக்கிறது.
தகடூரை, அதிகமான் அரசர் பரம்பரை பரம்பரையாக அரசாண்டார்கள். சங்க காலத்தில் அரசாண்ட தகடூர் அதிக மான்களில் மூவர் பெயர் மட்டும் தெரிகின்றது.
- அதிகமான் நெடுமிடல் அஞ்சி,
- அதிகமான் நெடுமான் அஞ்சி,
- அதிகமான் பொகுட்டெழினி
அதிகமான் அரசர்களில் முதன்முதலாக அறியப் படுகிறவன் நெடுமிடல் அஞ்சி என்பவன். சேர நாட்டு அரசனான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (சேரன் செங்குட்டுவனுடைய தமயன்) நெடுமிடல் அஞ்சியை ஒரு போரில் வென்றான் என்று பதிற்றுப்பத்துச் செய்யுள் கூறுகிறது.
இந்த நெடுமிடல் பசும் பூண் பாண்டியனுடைய நண்பனாகவும் சேனைத் தலைவனாகவும் இருந்தான். இந்த அதிகமான் நெடுமிடல் அஞ்சியும் பசும் பூண் பாண்டியனும் நண்பர்கள் என்பது அகம் 162 செய்யுளினால் தெரிகின்றது. துளு நாட்டு வாகைப் பறந்தலை என்னுமிடத்தில் துளு நாட்டுச் சேனாதிபதியாகிய மிஞிலிக்கும் நெடுமிடல் அஞ்சிக்கும் போர் நடந்தது. அந்தப் போரில் நெடுமிடல் அஞ்சி இறந்து போனான்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a chieftain
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
மாண்டனை பலவே போர் மிகு குருசில் நீ
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்
முத்து உடை மருப்பின் மழ களிறு பிளிற
மிக்கு எழு கடும் தார் துய் தலை சென்று
துப்பு துவர் போக பெரும் கிளை உவப்ப
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும்
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும்
எல்லாம் எண்ணின் இடு கழங்கு தபுந
கொன் ஒன்று மருண்டனென் அடு போர் கொற்றவ
நெடுமிடல் சாய கொடு மிடல் துமிய
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து
தடம் தாள் நாரை படிந்து இரை கவரும்
முடந்தை நெல்லின் கழை அமல் கழனி
பிழையா விளையுள் நாடு அகப்படுத்து
வையா மாலையர் வசையுநர் கறுத்த
பகைவர் தேஎத்து ஆயினும்
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே – பதி 32/10
…நெடுமிடல் என்னும் மன்னன் தோற்றோட, அவனது கொடிய வலிமை அழியும்படி,
பெரிய மலையைப் போன்ற யானையோடு பகைவரின் நாடு கெடும்படி அவர் நாட்டில் தங்கி…
தான் செய்த கொடிய போர்த்தொழில் பயன்படாது கெடவே, நெடுமிடல் அஞ்சி என்பான் இறந்தானாக
இவன் அதியமான் நெடுமான் அஞ்சியின் குலத்தவன். இவனது நாடு மிக்க வளம் சிறந்ததாகும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்