Skip to content

சொல் பொருள்

(பெ) சங்க காலத்தில் புகழ்பெற்ற ஒருவன்

சொல் பொருள் விளக்கம்

சங்க காலத்தில் புகழ்பெற்ற ஒருவன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a person of fame during sangam age.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சங்க இலக்கியத்தில் பண்ணன் என்று ஆறு குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் பண்ணன் என்ற
மூன்று பேரைப்பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

1. பாண்டிய நாட்டைச் சேர்ந்த சிறுகுடிக் கிழான் பண்ணன்.
2. சோழநாட்டைச் சேர்ந்த சிறுகுடிக் கிழான் பண்ணன்.
3. சோழநாட்டைச் சேர்ந்த வல்லார் கிழான் பண்ணன்.

1.தனக்கென வாழா பிறர்க்குரியாளன்

பண்ணன் சிறுகுடி படப்பை நுண் – அகம் 54/14

தனக்கென்றேவாழாத பிறர்க்கெல்லாம் உரியவனாகிய
பண்ணன் என்பானது சிறுகுடியைச் சார்ந்த தோட்டத்திலுள்ள

மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் பாடியது.
இவர் நொச்சி நியமங்கிழார் மகனார் என்றும் குறிக்கப்பெறுகிறார்.
இவன் பாண்டியநாட்டுச் சிறுகுடி கிழான் பண்ணனாக இருத்தல்வேண்டும்.

வென்வேல்
இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர்
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த
கழல் கால் பண்ணன் காவிரி வட_வயின்
நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின்- அகம் 177/13-17

வெற்றியையுடைய வேலை
இலையின் முனை நிறம் மாறிச் செந்நிறமடையச் செலுத்தி, பகைவருடைய
மலை போன்ற யானைகளை மிக்க போரின்கண் அழித்த
வீரக்கழல் தரித்த காலினையுடைய பண்ணனது காவிரியின் வடக்கிலுள்ள
குளிர்ந்த குளத்தினை அடுத்துள்ள நெடிய அடிமரத்தினையுடைய மாமரத்தின்

செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் பாடியது.
இவர் செல்லூர் இளம்பொன் சாத்தன் கொற்றன் என்றும்
உறையூர் இளம்பொன் வாணிகன் சாத்தன் கொற்றன் என்றும் குறிக்கப்பெறுகிறார்.
இவன் சோழநாட்டுச் சிறுகுடிக் கிழான் பண்ணன். கொடைச் சிறப்போடு வீரத்திலும் இவன்
சிறந்து விளங்கினான்.

கைவள் ஈகை பண்ணன் சிறுகுடி – புறம் 70/13

கையான் வள்ளிய கொடையையுடைய பண்ணனது சிறுகுடிக்கண்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.
இவன் சோழநாட்டுச் சிறுகுடிக் கிழான் பண்ணன்.

யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய – புறம் 173/1

யான் உயிர்வாழும் நாளையும் பெற்று பண்ணன் வாழ்வானாக.

சிறுகுடிக் கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது.
இவன் சோழநாட்டுச் சிறுகுடிக் கிழான் பண்ணன்.

வலாஅரோனே வாய் வாள் பண்ணன்
உண்ணா வறும் கடும்பு உய்தல் வேண்டின்
இன்னே செல்-மதி நீயே சென்று அவன்
பகை புலம் படரா அளவை நின்
பசி பகை பரிசில் காட்டினை கொளற்கே – புறம் 181/6-10

வல்லார் என்கிற ஊரிடத்தான், வாய்க்கும் வாளையுடைய பண்ணன்,
உண்ணாத வறிய சுற்றம் உண்டு பிழைத்தல் வேண்டுவையாயின்
இப்பொழுதே செல்வாயாக நீ, போய் அவன்
பகைவர் இடத்திற்குச் செல்லா அளவையில் நினது
பசிக்குப் பகையாகிய பரிசிலை நினது வறுமையாய்க் காட்டினையாய்க் கொள்ளுதற்கு

வல்லார் கிழான் பண்ணனைச் சோழநாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார் பாடியது.
இவர் பாடிய இன்னொரு புறப்பாடலில் (புறம் 265) கரந்தைப் போரில் மாய்ந்து நடுகல்லாய் நிற்கும்
ஒருவனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.அவன் இந்தப் பண்ணனாக இருத்தல் வேண்டும் என்பது உரைவேந்தர்
ஔவை அவர்களின் கருத்து.

பெரும்பெயர்
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தி – புறம் 388/3,4

பெரிய புகழையுடைய சிறுகுடிக்கு உரியனாகிய பண்ணனைப் பொருந்தி

சிறுகுடி கிழார் பண்ணனை, மதுரை அளக்கர்ஞாழலார் மகனார் மள்ளனார் பாடியது.
இவன் பாண்டியநாட்டுச் சிறுகுடிக் கிழான் பண்ணன்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *