குறிப்பு:
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
பொருள்
- பஞ்சு
விளக்கம்
பருத்தலால் வந்த பெயர் பருத்தி. பருத்திரள் போல் திரள்தலும் பழுத்தலும் வெடித்தலும் பஞ்சு வாய் திறக்க வெளியேறுதலும் பிளந்து விரிந்து பன்மடங்கு பருமையாய் விரிந்து காணலும் நோக்கின் பருத்திப் பெயர்ப் பொருத்தம் மிக விளங்கும்.
பருத்தி தமிழகத்துப் பழம்பொருள். நூற்றலும் நெய்தலும் பண்டே சிறக்க நடந்த தொழில், பெரும்பாலும் அத்தொழில் மகளிர் ஈடுபட்டிருந்தனர் என்பது “பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன” எனவரும் புறப்பாடலால் (125) விளங்கும். அதிலும் கணவனை இழந்த கைம்மை மகளிர் அத்தொழில் ஈடுபட்டனர் என்பது விளங்குகிறது. “ஆளில் பெண்டில் தாளில் செய்த, நுணங்கு நுண் பனுவல்” என்கிறது நற்றிணை (353)
“கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த மூடைப் பண்டம் இடை நிறைந்து”
எனப் புறநானூறும் (393) “பொதிமூடைப்போரேறி” ஆடும் நாயும் ஆடும் ஆட்டத்தைப் பட்டினப்பாலையும் கூறுகின்றன. ‘பொதிமூடை’ என்பது பருத்தி மூடையைப் பொதுவகையிலும் பிறவற்றைச் சிறப்பு வகையிலும் சுட்டும்.
பருத்தி என்பதற்குப் பாரம் என ஒரு பெயர் உண்டு என்பதைக் குறிஞ்சிப் பாட்டுக் கூறும் (92).
பருத்திப் பஞ்சைச் செறித்து வைத்த குடுவை ‘பருத்திக் குண்டிகை’ எனப்படும்.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1. பருத்தி பெண்டின் பனுவல் அன்ன - புறப்பாடல் 125 2. “கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த மூடைப் பண்டம் இடை நிறைந்து” - புறப்பாடல் 393
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்