Skip to content

சொல் பொருள்

(பெ) பல இன்னிசைக்கருவிகளின் தொகுதி,

சொல் பொருள் விளக்கம்

பல இன்னிசைக்கருவிகளின் தொகுதி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

group of musical instruments, orchestra

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கழைக்கூத்தாடிகளின் ஆட்டத்தில், உயரத்தில் நீளவாக்கில் கட்டிய கயிற்றின்மேல் ஒருவர் நடக்கும்போது
கீழிருப்போர் பலவித இசைக்கருவிகளை முழக்குவர். அது பல்லியம் எனப்படும்.

கழை பாடு இரங்க பல்லியம் கறங்க
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/1,2

குழல்கள் பக்கத்தே இசைக்க, பலவகை இன்னிசைக் கருவிகள் முழங்க,
ஆட்டக்காரியான கழைக்கூத்தி நடந்த வளைந்த முறுக்கேறிய வலிய கயிற்றில்

பருவப்பெண்கள் காதல்வயப்பட்டுச் சுணங்கியிருக்கும்போது, அவரின் தாயர், அவர்களைப் பேய்பிடித்துவிட்டதாக எண்ணி, வேலனை அழைத்து வெறியாட்டு அயரச்செய்வர். அப்பொழுது பலவித இசைக்கருவிகளை முழக்குவர். அது பல்லியம் எனப்படும்.

மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ
செல் ஆற்று கவலை பல்லியம் கறங்க
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி
பேஎய் கொளீஇயள் இவள் எனப்படுதல்
நோ_தக்கன்றே தோழி – குறு 263/1-6

ஆட்டின் கழுத்தை அறுத்தும், தினையின் பலியரிசியைப் படைத்தும்,
மக்கள் செல்லும் பாதையின் கவர்த்த வழிகளில் பல் வித இசைக்கருவிகள் முழங்க
தாம் வெளிப்படுதல் அன்றி நமது நோய்க்கு வேறு மருந்தாக ஆகாத
வேறான பெரிய தெய்வங்கள் பலவற்றைச் சேர வாழ்த்தி,
பேய் பிடித்துவிட்டது இவளுக்கு என்று ஊரார் சொல்லுவது
வருந்துவதற்கு உரியதாகும் தோழி!,

போரில் காயம்பட்டு வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட மறவரைக் காத்தல்வேண்டி, இறைவனைத் தொழும்போது பலவித இசைக்கருவிகளை முழக்குவர். அது பல்லியம் எனப்படும்.

தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ
வாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க
கை பய பெயர்த்து மை இழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசை மணி எறிந்து காஞ்சி பாடி
நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ
காக்கம் வம்மோ காதல் அம் தோழீ
வேந்து உறு விழுமம் தாங்கிய
பூம் பொறி கழல் கால் நெடுந்தகை புண்ணே – புறம் 281

இனிய கனிகளைத் தரும் இரவமரத்தின் தழையுடனே, வேப்பிலையும் சேர்த்து மனையின் கூரை இறைப்பில்
செருகி
வளைந்த கோட்டையுடைய யாழும் பலவாகிய வாச்சியங்களும் இயம்ப
கையை மெல்ல எடுத்து மையாகிய மெழுகினை இட்டு
வென்சிறுகடுகைத் தூவி, ஆம்பல்குழலை ஊதி
ஓசையைச் செய்யும் மணியை இயக்கி காஞ்சிப் பண்ணைப் பாடி
நெடிய மனையின்கண் நறுமணம் கமழும் அகில் முதலியவற்றைப் புகைத்து
காப்போமாக வருக! அன்புடைய தோழியே!
வேந்தனைக் குறித்து ச் செய்யப்பெற்ற இடுக்கனைத் தான் ஏற்றுக் காத்த
பூத்தொழில் பொறிக்கப்பட்ட கழலையணிந்த காலையுடைய நெடுந்தகையாகிய தலைவனுக்கு உண்டாகிய
புண்களை.

மன்னர்களிடம் பரிசில்வேண்டிச் செல்லும் இரவலர்கள்,பாணர்கள்,கூத்தர்கள் ஆகியோர் மன்னனை மகிழ்விக்கப் பலவித இசைக்கருவிகளை முழக்குவர்.

பல்லிய கோடியர் புரவலன் பேர் இசை
நல்லியக்கோடனை – சிறு 125,126

பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தரின் புரவலனும் ஆகிய பெரிய புகழையுடைய
நல்லியக்கோடனை

மழைக்காலத்தில் மழைபெய்து ஓய்ந்த பின்னர், நீர்நிலைகளிலுள்ள தவளைகள் எல்லாம் ஒன்றுசேரக் கத்தும். அவ்வொலி பல்லியம் முழங்கும் ஒலிபோல் இருப்பதாக அகநானூறு கூறுகிறது.'

படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகு வாய் தேரை
சிறு பல்லியத்தின் நெடு நெறி கறங்க – அகம் 154/1-3

மிக்க மழை சொரிந்தமையால் பயன் மிக்க முல்லைநிலத்தே
ஆழமாகிய நிரினையுடைய பள்ளங்களிலுள்ள பிளந்த வாயினையுடைய தேரைகள்
சிறிய பலவாகிய வாச்சியங்களைப் போல நீண்ட வழியெல்லாம் ஒலிக்கவும்

திருமுருகாற்றுப்படியில் முருகன் பல்லியத்தன் எனப்படுகிறான்.

குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன் – திரு 209

குழலை ஊதுபவன், கொம்பைக் குறிப்பவன், சிறிய இசைக்கருவிகளை இசைப்பவன்.

எனவே இந்தப் பல்லியத்தில் குழலும், கொம்புகளுமாகிய ஊதுகருவிகள் சேரா. எனவே பல்லியத்தில் பெரும்பாலும் பெரிதும் சிறிதுமாகிய தோற்கருவிகளே வாச்சியங்களாக அமையும் எனத் தெளியலாம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *