Skip to content

சொல் பொருள்

(பெ) 1. எருது, காளை, 2. வட்ட வடிவக் கட்டில், 3. வட்ட வடிவமான விளக்குத் தகழி, வட்ட அகல், 4. கஞ்சதாளம், 5. வள்ளம், வட்டில், கிண்ணி,, 6. வட்டம், வட்ட வடிவப்பொருள், 7. தேர், 8. வட்டத்தோல், 9. குதிரைச்சேணம், 10, வட்டக்கண்ணாடி

சொல் பொருள் விளக்கம்

1. எருது, காளை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bull, bullock, Circular bedstead or cot, dish like bowl of a lamp, cymbals, a dish for use in eating and drinking, a large cup, circle, circular object, chariot, Circular piece of hide used in making a shield, saddle, circular mirror or glass

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள்
வாள் முக பாண்டில் வலவனொடு தரீஇ – சிறு 259,260

குதிரையின் செலவினைப் பின்னே நிறுத்தும் வலிமையுள்ள கால்களையும்,
ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து,

தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள்
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல்
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப
புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – நெடு 115-123

பத்துக்கள் நான்கு(நாற்பது ஆண்டு)சென்ற, முரசென்று மருளும் வலிய கால்களையும்,
போரில் புகழ்ந்து போற்றப்படும் உயர்ந்த அழகினையும், புகர்நிறைந்த மத்தகத்தினையுமுடைய,
போரிட்டு வீழ்ந்த யானையின், தானாக வீழ்ந்த கொம்புகளின் இரண்டுபுறங்களையும் சீவி,
கனமும் செம்மையும் ஒப்ப, திறமையான தச்சன்
கூரிய சிற்றுளியால் குடைந்து செதுக்கிய, பெரிய இலைத்தொழிலை இடையே இட்டு,
தூங்கும் நிலையிலுள்ள மகளிரது புடைத்து நிற்கும் முலையை ஒப்பப்
பக்கம் உருண்டிருந்த குடத்தையுடையவாய், (குடத்திற்கும் கட்டிலுக்கும்)நடுவாகிய இடம் ஒழுக மெல்லிதாய் திரண்டு,
உள்ளியின் கெட்டியான பூண்டு(போன்ற உறுப்புக்களை)அமைத்த கால்களைத் தைத்துச் சமைத்து
அகன்ற அளவுகளைக் கொண்ட பெரும் புகழ்(பெற்ற) வட்டக்கட்டில்

பாண்டில் விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 175

வட்டமான தகழியையுடைய விளக்கில் பருத்த தீக்கொழுந்து எரிய

அகல் போல் இடம் விரிந்து, ஒரு பக்கத்தே குவிந்து, சுரைபுடைத்தாய் உள்ளே திரி செறிக்கப்பட்ட கால் விளக்கு பாண்டில் விளக்கு எனப்படும். இவ்விளக்கு சேலம் மாவட்டத்திலும், வட ஆற்காடு மாவட்டத்திலும் இக்காலத்து மண்ணெண்ணெய் எரிக்கும் பேரொளி விளக்குகள் வருவதற்கு முன் வழக்கில் இருந்தன. மூங்கில்களை உயரமாக நட்டு அவற்றின் தலையை மூன்று வரிச்சல்களாகப் பகுத்து அவற்றின் இடையே மட்பாண்டிலைச் செறித்துப் பருத்த திரியிட்டு எண்ணெய் பெய்து எரிப்பர். கூத்தாடும் களரியின் வலப்பக்கத் தொன்றும் இடப்பக்கத்து ஒன்றுமாக இரண்டு பாண்டில்கள் நிறுத்தப்படும். திரி முழுவதும் எரிந்து போகா வண்ணம் தடுத்தற்கே கரை பயன்படும்.

நன்றி : முத்துக்கமலம் – சங்க இலக்கியத்தில் பல்வேறு வகை விளக்குகள் – முனைவர் தி. கல்பனாதேவி

நன்றி: https://dosa365.wordpress.com/tag/பாண்டில்-விளக்கு/

நுண் உருக்கு_உற்ற விளங்கு அடர் பாண்டில் – மலை 4

நன்றாக உருக்கப்பட்டு ஒளிர்கின்ற தகடாகத் தட்டப்பட்ட கஞ்சதாளமும்

பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் – நற் 86/3

வள்ளம் போன்ற பகன்றை மலரும்

பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் – ஐங் 310/1

பொன்னாற் செய்த புதிய வட்டவடிவக் காசுக்களை வரிசையாகக் கோத்த வடம் தவழும் அல்குலையும்

பொன் செய் பாண்டில் பொலம் கலம் நந்த
தேர் அகல் அல்குல் – ஐங் 316/1,2

பொன்னாற் செய்த வட்டக் காசுகளைக் கோத்த பொன்னணிகள் பொலிவிழக்கத்
தேர் போன்ற அகலமுடைய அல்குலில்

எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என – பதி 64/9,10

வேற்படையைக் கொன்று கொணரப்பட்ட, கொய்யப்பட்ட பிடரியினைக் கொண்ட குதிரைகளையும்,
அசைகின்ற தேர்களையும், அவற்றுக்குரிய அணிகளை அணிந்து கொடுங்கள் என்று கூறும்

புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில் – பதி 74/10,11

புள்ளி மானின் தோலை உரித்து, அதினின்றும் ஊனை நீக்கி,
தீய பாகங்களைக் களைந்துபோட்டு, எஞ்சிய வட்டமாக அறுத்த ஒளிவிடும் தோலின்

மீன் பூத்து அன்ன விளங்கு மணி பாண்டில்
ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டு – பதி 90/35,36

விண்மீன் பூத்திருப்பதைப் போன்ற ஒளி விளங்கும் மணிகள் தைக்கபெற்ற சேணத்தையும்,
அழகிய கவரி மயிராலாகிய தலையாட்டத்தையும் உடைய பாய்ந்து செல்லும் குதிரையின் மேலேறி

பாசிலை பொதுளிய புதல்-தொறும் பகன்றை
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர – அகம் 217/6-8

பசிய இலை நெருங்கிய புதல்தோறும், பகன்றையானது
நீலம் ஊட்டப்பட்ட தோலினது நிறம்மறையும்படி பதித்த
தோல்கேடகத்தில் பதித்த வட்டக்கண்ணாடி போல வெள்ளியனவாக மலர

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *