Skip to content

1. சொல் பொருள்

(பெ) இவனது பெயர் பிட்டங்கொற்றன், சங்ககாலக் குறுநில மன்னன், வள்ளல் குதிரைமலைப் பகுதி இவன் நாடு.

2. சொல் பொருள் விளக்கம்

மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்
பரலுடை முன்றில் அங்குடிச் சீறூர்
எல்அடிப் படுத்த கல்லாக் காட்சி
வில்லுழுது உண்மார் நாப்பண் ஒல்லென
5 இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப
வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி
புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்
மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்
குறுகல் ஓம்புமின் தெவ்விர்; அவனே
10 சிறுகண் யானை வெண்கோடு பயந்த
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து
நார்பிழிக் கொண்ட வெம்கள் தேறல்
பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி
நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு
15 இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்
விசைத்துஎறி கூடமொடு பொருஉம்
உலைக்கல் அன்ன வல்லா ளன்னே. புறம். 170. 14-16

இப்பாடலில் பிட்டன் என்னும் மன்னன் பகைவர்க்குக் கூடத்தின் வலிமையைப் போன்றவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட குறிப்பு மூலம் கூடம் அதாவது சுத்தியல் கொல்லனது முக்கியமான கருவிகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளதை அறிய முடிகின்றது. பொதுவாகக் கொல்லன் உலைக்கல்லில் இரும்பைச் சூடாக்கி, தனக்கு வேண்டிய வடிவத்தில் அதனை அடித்து வடித்தெடுப்பதற்குச் சம்மட்டியைப் பயன்படுத்துவதைத் தற்காலத்திலும் காணமுடிகின்றது.

இப்பாடலில் பிட்டன் என்னும் மன்னனின் ஆண்மை உலைக்கல்லின் உறுதிக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. அதாவது பிட்டங்கொற்றன் இரும்பைப் பயன்படுத்தும் கருங்கைக் கொல்லனின் உலையில் உள்ள உலைக்கல்(பட்டைக்கல்) போன்று பகைவர்க்கு வலிய ஆண்மை உடையவன் என்பதாகும்.

இவனது பெயர் பிட்டங்கொற்றன் என்பதாகும், இவனைப் பற்றிய பல செய்திகளைப் புறம் 168 முதல் 172 வரை
உள்ள புறப்பாடல்களில் காணலாம். அப்பாடல்களில் இவனை, கருவூர்க் கதப்பிள்ளை, காவிரிப்பூம்பட்டினத்துக்
காரிக்கண்ணனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், வடமவண்ணக்கன் தாமோதரனார் ஆகியோர் வாழ்த்திப்
பாடியுள்ளனர். அகம் 77-இல் மருதனிள நாகனாரும், அகம் 143-இல் ஆலம்பேரிச் சாத்தனாரும் இவன் சிறப்புகளை
எடுத்தோதியுள்ளனர். இவன் சேரமான் கோதைக்குப் படைத்தலைவன். குதிரை மலைப்பகுதியை ஆண்டவன்.
பேராண்மையும், வள்ளண்மையும் ஒருசேரப் பெற்றவன்.

குதிரை மலை
குதிரை மலை

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பிட்டங்கொற்றனைக் காண விரும்பினார். ஆனால், அவர் பிட்டங்கொற்றனைக் காண முயன்ற பொழுதெல்லாம் அவன் போருக்குச் சென்றிருந்தான். ஒருமுறை, அவனை நேரில் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்போது, அவன் மீண்டும் போருக்குப் போவதற்குமுன் தனக்குப் பரிசு கொடுத்து அருள வேண்டுமென்று அவர் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

நும்படை செல்லுங் காலை அவர்படை
எடுத்தெறி தானை முன்னரை எனாஅ
அவர்படை வருஉம் காலை நும்படைக்
கூழை தாங்கிய அகல்யாற்றுக்
5 குன்றுவிலங்கு சிறையின் நின்றனை எனாஅ,
அரிதால் பெருமநின் செவ்வி என்றும்
பெரிதால் அத்தைஎன் கடும்பினது இடும்பை
இன்னே விடுமதி பரிசில் வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
10 இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின்
பெருமரக் கம்பம் போலப்
பொருநர்க்கு உலையாநின் வலன் வாழியவே. – புறம் 169

உம் படை பகைவரோடு போரிடப் போகும் பொழுது, வேல் முதலியவற்றை எடுத்து எறியும் பகைவரின் படைக்கு முன் நிற்பாய். பகவரின் படை உம் படையோடு போரிட வரும் பொழுது, உம் படையின் அணியைத் தாங்குவதற்காக, அகன்ற ஆற்றைத் தடுத்து நிறுத்தும் மலைபோல் அதனைத் தடுத்து நிற்பாய். அதனால், பெரும, உன்னைக் காண்பதற்கு ஏற்ற காலம் கிடைப்பது எந்நாளும் அரிது. என் சுற்றத்தாரின் துன்பம் பெரிதாகையால், இப்பொழுதே பரிசு அளித்து என்னை அனுப்புவாயாக. வெல்லும் வேலையுடைய இளம் கோசர்கள் பலரும் படைப் பயிற்சி செய்யும் பொழுது வேலெறிந்து பழகும் அகன்ற இலையுடைய முருக்க மரத்தூணால் ஆகிய இலக்கு போல் பகைவர்களைக் கண்டு மனங்கலங்காத உன் வெற்றி வாழ்க.

குதிரை மலை
குதிரை மலை

தமிழகம் முழுதும் பிட்டங்கொற்றனின் புகழ் பேசப்படுவதைக் கண்ட புலவர் கருவூர்க் கதப்பிள்ளை அவனைக் காண வந்தார். இப்பாடல், அவ்வமயம் அவரால் இயற்றப்பட்டது.

அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூழி
5 நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரல் சிறுதினை;
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
10 வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்
சாந்த விறகின் உவித்த புன்கம்;
கூதளம் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ, கூர்வேல்
15 நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும,
கைவள் ஈகைக் கடுமான் கொற்ற,
வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்
20 பாடுப என்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே. – புறம் 168

காட்டுப் பசுவிடம் கறந்த நுரையுடன் கூடிய இனிய பாலில் மான் தசையை வேகவைத்தப் புலால் மணமுள்ள அழகிய நிறமுள்ள பானையின் வெளிப்புறத்தைக் கழுவாமல் உலைவைத்து, சந்தன விறகால் சமைத்த சோற்றை வெள்ளரி சிறந்து விளங்கும், காட்டு மல்லிகை மணக்கும் முற்றத்தில் வளமான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்னும், குதிரை மலைத் தலைவனே! கூர்மையன வேலையும், பச்சிலைக் கொடியுடன் தொடுத்த வேங்கை மலர் மாலையையும் அணிந்து கூரிய அம்பைச் செலுத்துவதில் பயிற்சி பெற்ற வீரர்களுக்குத் தலைவா! கையால் வழங்கும் ஈகையும் விரைந்து செல்லும் குதிரைகளையும் உடைய தலைவா! உலகத்து எல்லையுள், தமிழகம் முழுதும் கேட்க, இரவலர்க்குப் பரிசளிக்காத மன்னர்கள் நாள்தோறும் நாணுமாறு நன்கு பரவிய உன் பழியற்ற புகழைப் பொய் பேசாத, நடுவு நிலை தவறாத நாவுடையோர் தங்கள் நாவு வருந்துமாறு புகழ்ந்து உன்னை பாடுவர் என்று பரிசிலர் கூறுவர்.

Kudremukha
Kudremukha

பிட்டங்கொற்றனைக் காண்பது அரிதாக இருப்பதாகக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியதை 169- ஆம் பாடலில் கண்டோம். அப்பாடலை இயற்றிய பிறகு, பிட்டங்கொற்றனை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாருக்குக் கிடைத்தது. அவனும் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாருக்குப் பெருமளவில் பரிசுகள் அளித்து அவரை மகிழ்வித்தான். பிட்டங்கொற்றனின் அன்பாலும் வண்மையாலும் பெருமகிழ்ச்சி அடைந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், அவன் தனக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் வேண்டியது அளிக்கும் தன்மையவன் என்றும் அவன் எவ்வித துன்பமும் இல்லாமல் வாழ வேண்டுமென்றும் இப்பாடலில் வாழ்த்துகிறார்.

இன்று செலினுந் தருமே சிறுவரை
நின்று செலினுந் தருமே; பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
5 யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்
தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப
அருந்தொழில் முடியரோ திருந்துவேல் கொற்றன்
இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
10 அருங்கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே;
அன்னன் ஆகலின் எந்தை உள்ளடி
முள்ளும் நோவ உற்றாக தில்ல!
ஈவோர் அரியஇவ் உலகத்து
15 வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே! – புறம் 171

இன்று சென்றாலும் (பரிசுகள்) தருவான்; சில நாட்கள் கழித்துச் சென்றாலும் (பரிசுகள்) தருவான். அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து நாள்தோறும் சென்றாலும், “முன்பே தந்தேன்” என்று கூறாமல், யாம் வேண்டியவாறு தவறாமல் எங்கள் வறுங்கலங்களை நிரப்புவான். தன் அரசன் விரும்பியவாறு, அவன் மகிழ , திருந்திய வேலையுடைய பிட்டங்கொற்றன் தன்னுடைய அரிய போர்த்தொழிலை முடிப்பானாக. பெரிய கூட்டமாக உள்ள, சினமுடைய காளைகளைத் தொழுவத்தோடு கேட்டாலும், களத்தில் மிகுதியாக இருக்கும் நெற்குவியலைக் கேட்டாலும், அரிய அணிகளை அணிந்த யானைகளைக் கேட்டாலும், பெருந்தன்மையுடைய பிட்டங்கொற்றன் எமக்கு மட்டுமல்லாமல் பிறர்க்கும் கொடுக்கும் தன்மை உடையவன். ஆகவே, எம் தந்தை போன்ற பிட்டங்கொற்றனின் காகல்களில் முள்கூடக் குத்தி வலி உண்டாக்காது இருக்க வேண்டும். ஈவோர் அரிதாக உள்ள இவ்வுலகில், வழ்வோரை வாழவைக்கும் பிட்டங்கொற்றனின் முயற்சி வாழ்கவே.

மாணிக்க மணிகள் பிட்டன் நாட்டிலும் , வல்வில் ஓரியின் கொல்லிக் குடவரையிலும் கிடைத்தவை .

“ ஐவனங் காவலர் பெய்தீ நந்தின் ஒளிதிகழ்திருந்துமணி நளியிருளகற்றும் வன்புல நாடன் வயமான் பிட்டன் ” ( புறம் -172 )

ஐவனம்‌ காக்கும்‌ காவலர்‌ சுடு தீ ஒளி குறையுமானால்‌ ஒளியுடையை மணிகள்‌ இருளை அகற்றும்‌ மலை நாட்டவன்‌ பிட்டன்‌.

புகழூர் மலை சமணர் படுக்கை இரண்டில் தமிழி கல்வெட்டில் பிட்டன் என்றும், கொற்றன் என்றும் தனித்தனியே பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பேராற்றல்‌ பெற்றுத்‌ திகழ்ந்த பிட்டன்‌ பெருங்‌ கொடை வள்ளலாகவும்‌ விளங்கினான்‌.

வசையில்‌ போராவது, படைமடம்‌ படாமைப்‌ பெரும்‌ போர்‌ அகும்‌; படைமடம்‌ படின்‌ வருவது வசையாம்‌; ஆதலின்‌, பிட்டனை “வசையில்‌ வெம்போர்‌ வானவன்‌ மறவன்‌ என்றனர்‌.

வானவன் மறவன் என்னும் தொடர் சேரனின் படைத்தலைவனைக் குறிக்கும். பிட்டன் என்னும் தலைவன் வானவன் மறவன் எனக் குறிப்பிடப்படுகிறான்.

இவன் நறவு என்னும் ஊரினன். சிறந்த வில்வீரன்.

சிறந்த வாள் வீரனும் ஆவான். அத்துடன் சிறந்த கொடைவள்ளலாகவும் விளங்கினான். இவனது நாடு குதிரைமலைப் பகுதி. எனவே நறவு என்னும் ஊரும் குதிரைமலைப் பகுதியில் இருந்தது என்பது புலனாகிறது.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a chieftain of sangam period

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வானவன் மறவன் வணங்கு வில் தடக்கை
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன்
பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த
திருந்து இலை எஃகம் போல – அகம் 77/15-18

சேரன் படைத்தலைவனாகிய வளைந்த வில்லைப் பெரிய கையில் கொண்ட
குறையாத கள்ளினது மிக்க மகிழ்ச்சியை உடைய பிட்டன் என்பான்
பகை மன்னரது அரிய போரில் உயர்த்திய
திருந்திய இலைத்தொழிலையுடைய வேல் போல

1
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக்
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின்,
நீடு சினை வறிய ஆக, ஒல்லென
2
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு, 5
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச்
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும்
3
”வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய!
சேறும்” என்ற சிறு சொற்கு இவட்கே,
4
வசை இல் வெம் போர் வானவன் மறவன் 10
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்,
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன்
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த
தண் கமழ் நீலம் போல, 15
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே. – அகம் 143/12,13

தப்பாது வென்றி வாய்க்கும் வாளினையும் புனைந்த கழலினையும் உடைய பிட்டன் என்பானது
மேகம் தவழும் உயர்ந்த உச்சியினையுடைய குதிரை மலையின் பக்க வரையில்

மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன்/குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே – புறம் 170/8,9

வன்புல நாடன் வயமான் பிட்டன்/ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை – புறம் 172/8,9

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *