Skip to content

சொல் பொருள்

(வி) 1. முறையின்றி இரு, 2. மறி, மடி, திரும்பு, பின்னோக்கி வா, 3. மாறுபட்டுக்கிட, 4. இறந்துபோ, 5. வழிதவறு, 6. துள்ளு, 7. தலைகீழாய் மாறு, முற்றிலும் தன்மை மாறு, 8. அசை, புடைபெயர், 9. திகை, மருள்

சொல் பொருள் விளக்கம்

1. முறையின்றி இரு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be irregular, misplaced, out of order, return, recede, lie in disorder, die, lose the way, leap, jump as fish, complete change in form, aspect, colour or quality, move, get confused, shocked

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
—————– ——————————-
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் – திரு 47-51

காய்ந்து போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும்,
சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், கொடிய பார்வையினையும்,
————— ——————————-
(கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்

முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி – பெரும் 215

அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடையவாகி மறிந்த வாயினையுடைய முள்ளி

கழுதை
குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின் – அகம் 207/5,6

கழுதைகளின்
தேய்ந்த குளம்பு உதைத்தலால் பரல்கற்கள் மாறுபட்டுக்கிடக்கும் வழியாய

பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என
பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை – கலி 3/14,15

இவளுடன் சேர்ந்திருப்பதை நீ விட்டுவிட எண்ணினால், இறந்துவிடுவாள் இவள் என்று
மிகவும் பணிந்து நின்று வேண்டிக்கொள்ளவும், பிரிவதற்குரிய பல வழிகளை ஆராய்ந்து பார்க்கிறாய்

பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான்
வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர்
ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க – பரி 19/58-61

தான் பிறந்த சுற்றத்தாரினின்றும் பிரிந்து ஓர் அறியா இளம்பெண்
செறிவான பாறைக்கற்களுக்கு இடையிடையே புகுந்து, வழிதவறி, நான்
வந்த வழியை மறந்துவிட்டேன் என்று தன் பெற்றோரை,
“ஏஎ ஓஒ” என்று தன் அவர் கேட்கும்படி செய்ய,

தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும் – பதி 13/1,2

பசுக்கூட்டங்கள் கிடைபோட்ட வயல்வெளிகளில் ஆரல்மீன்கள் துள்ளிவிளையாடவும்

வட திசையதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின்
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே – புறம் 132/7-9

வட திசைக்கண்ணதாகிய வானைப் பொருந்தும் இமய மலையும்
தென் திசைக்கண் ஆய் குடியும் இல்லையாயின்
கீழ் மேலதாகிக் கெடும் இந்தப் பரந்த இடத்தையுடைய உலகம்

கொல் களிற்று உரவு திரை பிறழ அ வில் பிசிர
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர – பதி 50/8,9

கொல்லுகின்ற களிறுகள் வலிமையுள்ள கடலலைகளாய் நடந்துவர, அழகிய வில்கள் பிசிர் போல் விளங்க,
உயர்ந்த தோலாகிய கேடகங்களுக்கு மேல்பக்கத்தில் வேல்முனைகள் மீன்களாய் மின்னியொளிர,

பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் – பதி 78/10

கண்டார்க்கு அச்சத்தை உண்டுபண்ணும் பகைவரை மருண்டு நோக்கும் பார்வையினையும் பல இயங்களையும்
உடைய பகைவீரர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *