Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஈன்றணிமை, 2. அண்மையில் மழை பெய்தது, 3. அண்மையில் கதிர்விட்டது, பிஞ்சுத்தன்மை, 4. புதியது, 5. கசடு, 

சொல் பொருள் விளக்கம்

1. ஈன்றணிமை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Recency of delivery, as of a woman, (place) that had rains recently, recently formed ear of grain, greenness as of unripe fruit, raw, fresh, rubbish

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல – புறம் 68/8

ஈன்றணிமை பொருந்தி அது தீர்ந்த குழந்தைக்குச் சுரக்கும் முலை போல

புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறு 132

ஈன்றணிமையையுடைய நாய் ஒலியெழுப்பும் புன்மையுடைய அடுக்களையில்,

இரும் புனிற்று எருமை பெரும் செவி குழவி – நற் 271/1

கரிய, அண்மையில் ஈன்ற, எருமையின் பெரிய செவியினையுடைய கன்று,

வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி
புகர் முகம் சிதைய தாக்கி களிறு அட்டு – நற் 383/3,4

மசக்கை நோயால் வாடிய ஈன்றணிமையான பெரிய பெண்புலிக்குப் பசித்ததாக, வலிய ஆண்புலி
புள்ளிகளையுடைய முகம் உருக்குலைந்துபோகத் தாக்கிக் களிற்றினைக் கொன்று

கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில் – நற் 290/2

கன்றை உடைய அண்மையில் ஈன்ற பசு தின்றுவிட்டுப்போன மிச்சத்தை

மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க – அகம் 21/17,18

மெலிந்த, அண்மையில் ஈன்ற, அழகிய பெண்நாய் பசியுற்றது என, பசிய கண்ணை உடைய
ஆண் செந்நாய் ஆண் காட்டுப்பன்றியைத் தாக்க,

மென் மயில் புனிற்று பெடை கடுப்ப – புறம் 120/6

மெல்லிய மயிலினது ஈன்றணிய பேடையை ஒப்ப

புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு – நற் 329/4

அண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகப் பருத்த புள்ளிகளையுடைய முதிய பருந்தானது

நிறை நீர் புனிற்று புலம் துழைஇ ஆனாய்
இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடை – நற் 193/3,4

நிறைந்த நீருள்ள புதிதாய் மழைபெய்த நிலங்களில் புகுந்து, அத்துடன் நிற்காமல்
எமது பெரிய ஊர்ப்புறத்தையும் சூழவரும் பெரிய குளிர்ந்த வாடைக்காற்றே!

துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி – நற் 206/1

மெல்லிய பஞ்சினைத் தலையிலே கொண்டு பிஞ்சுவிட்டிருக்கும் கதிர்கள் பால்பிடித்துத் தலைசாய்க்க

புயல் புறந்தந்த புனிற்று வளர் பைம் காய்
வயலை செம் கொடி – ஐங் 25/1,2

மழையினால் பேணி வளர்க்கப்பட்ட இளமையான வளர்கின்ற பச்சையான காயையுடைய
வயலையின் சிவந்த கொடியை

செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்று கதிர் – அகம் 156/3

செழுமை வாய்ந்த வயலிலுள்ள நெல்லின் சிவந்த அரிகளையுடைய இளமையான கதிரை

பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல் – புறம் 99/6

பூ நிறைந்த காவினையும், புதிய ஈரம் புலராத புலாலையுடைய நெடிய வேலினையுமுடைய

புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ – மலை 49,50

(நடந்துவந்த)வருத்தத்தைக் கைவிட்டு அமர்ந்திருந்த புதுமைப்பொலிவு இல்லாத(தளர்ந்த) தோற்றத்தையுடைய,
அணிகலன்களைப் பெறும் கூத்தர் குடும்பத்திற்குத் தலைவனே,

புயல் புனிறு போகிய பூ மலி புறவின் – மலை 120

மழையால் கசடுகள் நீக்கப்பட்ட, பூக்கள் நிறைந்த காட்டுநிலத்தில்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *