Skip to content
புல்வாய்

புல்வாய் என்பது இரலை மான்

1. சொல் பொருள்

(பெ) இரலை மான்,

2. சொல் பொருள் விளக்கம்

தமிழ் நாட்டில் வாழ்ந்த மான்களின் முக்கியமான எல்லா மான் வகைகளையும் சங்க நூல்கள் கூறுவது வியப்பைத் தருகின்றது . இரலை ( Indian Antilope ) , நவ்வி ( Indian gazelle ) , மரையான் ( Blue Bull ) , உழை ( Spotted Deer ) , கடமா ( Sambur ) ஆகிய முக்கிய மான் வகைகள் சங்க இலக்கியங்களில் தனித் தனியாகக் கூறப்பட்டிருக்கின்றன . ஆனால் பிற்காலத்து இலக்கியங்களிலும் நிகண்டுகளிலும் இவைகளைப் பிரித்துணராது குழப்பிவிட்டிருப்பதைக் காண்கிறோம் . சங்க காலத்தில் இருந்த மானினங்கள் விலங்கு நூற்படி இரு இனங்க அடங்கும். ஏற்கெனவே விளக்கப்பட்டிருக்கின்றது . இரலை மானினம் என்பது ஓரினம் . இதில் இரலை , நவ்வி , மரையான் வகைகள் அடங்கும் . கலை மானினம் என்பது மற்றோரினம் . இதில் உழை , கடமா வகைகள் அடங்கும் . தொல்காப்பியத்தின் வழி இந்த மானினங்களைப் பழந்தமிழர் எந்த முறையில் உணர்ந்திருந்தனரென்று ஆராய்வது பயன் தரும் . தொல்காப்பிய மரபியலில் ,

யாடுங் குதிரையு நவ்வியும் உழையும்
ஒடும் புல்வா யுளப்பட மறியே
என்று வரும் சூத்திரத்திற்கு ( தொல் – மரபு – கஉ )

உரை கூறும் பேராசிரியர் நவ்வியும் உழையும் புல்வாயும் அடங்குமன்றே அவற்றை மூன்றாக ஓதியதேன் என்று தாமே கேள்வி கேட்டு விடை கூறுவது போலப் புல்வாயில் மடனுடைய நவ்வி யெனவும் இடைநிகரன உழை யெனவும் கொள்க என்று எழுதுகிறார் . குதிரை யானை போன்று முற்றிலும் வேற்றுமை கொண்ட விலங்கல்லவாயினும் , புல்வாய் , நவ்வி , உழையென்பனமானினத்தில் அடங்குமென்றும் மூன்றையும் ஒரே மானாகவும் பேராசிரியர் கருதினாரென்றும் தெரிகிறது . ஆனால் சங்க நூல்களில் கூறப்படும் செய்திகளிலிருந்து சங்கப்புலவர்கள் மூன்றையும் ஒன்றாகக் கருதவில்லை என்பது தெளிவு . மானில் மடப்பமுடையதை நவ்வி என்றும் , அதற்கடுத்தது உழை என்றும் , பெரியது புல்வாய் என்றும் பேராசிரியர் கொண்டனரென்று தெரிகின்றது . தொல்காப்பியமோ சங்க இலக்கியமோ பேராசிரியர் சொல்வதற்கு எந்தச் சான்றையும் தரவில்லை , புல்வாய் என்பது இரலை இன மான்வகையை உணர்த்துவதைப் பேராசிரியர் உணரவில்லை .

தொல்காப்பியர் இரலையும் நவ்வியும் உழையும் ஆகிய மூன்றுவகை மான்களையும் தனியே கூறினார் . ஓடும் புல்வாய் என்றது இரலை மானையே யாகும் . இரலை என்பது அந்த மான்வகையின் ஆணிற்கே சிறப்புப் பெயராக வழங்குமாதலின் அதன் பொதுப் பெயரான புல்வாய் என்ற சொல்லைப் பயன்படுத்தி யிருக்கிறார் . ஆதலின் தொல்காப்பியர் சங்க நூல்களில் மிகக் கூடுதலான பாடல்களில் கூறப்படும் இரலைமானை மறந்து மரபு -கஉஆம் சூத்திரத்தில் பாடினார் என்று கொள்ளவியலாது. சங்க நூல்களிலே இரலைமானின் குட்டியை மறியென்று கூறும் வழக்குப் பாடல்களில் பயின்ற வழக்கமாக உள்ளது . ஆதலின் தொல்காப்பியச் சூத்திரம் மரபு-உக கூறும் ‘ புல்வாய் இரலைமானே என்பது தெளிவாகின்றது . சங்க நூல் களில் சில பாடல்களில் புல்வாய் என்றே வழங்குகின்றது.

சங்கப் பாடல்களில் கூறப்படும் புல்வாய் அதற்குச் சொல்லப்படும் விளக்கத்திலிருந்து இரலை வகைமானே என்பதை வலியுறுத்துகின்றது .

முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்
காமர் புறவினதுவே – அகம் , 284 .

அதளெறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவ னாட்டும் புல்வாய் போல -புறம் , 193 .

கானன் மேய்ந்து வியன்புலத் தல்கும்
புல்வா யிரலை நெற்றி யன்ன – புறம் , 374 .

புலப்புல்வாய்க் கலைப்பச்சை – புறம் , 166 .

முல்லை நிலத்திலும் நெடுவெண் களரிலும் வியன் புலத்திலும் கூறப்பட்ட புல்வாய் இரலைவகை மானே என்பதில் சிறிதும் ஐயமில்லை . புறநானூற்றுப் பாடல் ( 374 ) ‘புல்வாயிரலை என்று தெளிவாகப் புல்வாயின் ஆணாகிய இரலைமானைக் குறிப்பிட்டுள்ளது . புலப்புல் வாய்க்கலை என்று புறப்பாடல் 166 குறிப்பிடுவதும் புல்வாயின் ஆணான இரலைமானையாகும் . இரலையும் கலையும்புல்வாய்க்குரிய ” என்று தொல்காப்பிய மரபியல் கூறுவதைக் கவனிக்க வேண்டும் . புல்வாயின் ஆணை இரலை யென்ற பெயராலும் கலையென்ற பெயராலும்அழைக்கலாம் என்று கூறுகின்றது . ஆனால் அதற்கடுத்த சூத்திரம் கலையென்ற பெயர் உழைக்கும் உரித்து என்று கூறுகின்றது . இதிலிருந்து உழை வேறு, புல்வாய் வேறு உழையானது புல்வாயுள் அடங்காது என்று தெளியலாம் . சங்க இலக்கியங் களில் கலையென்ற சொல் உழைக்கே பல பாடல்களில் வழங்கி வந்திருப்பதைக் காணலாம் .

புல்வாய் புலியுழை மரையே கவரி
சொல்லிய கராமோ டொருத்த லொன்றும் . -தொல் – மர – கூசு.

பன்றி புல்வா யுழையே கவரி
யென் றிவை நான்கு மேறெனற் குரிய . -தொல் – மர – கூ கூ .

புல்வாய் நவ்வி யுழையே கவரி
சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே . -தொல் – மர – ரு அ .

மேலே காட்டியுள்ள தொல்காப்பியச் சூத்திரங்களில் புல்வாய் உழையினின்று வேறாகவும் மரை, நவ்வி ஆகியவைகளினின்று வேறாகவும் கருதப்பட்டிருப் பதைக் காணலாம் . சங்ககாலத்தில் எளிதில் எங்கும் காணப்பட்ட இரலையேயாகும் . சங்க இலக்கியத்தில் பல பாடல்களில் முக்கியமாகக் கூறப் பட்ட மானும் இரலையே யாகும் . இதையே தொல்காப்பியர் மரபியற் சூத்திரங்களில் புல்வாய் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார் என்பது தெளிவு . இதை யுணர்ந்தே திவாகர நிகண்டும் இரலை புல்வா யாகலு முரித்தே என்று கூறிற்று . தொல்காப்பியர் ஓடும் புல்வாய் என்று கூறியதிலும் பொருள் உள்ளது . மானினங்களில் மிக வேகமாக ஓடக்கூடியது புல்வாய் எனப்படும் இரலையே . இதன் விரைவு மணிக்கு 50 அல்லது 60 மைல் என்று விலங்கு நூலார் கூறுவர். இத்தகைய விரைவுடைய புல்வாயை ஓடும் புல்வாய் என்று கூறியது பொருத்தமே . உயக்கொண்டு புல்வாய் வழிப்படுவாரில் என்று பழமொழி நானூறு கூறுவது புல்வாயின் ஓட்டம் கருதியேயாகும் . பாயும் புலி முன்னர்ப் புல்வாய்க்குப் போக்கில் என்று பழமொழி நானூறு கூறுவது

புள்ளிப்புலியின் ( Leopard ) வேகத்திற்கு புல்வாயின் ஓட்டம் தாங்காது என்று கருதியேயாகும் . இதில் வரும் புலியை வரிப்புலி என்று கருதித் தமிழ்நாட்டு விலங்கு நூலறிஞர் ஒருவர் வரிப்புலி அடர்ந்த காட்டில் வாழ்வதாலும் புல்வாய் திறந்த புல்வெளியில் வாழ்வதாலும் இப்பழமொழிப் படி புலி புல்வாயைக் கொல்ல வாய்ப்பு எழாது , ஆதலின் இப்பழமொழி பொருத்தமன்று கூறினார் . புல்வாயைக் கலைமான் என்று கொண்டது தவறு . இங்குப் புலி வரிப்புலியன்று , சிறுத்தைப்புலி யென்பதை உணரவில்லை . சிறுத்தைப்புலி ( Leopard) புல்வாயைக் கொல்லத்தக்க சூழ்நிலையில் வாழும் . சங்க இலக்கியங்களில் புல் வாயைப் ( Black Buck ) புலி கொன்றதாகச் செய்தி இல்லை . இரலையைக் கொன்றதாகவும் இல்லை . ஆனால் கலைமானைக் ( Spotted deer ) கொன்றதாகப் செய்திகள் உள்ளன . புலி வாழும் சூழ்நிலையில் கலை மானிருப்பதையும் புலியால் கொல்லப்படுவதையும் நன்கு கண்டு உணர்ந்தே சங்க நூலார் இந்தச் செய்தியைப் பல பாடல்களில் பாடினர் . புல்வாயைத் ( Black Buck ) திறந்த வெளியில் ஒருவன் துரத்திப் பிடிப்பது எளிதன்றாதலால் ஒருவனாட்டும் புல்வாய் போல ஓடியுய்தல் என்று புறநானூறு கூறிற்று . ஆனால் இருவர் மூவர் துரத்தினால் பிடிக்க முடியும் . காரணம் நேராக ஒடாமல் புல்வாய் திடீரென்று திசை மாற்றிக் குறுக்கே பாயும் குணமுடையது . ஆதலின் ஒருவனாட்டும் புல்வாய் ஓடித் தப்பித்துவிடும் என் றனர் . சங்ககாலத்தில் புல்வாய்களைத் துரத்திப் பிடிப்பதும் , கலைமான்களை மரத்தின்மேல் ஏறி மடக்கிப்பிடிக்கும் வழக்கமும் (நற்றிணை , 111 ) இருந்ததாகத் தெரிகின்றது . பழகிய கலைமானை வைத்து மான்களைப் பிடிக்கும் வழக்கத்தைக் கானவர் பயன்படுத்தினர் , இரலையென்ற சொல் இரலைமானின் வகைகளையே குறித்துப் பொதுப் பெயராக வழங்கியிருக்கிறது என்பதை இரலை மானேறு என்ற சொல்லாட்சியே காட்டுகின்றது. இதைப் பேராசிரியர் தொல்காப்பிய மரபியல் சூத்திரம் 589 இல் குறிப்பிடுகின்றார் . இரலை என்ற ஆண்பாற் பெயர் சாதிப் பெயராக விதந்து கூறப்படும் என்று பேராசிரியர் கொண்ட திலிருந்து இது விளங்கும் . புல்வாய் , உழை ஆகியவற்றின் ஆண் ஏறெனக் கூறப் படும் என்று கூறிய மரபியலில் எருமையும் மரையும் பெற்றமு மன்ன (591) என்று கூறப்படுவதைக் காணலாம் . எருமையும் மாடும் மரையும் , புல்வாய்க்கும் உழைக்கும் வழங்கிய ஏறென்ற ஆண்பாற் பெயரைப் பெறும் என்று கூறுவதைக் காண்கிறோம் . மரையை எருமையுடனும் மாட்டுடனும் சேர்த்துக் கூறப் படுவதைக் காணும்போது மரையைப் பசுவுடன் மக்கள் ஒப்பிட்டுக் கருதியது விளங்குகின்றது . மாடு ஆன் எனப்படும் . கருமையான ஆன் காரான் எனப்பட்டது . மரையுடைய ஆன் மரையான் எனப்பட்டது . மரையானைப் பசுவென இந்தியாவில் இன்றும் கருது கின்றனர் .மரையை மாட்டிற்கே நெருங்கிய உறவுடையதாகக் கருதினது மரையான் என்ற பெயரே விளக்குகின்றது .

பெற்றமு மெருமையு மரையு மாவே -தொல் – மர – சுக .

எருமையும் மரையும் பெற்றமு நாகே – தொல் – மர – சு .

ஆனும் காரானும் மரையுடன் ஆவென்ற பெயர் பெறும் என்றும் , நாகென்ற பெயர் பெறும் என்றும் மரபியல் கூறுவதிலிருந்து மரையை எந்த அளவு . மாட்டுடனும் எருமையுடனும் நெருங்கிய உறவுடையதாகக் கருதினர் என்பது தெரிகின்றது . அதனால் தான் . மரைக்கு மரையா என்றும் மரையான் என்றும் பெயரிட்டழைத்தனர் .

ஒட்டகங் குதிரை கழுதை மரையிவைப்
பெட்டை யென்னும் பெயர்க் கொடைக் குரிய – தொல் – மர – ருங .

மேற்கூறிய சூத்திரத்தில் குதிரை , கழுதையுடன் மரையும் பெட்டை யென்ற பெயர் கொள்ளும் என்றது மரை ஒருபால் குதிரையைப் போலிருப்பதன் காரண மாகவே . கானக் குதிரையென்று சூடாமணி நிகண்டு கூறுவதையும் காணலாம் . மரபியலில் வழங்கிய பெயர்கள் புறத்தோற்றத்தில் கண்ட ஒப்புமைக் காரணமாகவே வழங்கி வந்ததாகத் தெரிகின்றது . விலங்கு நூலார் ஆராய்ச்சிப்படி இரலை மானினத் ( Antilopes ) தைச் சார்ந்ததாக இருக்கலாம் . ஆனால் மரபியலின்படி குதிரைக்கு ஒரு .. சார்புடைத்தாயும் மாட்டிற்கு நெருங்கிய உறவுடைய தாகவும் புறத்தோற்றத்தின் அடிப்படையாக அக் காலத்தில் கருதப்பட்டது தெரிகின்றது . கடமா உழை பத்தைச் சார்ந்ததாகக் கருதப்படாமல் புறத் தோற்றத்தின் அடிப்படையாகக் குதிரை, கழுதை யுடனும் ஆட்டுடனும மரையுடனும் ஒத்ததாகக் கருதப்பட்டதாகத் தெரிகின்றது . ஆனால் தற்காலத்தில் அறிவியல் அடிப்படையாக மரையை இரலை யினத் ( Antilopes ) துடனும் கடமா ( Deer ) வைக் கலை மானினத்துடனும் சேர்த்திருக்கின் றனர் . தமிழ் நாட்டில் காணப்படும் மான்வகைகளுள் ஐந்து வகை களைச் சங்கப்புலவர்கள் நேரில் கண்டு பாடியுள்ளனர் . தமிழ் நாட்டில் சிலவிடங்களில் காட்டுப் புல்வாய் என்று இரலையையும் காட்டுமிளா என்று கடமாவையும் காட்டுமான் என்று கலைமானையும் அழைக்கின் றனர் . ஆனால் தற்பொழுது காட்டாடு என்று அழைக்கப்படும் மான்வகையைப் பற்றி (Jungle Sheep ) யாதொரு செய்தியும் காணப்படாதது வியப்பைத் தருகின்றது . மற்றும் கேழல்மான் அல்லது எலிமான் என்றழைக்கப் படும் மிகச் சிறிய மானைப்பற்றியும் ( Mouse deer ) நான்கு கொம்புகளையுடைய (Tlie four – horned antilopes) மானைப்பற்றியும் யாதொரு செய்தியும் இல்லை . ஆனால் இந்த மூன்றுவகை மான்களும் தமிழ்நாட்டில் காணப்படுகின் றன . இவைகளைப் பிரித்துணரவில்லை என்று தெரிகின்றது.

இதுகாறும் விளக்கப்பட்டதிலிருந்து சங்ககாலப் புலவர்கள் எந்த அளவு அக்காலத்திலேயே ஐந்துவகை மான்களையும் ஆராய்ந்து அறிந்திருந்தனர் என்பதை எண்ணும்போது அவர்களுடைய அறிவாற்றலை வியக்காதிருக்க முடியாது .

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

antelope, deer, Antilope cervicapra

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

புல்வாய்
புல்வாய்

விசைத்த வில்லர் வேட்டம்போகி
முல்லை படப்பை புல்வாய் கெண்டும்
காமர் புறவினதுவே – அகம் 284/9-11

வேகமாக இழுத்து நாண் பூட்டிய வில்லினராய் வேட்டையாடி
முல்லைநிலத் தோட்டத்தே மானை அறுத்து உண்ணும்
அழகிய காட்டின்கண்ணது

புல புல்வாய் கலை பச்சை – புறம் 166/11

காட்டுநிலத்து வாழும் புல்வாய்க் கலையினது உறுப்புத்தோல்

கானம் மேய்ந்து வியன் புலத்து அல்கும்
புல்வாய் இரலை நெற்றி அன்ன
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவிய – புறம் 374/1-3

காட்டின்கண் மேய்ந்துவிட்டு அகன்ற கொல்லைக்கண் தங்கும்
புல்வாய் என்னும் மானினது ஆணின் நெற்றி மயிர் போல
பொற்றாமரை விளங்கும் சென்னியிலுள்ள சிதறிக்கிடக்கும் தலைமயிர் அடங்கிப்படியுமாறு.

புல்வாய் என்பது blackbuck என்று சொல்லப்படும் மான் இனம்..
இது இந்தியத் துணைக் கண்டத்தைத் தோன்றிடமாகக் கொண்ட மான் இனமாகும்.
இதில் ஆண் மான் இரலை என்றும் பெண் மான் கலை என்றும் அழைக்கப்படுகின்றது.
இதுதவிர புல்வாய் மானுக்கு திருகுமான், வெளிமான், முருகுமான் என்று பல்வேறு தமிழ்ப்பெயர்கள் உள்ளன.
இம்மான்கள் அகன்ற சமதரை வெளிகளில் பெருந்திரள்களாக குடியிருந்தன.

ஒருவன் ஆட்டும் புல்வாய் போல – புறம் 193/2

ஒருவன் விரட்டுகின்ற மானைப் போல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *