Skip to content

1. சொல் பொருள்

1. (வி) 1. வண்டியில் அல்லது ஏரில் காளைகள் அல்லது குதிரைகளைப் பிணை, 2. நகை முதலியன அணி, அணிவி, 3. மாட்டு, கட்டு,

 2. (பெ) 1. கட்டிய கயிறு, 2. தேர் அல்லது வண்டியில் குதிரை அல்லது மாடுகளைப் பூட்டியிருத்தல், 3. நாணேற்றுதல்

ஐந்து, இறுக்கிப் பிடித்தல் இணைதல்

பூட்டு – ஐந்து

2. சொல் பொருள் விளக்கம்

இறுக்கிப் பிடித்தல் இணைதல் ஆகிய பொருளில் பூட்டு என்பது பொது வழக்குச் சொல். இது, உடலுறவுச் சொல்லாக மதுரை இழுவை வண்டித் தொழிலாளர் (ரிக்சா) வழக்காக உள்ளது. பூட்டுவில் பொருள் கோள், பூட்டு என்பவற்றை நோக்கும். ஐந்து என்னும் எண்ணிக்கை காட்டுவது வணிக வழக்கு.

பூட்டுதற்குப் பயன்படும் ஒன்று பூட்டு எனப்படும். அது தாழ், தாழ்ப்பாள் எனவும் வழங் கும். ஒன்றோடு ஒன்று இணைத்துப் பூட்டுவதற்கு உரியது பூட்டு எனப்படுகிறது. இலக்கணத்தில் விற்பூட்டு, அல்லது பூட்டுவில் எனப் பொருள்கோள் ஒன்று வரும், இரண்டு கைகளையும் கோத்துக்கொள்ளல் ‘பூட்டியகை’ அல்லது ‘கைப்பூட்டு’ எனப்படும். இங்குப் பூட்டு என்பது அடுக்கிவைக்கப்பட்ட ஐந்து இலையை குறிக்கும். ஐந்து உருபா எனக்குறிப்பதும் உண்டு. அடுக்கு, கை என்பவை காண்க.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

attach, as horses or bullocks to a carriage or plough; to yoke

put on or make one put on, as rings jewels, garlands,

lock, fasten, hook, fix

the rope that is fastened

the fastening of horses or bullocks to the chariot or cart

fixing of an arrow in the bow

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி – பொரு 165

பாலை ஒத்த (நிறத்தினையுடைய)குதிரைகள் நான்கினைச் சேர இணைத்து

நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி – பெரும் 198

நடை பயின்ற பெரிய எருதுகளை முற்றத்தே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று

மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து
முரசு செய முரச்சி களிறு பல பூட்டி
ஒழுகை உய்த்தோய் – பதி 44/14-17

பகை மன்னனாகிய மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி,
அவன் கூறிய வஞ்சினத்தை முறித்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை அடியோடு வீழ்த்தி
முரசு செய்வதற்காகத் துண்டுகளாக வெட்டி, யானைகள் பலவற்றை வண்டியில் பூட்டி
இழுத்துக்கொண்டு போகச் செய்தவனே

வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி
பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில் – புறம் 15/2,3

வெளிய வாயையுடைய கழுதையாகிய புல்லிய நிரையைப் பூட்டி உழுது
பாழ் படுத்தினாய், அவருடைய அகலிய இடத்தையுடைய நல்ல அரண்களை

இஞ்சி வீ விராய பைம் தார் பூட்டி – பதி 42/10

இஞ்சியினையும் பூவினையும் கலந்த வாடாத மாலையை அணிந்து,

ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி – பதி 48/2

ஒளிவிடும் நெற்றியையுடைய விறலிகளுக்குப் பொன்னாற் செய்த மாலைகளை அணிவித்து,

மழ விடை பூட்டிய குழாஅய் தீம் புளி – அகம் 311/10

இளைய எருதுகளின் கழுத்தில் மாட்டியுள்ள மூங்கில் குழாயிலுள்ள இனிய புளிச்சோற்றை

கவணை அன்ன பூட்டு பொருது அசாஅ
உமண் எருத்து ஒழுகை – குறு 388/3,4

கவண் கயிற்றைப் போன்ற கழுத்தில் மாட்டிய பூட்டுக்கயிறு தேய்த்தலால் வருந்தும்
உமணர்களின் காளைகள் பூட்டிய வண்டிகளின் தொகுதியை

வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்
நீட்டித்தாய் என்று கடாஅம் கடும் திண் தேர்
பூட்டு விடாஅ நிறுத்து – கலி 66/23-25

நீ நாட்டம்கொண்டவரிடம் செல்வதையே விரும்பிய உன் பாகனும்
இங்கே நீண்ட நேரம் இருந்துவிட்டாய் என்று செலுத்த முற்படுவான்; உன் விரைவாகச் செல்லும் திண்ணிய தேர்
அவிழ்த்துவிடாமல் நிறுத்தியுள்ளது.

நறவு உண் மண்டை நுடக்கலின் இறவு கலித்து
பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும் – அகம் 96/1,2

கள்ளுண்ட கலம் கழுவப்பெறுதலின் (அந்நீரையுண்ட) இறா மீன் செருக்கி
நாணேற்றுதல் அறுந்துபோன வில்லினைப் போல் நெற்கூடுகளின் அடிகளில் துள்ளிவிழும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *