Skip to content

சொல் பொருள்

(பெ) தீயசக்தி,

சொல் பொருள் விளக்கம்

தீயசக்தி,

பேயைப்பற்றிய சங்ககால மக்களின் நம்பிக்கையைத் திருமுருகாற்றுப்படை தெள்ளென விளக்குகிறது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

evil spirit, ghost, demon

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க
பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல்
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை
ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர
வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா
நிணம் தின் வாயள் துணங்கை தூங்க – திரு 47-56

காய்ந்து போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும்,
சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், கொடிய பார்வையினையும்,
பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு, கொடிய பாம்பும் தூங்கும் அளவிற்குப் பெரிதான
பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், சொரசொரப்பான பெரிய வயிற்றையும்,
(கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்
குருதியை அளைந்த கூரிய உகிரினையுடைய கொடிய விரலால்
கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை
ஒள்ளிய தொடியையுடைய பெரிய கையில் ஏந்தி, அச்சந்தோன்ற
வென்று அழிக்கும் திறலையுடைய போர்க்களத்தைப் பாடி, தோளை அசைத்து,
நிணத்தைத் தின்கின்ற வாயையுடையளாய், துணங்கைக்கூத்து ஆட

பேயின் நாக்கு தீச்சுவாலை போன்றிருக்கும் – பேயின் காதுகள் வெள்ளாட்டின் காதுகளைப் போல் இருக்குமாம். பேய் பிணங்களைத் தின்னும். பிணங்களின் நிணத்தை மிகவும் விரும்பி உண்ணும். பேயின் பாதங்கள் இரண்டாய்ப் பிளந்து இருக்குமாம்.

எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று
கருமறி காதின் கவை அடி பேய்மகள்
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல – சிறு 196-198

தீச்சுவாலை தலைகீழானது போன்ற நாவினையும், ஒளிரும் பற்களையும்,
வெள்ளாட்டு(க் காதினைப்போன்ற) காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள்
நிணத்தை தின்று சிரிக்கின்ற தோற்றத்தைப் போன்று,

பிண கோட்ட களிற்று குழும்பின்
நிண வாய் பெய்த பேய்மகளிர் – மது 24,25

பிணங்களைக் கோத்த கொம்புகளையுடைய ஆண்யானைத் திரளின்
நிணத்தைத் தின்ற பேய்மகளிருடைய

கவை அடி கடு நோக்கத்து
பேய்மகளிர் பெயர்பு ஆட – மது 162,163

இரட்டையான அடிகளையும் கடிய பார்வையினையும் உடைய
பேய்மகளிர் உலாவி ஆட,

பேயின் கண்கள் முரசுகளின் முகத்தைப் போல் இருக்குமாம். பேயின் கண்கள் கருமையாக இருக்குமாம்.

பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் – பட் 236

பேயின் கண்ணை ஒத்த, முழங்குகின்ற காவலையுடைய முரசம்

கரும் கண் பேய்மகள் வழங்கும்
பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே – பதி 22/37,38

கரிய கண்களையுடைய பேய்மகள் கூத்தாடும்
– பெரிய பாழ்நிலமாய்விடும், அவைதாம் இரங்கத்தக்கன!

பேய்களின் ஆண் கூளி எனப்படும்.

கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ
பிணம் தின் யாக்கை பேய்மகள் துவன்றவும் – பட் 259,260

திரட்சிகொண்ட ஆண்பேய்களுடன் மயிரைத் தாழ்த்து மெல்லநடந்து,
பிணந்தின்னும் வடிவையுடைய பேய்மகள் நெருங்கிச்செல்லவும்;

பேய்கள் தலைமயிரை இரண்டாகாப்பிரித்துத் தொங்கவிட்டிருக்கும். கழுது என்பது பேயின் ஒரு வகை.

கவை தலை பேய்மகள் கழுது ஊர்ந்து இயங்க – பதி 13/15

இரண்டாகப் பிரிந்த தலைமயிருடன் பேய்மகள் கழுது என்னும் பேய் மீது ஏறி சுற்றித்திரிய

பேய்கள் நள்ளிரவில் தமக்கென உருவத்தைத் தரித்துக்கொண்டு கழுதுகளுடன் சுற்றித்திரியும்

பானாள் கொண்ட கங்குல் இடையது
பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல்
கூற்ற கொல் தேர் கழுதொடு கொட்ப – மதுரைக். 631-633

நடுநிசியைக் கழித்த இரவின் இடையாமத்தே
பேய்களும், வருத்தும் தெய்வங்களும் (காணத்தக்க)உருவங்களைக் கொண்டு, ஆராய்ந்த நெறி பிறழாத
கூற்றுவனின் கொலைத் தேராகிய கழுதுடன் சுழன்றுதிரிய,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *