Skip to content

சொல் பொருள்

1. (வி) ஒத்திரு, போன்றிரு, ஒப்பாகு,  2. (இ.சொ) உவம உருபு,

சொல் பொருள் விளக்கம்

ஒத்திரு, போன்றிரு, ஒப்பாகு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be similar, be equal

a particle of comparison

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தூஉம் துவலை துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர் நம் காதலர்
வாழேன் போல்வல் தோழி யானே – குறு 103/4-6

தூவும் மழைத்துளிகளையுடைய துயரந்தரும் வாடைக்காற்றுக் காலத்திலும்
வரமாட்டார் போல இருந்தார் நம் காதலர்,
வாழமாட்டேன் போல இருந்தேன் தோழி! நானே!

ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே நீ எம்மை
வேண்டுவல் என்று விலக்கினை நின் போல்வார்
தீண்ட பெறுபவோ மற்று – கலி 94/6-8

ஆந்தைக்குப் பிறந்த நாய்க்குட்டியே! நீ என்னை
விரும்புவேனென்று தடுத்தாய், உன்னைப் போன்றவர்கள்
என்னைத் தீண்டப்பெறுவார்களோ?”

ஒன்னார் வாட அரும் கலம் தந்து நும்
பொன் உடைநெடு நகர் நிறைய வைத்த நின்
முன்னோர் போல்க இவர் பெரும் கண்ணோட்டம் – புறம் 198/15-17

பகைவர் தேய அவருடைய பெறுதற்கரிய அணிகலத்தைக் கொண்டுவந்து, நும்முடைய
பொன்னுடைய நெடிய நகரின்கண் பொலிய வைத்த நின்னுடைய
முன்னுள்ளோரைப் போன்றிருப்பதாக இவருடைய பெரிய கண்ணோட்டம்.

இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன் – கலி 47/5,6

இல்லாதவர்களின் வறுமைத் துன்பத்தைத் தன் ஈகைக் குணத்தினால் துடைக்க
வல்லவனைப் போன்றிருக்கும் பொருளாற்றலும் உள்ளவனாய்த் தோன்றுகிறான்,

போர் தோற்று கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும்
காந்தள் செறிந்த கவின் – பரி 18/34,35

போரில் தோற்றுக் கட்டப்பட்டவரின் கைகளைப் போன்று இருக்கும், கார்காலம் தோற்றுவித்த
காந்தள்கள் செறிந்த கவின்;

இனைய பிறவும் இவை போல்வனவும்
அனையவை எல்லாம் இயையும் புனை இழை
பூ முடி நாகர் நகர் – பரி 23/57-59

இதனைப் போன்ற பிறவும், இன்னும் இவை போன்றிருப்பனவும்,
அப்படிப்பட்டவை எல்லாம் தம்முள் பொருந்திநிற்கும், ஒப்பனை செய்யப்பட்ட அணிகலன்களையும்
பூமகளையும் தன் திருமுடியில் கொண்டுள்ள ஆதிசேடனின் கோயிலில்;

ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்
வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும் – கலி 100/1,2

கடலில் தோன்றி, இந்த உலகத்து இருளைக் கூட்டித்தள்ளும் ஞாயிற்றைப் போல்,
உனக்கு வேண்டாதவரின் நெஞ்சம் நடுங்க அச்சந்தரும் கொடுமையும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *