1. சொல் பொருள்
(வி) 1. படி, அடியில்தங்கு, 2. அழுந்து, அமிழ், புதைபடு, 3. ஆர்வத்துடன் உண்/பருகு, 4. முனைப்பு கொள், உக்கிரமாகு, 5. ஊடுறுவு, உட்செலுத்து, 6. மிகு, அதிகமாகு, 7. விரைந்து செல், 8. நெருங்கித்தாக்கு, 9, எதிர், 10. நெருங்கித்திரள், அடர்த்தியாய்க்கூடு, 11. அடைசலாய் இரு 12. கூடு, இணை, சேர், 13. சேர்த்து இணை,
2. சொல் பொருள் விளக்கம்
படி, அடியில்தங்கு,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
settle as sediment, go down, sink, eat/drink greedily, vehement, intense, pierce, thrust in, abound in, increase, rush, move swiftly, press upon, close in, oppose, resist, flock densely, throng, be crowded, join, insert and fasten
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும் நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட இலையும் மயிரும் ஈர்ம் சாந்து நிழத்த – பரி 6/17-19 நகத்திலும், கன்னங்களிலும் பூசப்பட்ட செம்பஞ்சிக்குழம்பும், முலைகளில் அணிந்த குங்குமக் குழம்பும் மிகுதியாய் வண்டல் போன்று படிந்து தோன்ற, தளிரால் செய்யப்பட்ட படலைமாலையும், கூந்தலும், குளிர்ந்த சந்தனத்தை அழிக்க, பொய்கை வாயில் புனல் பொரு புதவின் நெய்தல் மரபின் நிரை கள் செறுவின் வல் வாய் உருளி கதுமென மண்ட அள்ளல் பட்டு துள்ளுபு துரப்ப நல் எருது முயலும் அளறு போகு விழுமத்து சாகாட்டாளர் கம்பலை – பதி 27/9-14 நெய்தல் பூக்களை மொய்க்கும் வழக்கமுடைய கூட்டமான வண்டுகளைக் கொண்ட வயல்வழிச் சென்ற வலிமையான மேற்புறத்தையுடைய சக்கரம் திடீரென்று அழுந்திவிடுதலால் சேற்றில் மாட்டிக்கொள்ள, பதைப்புடன் முடுக்கிவிடப்பட்ட நல்ல எருதுகள் இழுப்பதற்கு முயலுகின்ற அந்த, சேற்றிலிருந்து மீளும் சிரமத்தின்போது வண்டியை ஓட்டுபவர்கள் எழுப்பும் ஆரவார ஒலிg வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகை வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்து கிளி போல் காய கிளை துணர் வடித்து புளி_பதன் அமைத்த புது குட மலிர் நிறை வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ் பசும் குடை கயம் மண்டு பகட்டின் பருகி – அகம் 37/5-11 வைகறை புலர்ந்த விடியற்காலையில் வைக்கோலைப் பிடித்துப்போட்டு கடாவிட்டு, வேலைக் களைப்பால் கள்ளுண்ட மயக்கம் தீர, அழகால் மேம்பட்ட, காற்றால் கிளைத்த கொழுவிய தளிர்களையுடைய மாமரத்தில் கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட கிளை(யில் தொங்கும்) கொத்துக்களைச் சாறெடுத்து, புளிப்புச் சுவை சேர்த்துப் புதுக்குடங்களில் விளிம்புதட்ட நிறைத்ததை, வெயிலில் குப்புற நிறுத்திய மிக்க இதழ்களையுடைய பசிய (பனையோலைக்)குடையில் குளத்தில் நீரைப் பேரவாவுடன் மிகுதியாகக் குடிக்கும் காளையைப் போலப் பருகி மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 272 மிக்குச் செல்கின்ற/உக்கிரமான போர்களை முடித்த வென்று அடுகின்ற (உன்னுடைய)மார்பிடத்தே, நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார் கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே – புறம் 31/7,8 கொம்பினது நுனை முகம் தேய ஊடுருவக்குத்தி பகைவரது காவலையுடைய மதிலைத் தாக்கும் நின்னுடைய யானைகள் அடங்கா; மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் – கலி 73/19 மிகுந்து வரும் வெள்ளத்தாலும் நிரம்பாமல் பெருக்கமுறும் கடலைப் போல நின் மலை பிறந்து நின் கடல் மண்டும் மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின் – பதி 48/13,14 உனது மலையில் பிறந்து, உனது கடலில் விரைந்து சென்று கலக்கும் மிகுந்த நீர் நிறைந்த ஆற்றில் நிகழ்த்தப்பெறும் இனிய நீராட்டு விழாவும் அரம் போழ் நுதிய வாளி அம்பின் நிரம்பா நோக்கின் நிரையம் கொண்மார் நெல்லி நீள் இடை எல்லி மண்டி – அகம் 67/5-7 அரத்தினால் அராவப்பட்ட முனையையுடைய பற்களையுடைய அம்பினையும் இடுக்கிக் குறிபார்க்கும் பார்வையினையுமுடையராய், தம் பசுக்களை மீட்கவேண்டி நெல்லி மரங்களையுடைய நீண்ட இடங்களில் இருளிலே விரைந்துசென்று மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர் வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர் நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி – பதி 49/8-11 மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின் வெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி, இரத்தத்தைத் தொட்டதால் சிவந்த கையையுடைய மறவர்களின் மார்பிலிருந்து ஒழுகும் குருதி, நிலத்தில் படர்ந்து ஓடி, புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி – பரி 10/9 புதுப்புனலை எதிர்த்து ஆடல்புரிவதற்கு மக்கள் கூட்டம் நெருக்கியடித்துக்கொண்டு திரண்டெழ குயில் காழ் சிதைய மண்டி அயில் வாய் கூர் முக சிதலை வேய்ந்த போர் மடி நல் இறை பொதியிலானே – அகம் 167/16-18 இயற்றப்பட்ட கைமரங்கள் சிதையுமாறு நெருக்கமாக அடைந்து, வேலின் முனை போன்று கூரிய முகத்தினையுடைய கறையான் மூடிக்கொள்தலின் கூரை மடிந்த நல்ல இறப்பினையுடைய அம்பலத்தின்கண் திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து – அகம் 136/4,5 திங்களை உரோகணி கூடிய குற்றமற்ற நன்னாள் சேர்க்கையில் காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என – மலை 129 காம்பினுள் சேர்த்து இணைக்கப்பட்ட (எஃகினாலான)வேல் (நுனிப்பாகம்)யானையின் முகத்தில் பாய்ந்தது எனும்படி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்