Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மிகுதியான ஆர்வம், 2. வலிமை,  3. மடம் – மென்மை, 

சொல் பொருள் விளக்கம்

மிகுதியான ஆர்வம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

excessive desire, abundance of desire, strength, tenderness, delicacy

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மத அல்லது மதவு என்ற சொல்லைத் தொல்காப்பியம் வரையறுத்துள்ளது.

மதவே மடனும் வலியும் ஆகும் – தொல்-சொல்-உரி/79
மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே – தொல்-சொல்-உரி/80

எனவே, மடமை. Ignorance; வலிமை. Strength; மிகுதி. Excess. abundance; அழகு. Beauty;
என்பனவே மதவு என்பதற்குப் பொருளாகும்.

இந்த மதவு என்ற சொல் சங்க இலக்கியத்துல் 5 முறை வருகிறது.
இந்த ஐந்துமே அகநானூறு என்ற ஒரு நூலில் மட்டும் வருவது வியப்பிற்குரிய செய்தி. அவை,

பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் – அகம் 14/9

பதவின் பாவை முனைஇ மதவு நடை
அண்ணல் இரலை – அகம் 23/7,8

கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை
செவிலி கை என் புதல்வனை நோக்கி – அகம் 26/17,18

கடவுக காண்குவம் பாக மதவு நடை
தாம்பு அசை குழவி – அகம் 54/6,7

பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு
மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி – அகம் 341/7,8

காலையில் வெளியில் மேயச்சென்ற கறவைமாடுகள், மாலையில், மடிநிறைய பாலினை ஏந்திக்கொண்டு
வீட்டிலுள்ள தம் கன்றுக்குப் பாலூட்ட, மிகுந்த ஆர்வத்துடன் வேகநடை போட்டுவருவதையே, மதவுநடை நல்லான்
என்று புலவர் குறிப்பிடுகிறார், எனலாம்.

பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் – அகம் 14/9-11

அறுகம்புல் மேய்ச்சலில் உணவருந்திய மிகுந்த ஆர்வத்துடனான நடையுடைய நல்ல ஆனினங்கள்
பருத்த மாண்புடைய மடி இனிய பாலைப் பொழிய,
கன்றை நினைத்து அழைக்கும் குரலையுடையவாய் மன்றத்தில் கூட்டமாய்ப் புகுகின்ற

கடவுக காண்குவம் பாக மதவு நடை
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய
கனையல் அம் குரல கால் பரி பயிற்றி
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோல் கை கோவலர்
கொன்றை அம் குழலர் பின்றை தூங்க
மனை_மனை படரும் நனை நகு மாலை – அகம் 54/6-12

விரைந்து செலுத்துக! காண்போம் பாகனே! செருக்கான நடையுடன்
கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்துக் குறைக்க
கனைக்கின்ற குரலுடனே காலால் தாவித் தாவிப் பாய்ந்து
ஒலிக்கும் மணிகள் கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம்
வளைந்த (வேட்டி)மடிப்பினையுடைய, கோலைக் கையிலே கொண்ட இடையர்,
கொன்றக்கனியால் குழலிசைப்பவராய்ப் பின்னால் மெதுவே நடந்துவர,
வீடுகள்தோறும் செல்லும், மொட்டுகள் மலரும், மாலை நேரத்தில்;

இங்கே,

மதவு நடை

என்பதை, பய நிரை ஆயம் என்பதனோடு பொருத்திக் கன்றினுக்குப் பாலூட்ட
விரைந்து நடக்கும் பசுக்கூட்டம் என்று பொருள்கொள்ளவேண்டும்.
ஆனால்,

மதவு நடை

என்பதை, தாம்பு அசை குழவி என்று அடுத்து வருகின்ற கன்றுக்கும் பொருத்தலாம்.
எனில், தாய்ப்பசுவிடம் பால்குடிக்க மிகுந்த ஆர்வத்துடன் ஓடிவரும் கன்றினுக்கு என்று பொருள் கொள்ளலாம்.

பதவின் பாவை முனைஇ மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ – அகம் 23/7,8

அறுகின் கிழங்கையும் வெறுத்து, செருக்கான நடையினை உடைய
தலைமைப் பண்புள்ள ஆண் இரலைமான்கள் தான் விரும்பிய பெண்மானைத் தழுவி

இங்கே, மதவு என்பதற்கு, வலிமை அல்லது அந்த வலிமையினாலுண்டான செருக்கு என்று பொருள் ஏற்றதாகிறது

மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல்
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு
மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி – அகம் 341/6-8

மழை பெய்து கழிந்தாலொத்த பெரிய வாய்க்கால்களில் தங்கிய கலங்கல் நீரினை
அறுகம்புல்லைத் தின்ற அசையும் திமிலையுடைய நல்ல ஏற்களும்
வலிமையுடைய நாவினால் தளர்ச்சி நீங்கக் குடித்து

அதிகமான தாகத்தினால், மிகுந்த ஆர்வத்துடன் நாவைச் சுழற்றி, காளை நீர் குடிக்கிறது என்றும் கொள்ளலாம்.

இங்கே,

மதவு உடை நாக்கொடு

என்ற தொடர், பாடபேதமாக, மதவு நடை நாகொடு என்றும் கொள்ளப்படுகிறது.
நாகு என்பது இளம் பசு. எனவே இங்கு மதவு என்பதற்கு மிகுந்த ஆர்வம் என்று முதலில் நாம் கண்ட பொருள்
ஏற்புடையதாகிறது.

கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை
செவிலி கை என் புதல்வனை நோக்கி
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் – அகம் 26/17-19

(முன்பு இறுக)அணைத்த கை (இப்போது) நெகிழ்ந்ததைக் கண்டு, மென்மையான நடையுள்ள
செவிலியின் கையிலுள்ள என் புதல்வனை நோக்கி
(என்னைக் காட்டிலும்)நன்றாக இருப்போரிடம் ஒத்துப்போவீர் நீவிர்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *