Skip to content

சொல் பொருள்

(பெ) மத்து,

சொல் பொருள் விளக்கம்

மத்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Churning stick

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மத்து என்பது பெரும்பாலும் தயிரைக் கடைந்து வெண்ணெய் பெறுவதற்காக பயன்படுத்தும் ஒரு கருவியாகும்.
தயிரைக் கடையும்போது, அதிலுள்ள கொழுப்பு நிறைந்த பதார்த்தம் வெண்ணெயாக மாறிவர, மிகுதியாக இருக்கும்
நீர்த் தன்மையான பதார்த்தம் மோர் எனப்படும். இதில் கை மத்து என்பது கையினால் பாத்திரத்திலுள்ள சிறிய அளவு தயிரைக் கடைவதற்கான கருவியாகும். பானையில் உள்ள பேரளவு தயிரைக் கடைய பெரிய மத்து பயன்படுத்தப்படும்.
 சுவரை ஒட்டி ஒரு சிறிய கொம்பு நட்டிருப்பார்கள். அதில் ஒரு கயிறு கட்டி இருக்கும். மோர் கடையும் மத்து
 ஒரு நீளக் கம்பில் கட்டப்பட்டிருக்கும். அந்த மத்தின் மையப் பகுதியில் கயிறு சுற்றுவதற்கு ஏற்றவாறு வடிவமைப்பு
 இருக்கும்.  நின்றுகொண்டோ, தரையில் அமர்ந்தவாறோ அந்தக் கயிற்றை இழுத்து மத்தைத் தயிருக்குள் சுழற்றுவார்கள்.

தயிர் கடையும்போது மத்தம் ‘சர் சர்’ என்று ஒலிப்பது புலி உறுமுவதுபோல் இருக்கும் என்கிறது
பெரும்பாணாற்றுப்படை.

இடு முள் வேலி எரு படு வரைப்பின்
நள் இருள் விடியல் புள் எழ போகி
புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 154-160

கட்டு முள் வேலியினையுடைய எருக்குவியல்கள் மிகுந்திருக்கும் ஊரில் –
செறிந்த இருள் (போகின்ற)விடியற்காலத்தே பறவைகள் துயிலெழ எழுந்து சென்று,
புலி(யின் முழக்கம் போன்ற) முழக்கத்தையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து,
குடைக்காளானுடைய வெண்மையான முகைகளை ஒத்த குவிந்த முகைகளையுடைய
உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து,
(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து,
அன்றைய மோரை விற்கும், நல்ல மாமை நிறத்தையுடைய மேனியையும்,

மத்தில் இறுக்கக் கட்டப்பட்டுள்ள கயிறு, மத்தினைச் சுழற்றுபோது ஏற்படும் உராய்வினால் அந்த மத்தின் காம்பு
தேய்ந்துபோவது உண்டு.

விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் – நற் 12/1-3

விளாம்பழம் கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில்
தயிறு கடையும் கயிறு உராய்வதால் தேய்வுற்ற தண்டினையுடைய மத்தின்
வெண்ணெய் தோன்றச் சுழலும் சுழற்சியால் தறியின் அடிப்பகுதி முழக்கமிடும்

மத்தில் இறுக்கக் கட்டப்பட்டுள்ள கயிற்றை, மத்தினைச் சுழற்றுவதற்காக, இருபுறமும் மாற்றிமாறி
இழுக்கும்போது அந்தக் கயிறு வேகமாகச் சுழலும்.

மெல் இயல் ஆய்_மகள்
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம்
சுற்றி சுழலும் என் நெஞ்சு – கலி 110/9-11

மென்மையான இயல்பினையுடைய ஆயர்மகளே!
தயிர் கடையும் மத்தில் கட்டிய கயிற்றினைப்போல் உன் அழகைச்
சுற்றிச் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *