மருங்கூர் என்பது மருங்கை, ஒரு துறைமுகப் பட்டினம்
1. சொல் பொருள்
(பெ) ஒரு சங்க காலத் துறைமுகப் பட்டினம், மருங்கை.
2. சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்க காலத் துறைமுகப் பட்டினம், மருங்கை.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a port city during sangam period
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பல் பூ கானல் பகற்குறி மரீஇ செல்வல் கொண்க செறித்தனள் யாயே கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார் பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட அகல் அங்காடி அசை நிழல் குவித்த பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும் மருங்கூர் பட்டினத்து அன்ன இவள் நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – நற் 258 நிறையப் பூக்களைக்கொண்ட கடற்கரைச் சோலையில் நீங்கள் பகலில் சந்திக்கும் இடத்தைப் பார்த்துவிட்டுச் செல்வாயாக, தலைவனே! தலைவியை வீட்டிற்குள் அடைத்துவைத்துவிட்டாள் அவளின் தாய் கதிர்கள் கால்களை வெம்பிப்போகச்செய்ய, பாறைகளைச் சூடேற்றும் ஞாயிற்றுப் பகலில் செல்வம் மிக்க தம் பெரிய வீட்டில், வந்திருக்கின்ற விருந்தினரை உபசரிக்க, பொன் வளையல் அணிந்த மகளிர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உதிர்த்துவிட்ட, கொக்கின் நகம் போன்ற சோற்றை விரும்பி உண்டு, பொழுது மறைய அகன்ற மீன்கடையில் நீண்டுசெல்லும் நிழலில் குவித்த பசிய இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை, அசைவாடிக்கொண்டிருக்கும் தோணியின் பாய்மரக்கூம்பினில் சென்றுதங்கும் மருங்கூர்ப் பட்டினத்தைப் போன்ற இவளது நெருக்கமாயுள்ள அழகிய ஒளிவிடும் வளையல்கள் கழன்றோடுவதைக் கண்டு – தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன் கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர் விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர் இரும் கழி படப்பை மருங்கூர் பட்டினத்து எல் உமிழ் ஆவணத்து அன்ன கல்லென் கம்பலை செய்து அகன்றோரே – அகம் 227/16-22 தூங்கல் எனும் புலவரால் பாடப்பெற்ற மிக உயர்ந்த நல்ல புகழ் வாய்ந்த பெண்யானை மிதித்தமையால் ஏற்பட்ட வழுதுணங்காய் போலும் தழும்பினையுடைய வழுதுணைத் தழும்பன் என்பானுடைய காவல் பொருந்திய மதிலெல்லையையுடைய ஊணூருக்கு அப்பாலுள்ள மிக்க பொருள் நிலைபெற்றிருக்கும் பெருமை கொண்ட அழகிய நகராகிய பெரிய உப்பங்கழிப் பக்கங்களையுடைய மருங்கூர்ப்பட்டினத்து ஒளிவீசும் கடைத்தெருவைப் போன்ற கல்லென்னும் அலரை இவ்வூரிலெழச்செய்து பிரிந்தகன்றோராகிய நம் காதலர் இவற்றினின்றும் நாம் அறிவன. 1. மருங்கூர்ப்பட்டினத்தில் பெரும்பெரும் அங்காடிகள் இருந்தன. 2. பெரும் அங்காடிகளின் கட்டிட நிழல்களில், கடலில் பிடித்து வந்த இறா மீன்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. 3. மருங்கூர்ப்பட்டினத்துக் கடலில் கப்பல்கள் நங்கூரமிட்டு நின்றன. எனவே, மருங்கூர்ப்பட்டினம் ஒரு பெருவணிகத்தலமாகவும்; சிறந்த துறைமுகமுமாகவும் விளங்கியது என்று அறிகிறோம். நற்றிணை 258-ஆம் பாடலைப் பாடிய இதே நக்கீரர், தனது இன்னொரு பாடலான நற்றிணை 358-இல் பசும்பூண் வழுதி மருங்கை என்று இம் மருங்கூரைக் குறிப்பிடுகிறார். இப்பட்டினம் பசும்பூண் பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பதிலிருந்து இது பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பகுதியில் இருந்து ஒரு பட்டினம் என்பது உறுதிப்படும் இந்த மருங்கூர் எங்கு உள்ளது என்பதில் ஆய்வாளர்களின் கருத்துகள் வேறுபடுகின்றன. மருங்கூர் என்ற பெயரில் தமிழத்தில் சிலஊர்கள் இன்றும் உள்ள நிலையில் தொண்டிக்கு மேல் உள்ள மருங்கூர் பட்டினமே சங்க இலக்கியம் குறிப்பிடும் மருங்கூர் பட்டினமாகும். இன்றைய இராமநாதபுரம் பகுதியில் உள்ள ‘பாசிப்பட்டின’த்திற்கு மேல் அமைந்துள்ள மருங்கூர் பட்டினமே சங்ககால துறைமுகப் பட்டினமாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு வரலாம். http://arumughompillai.blogspot.com/2018/06/18.html இது கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும் என்கிறது விக்கிப்பீடியா கட்டுரை https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D கடலூர் மாவட்டத்தில் உள்ள மருங்கூர் ஒரு சங்ககால நகரம் தான் என்கிறார் திருமதி.சுபாஷினி. http://thfwednews.blogspot.com/2017/10/72.html சங்ககாலப் புலவர்கள் மூவர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார்(அகநானூறு 80.), மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் (நற்றிணை 289), மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்(அகநானூறு 327.) ஆகியோர் அந்தப் புலவர்கள். பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என் - நற் 358/10
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்