Skip to content

சொல் பொருள்

(வி) 1. பார்வையிலிருந்து நீங்கு, 2. பார்வையிலிருந்து நீக்கு, 3. மூடு,  4. ஒளித்துவை, 5. காப்பாற்று,  6. தடு, 

2. (பெ) 1. வேதம், 2. இரகசியம், 3. மறைவிடம், மறைத்துக்கொள்ளும் இடம், 4. மறைவிடம், மறைந்து/ஒளிந்து கொள்ளும் இடம், 5. மறைத்தற்குரிய உறுப்புகள், 6. மச்சம், 7. மறைத்தல், 8. களவு வாழ்க்கை, 9. வஞ்சனை, ஏமாற்று, 

சொல் பொருள் விளக்கம்

பார்வையிலிருந்து நீங்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

become invisible, vanish, disappear, make invisible, hide, cover, hide, save, protect, block, scripture, secret, place of concealment, place which one conceals, place where one conceals, parts of the body for concealment, mole, concealing, pre marital secret love career, fraud, deceit

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு
மணி நிற மால் வரை மறைதொறும் இவள்
அறை மலர் நெடும் கண் ஆர்ந்தன பனியே – ஐங் 208/3-5

பொன்னிற மிக்க புதிய மலர்கள் பரவிக்கிடக்கும் அவருடைய நாட்டின்
நீலமணி போன்ற நிறமுள்ள பெரிய மலை, மாலையில் மறையும்போதெல்லாம் இவளின்
சிறப்பித்துச் சொல்லக்கூடிய மலரைப் போன்ற நீண்ட கண்களில் நிரம்பின கண்ணீர்.

சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை
ஆடு மழை மங்குலின் மறைக்கும் – நற் 282/6-8

மலைச் சாரலில்
அகில் கட்டையை எரிக்கும் குறவன், முதலில் சருகளைக் கொளுத்துவதால் எழுகின்ற புகை
அசைகின்ற மழையின் மேகமூட்டம் போலப் பரந்து மறைக்கும்

தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் – சிறு 59,60

தளர்ந்த இடையினையுடைய, தோளையும் முதுகையும் மூடுகின்ற
அசைகின்ற இயல்புடைய ஐந்து பகுதியாகிய கூந்தலினையுடைய உப்பு வாணிகத்தியர்

மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என் ஐ வாழிய பலவே பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து
தோள் பழி மறைக்கும் உதவி
போக்கு இல் பொலம் தொடி செறீஇயோனே – நற் 136/3-9

மருந்தினை ஆராய்ந்து கொடுக்கும் மருத்துவனைப் போல
என் தந்தை வாழ்க பல்லாண்டு! புகழ்ச்சிமிக்க
மலையைப் பொருந்திய நாட்டவனுக்கும் நமக்கும் இடையே சிறிதளவு
பிரிவு உள்ளதை அறிந்திருப்பவர் போல,
காதலன் நீங்கியவழித் தானும் நீங்காமல், அவன் வந்தால் தன் எல்லைக்குள் நின்று
தோளில் உண்டாகும் மெலிவு பிறர்க்குத் தோன்றாமல் ஒளிக்கும் உதவியையுடைய
கழன்று போகாத பொன்னாலான வளையல்களை என் கைகளில் செறித்தார்

பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ செருவத்து
சிறப்பு உடை செம் கண் புகைய ஓர்
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே – புறம் 311/4-7

பலரது குறைகளைத் தீர்த்துதவிய மாலையை அணிந்த இத் தலைவனுக்கு
போர்க்களத்தில் ஒருவரும் இல்லையோ,
சிறப்புடைய கண்கள் சினத்தால் சிவந்து புகையெழ நோக்கி, தன் ஒரு
கேடகத்தைக் கொண்டு காப்பாற்றும் வலிமையுடையவன்

உறைப்புழி ஓலை போல
மறைக்குவன் பெரும நின் குறித்து வரு வேலே – புறம் 290/7,8

மழை பெய்யுமிடத்து இடைநின்று நம்மை அதனின்றும் காக்கும் பனையோலை போல
தான் இடைநின்று தடுத்திடுவான், பெருமானே, பகைவர் நின்னைக்குறித்து எறிய வரும் வேலை

பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன
அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி – சிறு 203-206

கிணைப்பொருநர்களுக்கோ, புலமையோர்க்கோ,
அரிய வேதத்தை ஓதும் நாவினையுடைய அந்தணர்க்கோ,
கடவுள் – பெருமையுடைய (மேரு)மலை வாழும் – (இமைக்காமல்)கண் விழித்திருப்பதைப் போன்ற
மூடப்படாத வாயிலையுடைய அவனுடைய (ஏனையோர் புகுதற்கு)அரிய தலைவாயிலை அணு

யானே ஈண்டையேனே என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே
துறைவன் தம் ஊரானே
மறை அலர் ஆகி மன்றத்தஃதே – குறு 97

நான் இவ்விடத்தில் இருக்கின்றேன்; என் பெண்மை நலமோ
பொறுக்கமுடியாத காதல் நோயுடன் கடற்கரைச் சோலையில் உள்ளது;
தலைவன் தனது ஊரில் இருக்கின்றான்;
இரகசியமான எங்கள் நட்போ பலரும் தூற்றும் பழிச்சொல்லாகி தெருவிற்கிடக்கிறது

முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செத்து – கலி 52/1

தன் முறம் போன்ற செவியின் மறைவிடத்தில் பாய்ந்து தாக்கிய புலியைச் சினந்து

கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறை – புறம் 196/12

கல்லால்செதுக்கப்பட்டது போன்ற எனது வறுமைமிக்க, காற்றுக்கு மறைவிடமான எனது வீடு

ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே —
————————- —————————
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே – அகம் 136/25-29

விரைவாக
நாணியவளாய் இறைஞ்சினாள்,
—————— —————————–
பெரிய பலவான கூந்தலின் இருளினால் மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து.

மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி
ஊர்வான் போல் தோன்றும் அவன் – கலி 103/38,39

மச்சத்தையுடைய காளையின் மேலேயிருந்து ஆட்டம்காண்பித்துக்கொண்டு, நீர்த்துறையில் தோணியில்
செல்பவன் போலத் தோன்றுகின்றான்”;

வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே – புறம் 60/11,12

வெயிலை மறைத்தற்கு எடுத்த அச்சம் பொருந்திய தலைமையையுடைய
தாமம் பொருந்திய வெண்கொற்றக்குடையை ஒக்கும் எனக் கருதி

மறையின் என்
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண்
சென்று சேட்பட்டது என் நெஞ்சு – கலி 143/14-16

களவு வாழ்க்கையால் என்னுடைய
மென்மையான தோள்களை மெலிவித்தவனை விரும்பி, அவனிடம்
சென்று எனக்கு மிகவும் தொலைவில் இருக்கிறது என் நெஞ்சு;

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச
பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் – கலி 143/10-12

வஞ்சனையாக யாழ்வாசித்து, அந்த யாழிசையைக் கேட்டு மயங்கிநின்ற அசுணமாவை, இரக்கமில்லாமல்,
வஞ்சனையால் அதனைக் கொல்லும்படியாக, அதன் அருமையான உயிர் போகும்படி
பறையால் மிகுந்த ஒலியை எழுப்பியது போன்று, ஒருவன் என்னை வஞ்சித்து என்னைக் கைவிட்டான்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *