சொல் பொருள்
(வி) 1. தீமூட்டு, விளக்கேற்று, 2. (தீயினைத்)தூண்டிவிடு, 3. செருகு, 4. இணை, பொருத்து, 5. அழி, 6. கொல், 7. தாழிடு, 8. திறன்பெறு,
2. (இ.சொ) பால்,மீது, மேல், இடம்
சொல் பொருள் விளக்கம்
தீமூட்டு, விளக்கேற்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
make fire, light a lamp, kindle (a fire), insert, thrust, fasten, destroy, kill, bolt, latch, be proficient
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின் கரும் புகை செம் தீ மாட்டி – சிறு 155,156 மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால் கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை மூட்டி கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தா விளக்கின் – பட் 246,247 சிறைப்பிடித்துவந்த மகளிர் நீருண்ணும் துறையில் சென்று முழுகி, (அவர்கள்)அந்திக்காலத்தே கொளுத்தின அணையாத விளக்கினையுடைய நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 48-50 நெய்யைக் காலுகின்ற திரிக்குழாயையுடையோராய் நெடிய திரியை (எங்கும்)கொளுத்தி (பாவையின்)கைகளில் அமைந்த விளக்குகள் அவியுந்தோறும் (நெய் விட்டுத்)தூண்டிவிட – நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணி ஒலித்துச் சிறிது சிறிதாக அடங்கிய நடுயாமத்தும், திண் திமில் எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர் கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன் கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை – அகம் 340/18-21 வலிமை பொருந்திய படகுகளுடன் பகற்பொழுதில் கடலிலே மீன்வேட்டைக்குச் சென்ற வலிய செயலையுடைய மீன்பிடிப்போர் எறிந்த கூர்மையான உளி கடிய விசையுடன் செருகிக்கொண்டதால், ஒருங்கே பாய்ந்து கொலைத்தொழிலையுடைய சுறாமீன்கள் கிழித்த வளைந்த முடிகளைக் கொண்ட நீண்ட வலைகள் பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி முள் அரை தாமரை புல் இதழ் புரையும் நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ – பெரும் 112-115 பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து, குவிந்த இடத்தையுடைய வேலியில் (ஒன்றோடொன்று)பிணைக்கப்பட்ட வலைகளை மாட்டி, முள்(இருக்கும்)தண்டு (உடைய) தாமரையின் புறவிதழை ஒக்கும் நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களைப் (வேறு)போக்கிடம் இல்லாதவாறு வளைத்து விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி புழை-தொறும் மாட்டிய இரும் கல் அடாஅர் – மலை 193,194 விளைந்த (தினைப்)புனத்தை (பன்றிகள்)சிறிது சிறிதாக அழித்து இல்லாமலாக்கிவிடுவதால், (அப்)பன்றிகளுக்குப் பயந்து, (அவை நுழையும்)ஒடுங்கிய வழிகள்தோறும் மாட்டிவைத்த பெரிய கல் பலகையால் செய்த அடார் கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில் சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட இடு முள் புரிசை ஏமுற வளைஇ படு நீர் புணரியின் பரந்த பாடி – முல் 24-28 காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில், நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி, வேட்டுவரின் சிறு வாயில்களையுடைய அரண்களை அழித்து, காட்டிலுள்ள இடுமுள்ளாலான மதிலைக் காவலுறும்படி வளைத்து, ஒலிக்கின்ற கடலலை போல் பரந்த பாசறையில் – காமரு தகைய கான வாரணம் பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் புலரா ஈர் மணல் மலிர கெண்டி நாள்_இரை கவர மாட்டி தன் பேடை நோக்கிய பெரும் தகு நிலையே – நற் 21/8-12 காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல் மழை நீர் ஓடிய அகன்ற நெடிய முல்லைக் காட்டில் புலராத ஈர மணலை நன்றாகக் கிளறி அன்றைய நாளுக்குரிய இரையை அலகினால் பற்றிக் கொன்று தன் பெடையை நோக்குகின்ற பெருமை வாய்ந்த நிலையினை காவல் செறிய மாட்டி ஆய் தொடி எழில் மா மேனி மகளிர் விழுமாந்தனர் தம் கொழுநரை காத்தே – நற் 320/8-10 வீட்டுக்கதவுகளை இறுக்கத் தாழிட்டு, அழகிய வளையணிந்த எழில் மிக்க மாந்தளிர் மேனியையுடைய மகளிர் தப்பித்தனர் தமது கணவன்மாரைக் காத்துக்கொண்டு மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு மதில் என மதித்து வெண் தேர் ஏறி என் வாய் நின் மொழி மாட்டேன் – நற் 342/1-3 குதிரை எனக் கருதிப் பனைமடலால் செய்த குதிரையில் ஏறி வருவாரைப் போலவும் கோட்டை மதில் எனக் கருதி பேய்த்தேரைத் தாக்கி மோதுவதைப் போலவும் என்னிடம் வருதலால், என் வாயால் நீ கூறவேண்டியதைக் கூற வல்லேனல்லேன் நின்_மாட்டு அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது – பதி 89/13,14 நின்பால் அன்புகொண்டு அடங்கிய நெஞ்சம் குற்றப்படுதலை அறியாமல் நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்_மாட்டு இவளும் இனையள் ஆயின் – அகம் 2/12,13 கட்டுப்படுத்த எண்ணியும் அடங்காத நெஞ்சமுடன், உன்னிடம் இவளும் இத்துணை காதல் கொண்டவளாயின்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்