Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பொய், 2. வஞ்சனை, கபடம், 3. ஏமாற்று, 4. பொய்த்தோற்றம், 5. அழகு, 6. மாமை நிறம், 7. மயக்கம், மந்திரம், வசியம், 8. கனவு

சொல் பொருள் விளக்கம்

பொய்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

falseness, deception, deceit, treachery, false appearance, beauty, the colour of tender mango leaf, charm, spell, dream, vision

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
மாயம் அன்று தோழி ——————-
——————- ————————
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே – நற் 294

தீயையும் தென்றலையும் ஒன்றுசேர ஆகாயம் பெற்றிருப்பதைப் போல,
நோயையும், இன்பத்தையும் கொண்டிருக்கிறதல்லவா!
பொய் இல்லை இது தோழி! ——————–
——————————— —————-
இலங்குகின்ற மலைநாடனின் அகன்ற மார்பு

மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும்
உடன்ற_கால் – கலி 2/3-5

கூற்றுவன் போல் சினங்கொண்டு, வஞ்சனையைச் செய்கின்ற அரக்கர்களைக்
கொன்று அழிக்கும் ஆற்றலோடு, முக்கண்ணனாகிய சிவன் அந்த அரக்கர் வாழும் திரிபுரக் கோட்டைகளைச்
சினந்து நோக்கிய பொழுது

வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின்
மாயம் மருள்வார் அகத்து – கலி 88/6,7

“வேலை மெனக்கிட்டு உண்மையல்லாத பிதற்றல்களை இங்கே சொல்லாதே! அவற்றைக் கூறு உன்
ஏமாற்றுவேலையைக் கண்டு மயங்குவாரிடம்”;

பசும் பிசிர் ஒள் அழல்
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு – பதி 62/5,6

பகைப்புலத்தைச் சுட்டெரித்த பசிய பிசிர்களுடன் ஒளிவிடும் நெருப்பானது
பல ஞாயிறுகளைப் போன்ற மாயத்தோற்றத்துடன் சுடர்விட்டுத் திகழ,

மாய குறு_மகள் மலர் ஏர் கண்ணே – நற் 66/11

அழகிய இளம்புதல்வியின் மலர் போன்ற கண்கள் – பின்னத்தூரார் உரை

மாய குறு_மகள் மலர் ஏர் கண்ணே – நற் 66/11

மாமை நிறமுடைய என் இளமகளின் மலர் போன்ற கண்கள் – ஔவை.சு.து. உரை

மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து – நற் 323/4

நின்பால் மயக்கமுற்ற நட்பினால் மாட்சிமையுடைய இனிய நலத்தையும் ஒழியவிட்டு- பின்னத்தூரார் உரை

வேய் புரை மென் தோள் பசலையும் அம்பலும்
மாய புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்க
சேய் உயர் வெற்பனும் வந்தனன் – கலி 39/49-51

மூங்கிலைப் போன்ற மென்மையான தோள்களின் பசலையும், ஊரார் பழிச்சொல்லும்,
பொய்யாகக் கனவில் காணும் சந்திப்புகளும் எல்லாம் ஒருசேர நீங்கிப்போகும்படியாக,
மிக உயர்ந்த மலைக்கு உரியவன் பெண்கேட்டு வந்தான்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *