சொல் பொருள்
(பெ) 1. சிறுவர் விளையாட்டுக் கருவி, 2. உருண்டை, 3. நீர் பீய்ச்சும் கருவி, 4. சூதாடு கருவி,
கமலை வண்டி, நூல்குண்டு, கருப்புக் கட்டி வட்டு என்பது பொதுவழக்கு, மாத்திரை, கிறுக்கு, சுற்றிச் சுற்றி வருதல்
சொல் பொருள் விளக்கம்
வட்டு என்பது கமலை வண்டி என்னும் பொருளில் உழவர் வழக்காக வழங்கும். நூல்குண்டு என்னும் பொருளில் கொத்தர் வழக்காக உள்ளது. கருப்புக் கட்டி வட்டு என்பது பொதுவழக்கு. குமரி மாவட்டத்தில் வட்டு என்பது மாத்திரை என்னும் பொருளில் வழங்குகின்றது. இதுவும் வடிவு கருதிய வழக்கே. கிறுக்கு என்னும் பொருளில் இரணியல் வட்டாரத்தில் வழங்குதல். சுற்றிச் சுற்றி வருதல் கருதியது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a children’s game piece, that which is round and spherical, globe, ball, a water-squirt, Small spheroidal pawn, dice, draught
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும் சினை பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் – நற் 3/1-4 அடைகாக்கும் பருந்து வருத்தமுடன் இருக்கும் வானத்தை முட்டும் நீண்ட கிளையினையும் பொரிந்துபோன அடிமரத்தையும் உடைய வேம்பின் புள்ளிபுள்ளியான நிழலில் கட்டளைக் கல் போன்ற வட்டரங்கினை கீறிக்கொண்டு கல்லாத சிறுவர்கள் நெல்லிக்காய்களைக் கொண்டு வட்டு ஆடும் இந்தக் காலத்தில் இதனை குண்டு விளையாட்டு அல்லது கோலி விளையாட்டு என்பர். அன்றைய சிறுவர்கள் வைத்து விளையாடிய நெல்லிக்காய்கள் இன்று கோலிக்குண்டு எனப்படும். சிறிய குழிகளை அமைத்து அதற்குள் இந்த கோலிகளை விரல் நுனியில் வைத்துத்தெறித்து விழப்பண்ணும் விளையாட்டு. இதில் பலவகை உண்டு. குழியாட்டம் ஒருகுழியாட்டம் – சுவரோரம் அரையடி தள்ளிப் போடப்பட்ட குழிக்குச் சுமார் பத்தடி தொலைவிலிருந்து குண்டுகளை உருட்டி விளையாடுவது. முக்குழியாட்டம் – சுமார் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நேர்கோட்டில் மூன்று குழிகள் போட்டு அதில் குண்டுகளைப் போட்டும், அடித்தும் விளையாடுவது. பேந்தா-ஆட்டம் – சுமார் 50-க்கு 30 சென்டி-மீட்டர் அளவுள்ள செவ்வகம் நீள-வாக்கில் இரண்டாகப் பகுக்கப்படும் நடுக்கோடு போடப்பட்டது இந்த ஆட்டத்தின் அரங்கம். குண்டு கோட்டில் நிற்காமல் உருட்டி 10 புள்ளிகள் (பழம்) சேர்ப்பது.இந்த விளையாட்டு. செல்வர் வீட்டுக் குழந்தைகள் யானையின் தந்தத்தில் இந்த வட்டினைச் செய்துகொள்வார்கள். நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை – அகம் 160/5,6 நிறையவாய சூலுற்ற ஆமை, மறைய ஈன்று புதைத்த யானைக் கொம்பினாற் செய்த வட்டின் வடிவமுடைய புலால் நாறும் முட்டையை அட்டு அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை – நற் 193/1 உருக்கிய அரக்குப்போன்ற சிவந்த வட்டமாகிய மொட்டினையுடைய ஈங்கை வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும் – பரி 11/55 சாயம் கலந்த நீரை உள்ளேகொண்ட பீச்சாங்குழலை விட்டெறிவோரும் வட்டு உருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டு சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து போர் ததும்பும் அரவம் போல் கருவி ஆர்ப்ப கருவி நின்றன குன்றம் – பரி 18/42-45 சூதில் வட்டு உருட்டுவதில் வல்லவனே! உன் மலையில், நெட்டுருட்டு என்னும் தாளவகை மிகுந்து ஒலிக்கும் ஒலியுடன் சிறந்து, போரில் மிகுத்து எழும் ஆரவாரம் போல இசைக்கருவிகள் ஆரவாரிக்க, கூட்டமான மேகங்களும் அவற்றுடன் முழங்கி நின்றன;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்