Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தகுதி,  2. பாராட்டு,  3. ஒருவர்க்குச் செய்யப்படும் மரியாதை, சிறப்பு, 4. சிறப்பு, மேம்பாடு, 5. ஒழுங்கு, முறைமை,

வரிசை – ஒழுக்கம்

சொல் பொருள் விளக்கம்

‘எறும்பு வரிசை’ ஓர் ஒழுங்கு முறையாக உலகமெல்லாம் பரவியிருத்தல் அறியக் கூடியது; ஒன்றன்பின் ஒன்றாகச் செல்லும் எறும்பு வரிசை ‘எறும்பின் ஒழுக்கு’ எனச் சங்க நாளிலேயே சொல்லப்பட்டது. ஆயினும் பொருள் தட்டுப்பாடு, போக்குவரவு நெருக்கடி, காட்சிச்சாலை ஆகியவற்றால் அண்மைக்காலத்தே தான் வரிசை வழக்கில் கொணரப்பட்டதாம். கியூ முறை() என்பது எறும்புச்சாரி முறையே. நீர் ஒழுக்கு, எறும்பொழுக்கு, ஒழுக்கம் என்பவையெல்லாம் ஒழுங்கு முறைப்பட்டதாம். ‘உன் வரிசை தெரியுமே’ என்பதில் வரிசை ஒழுக்கமாதல் அறிக. வரிசை கெட்டவன் ஒழுக்கமற்றவன் என்பதாம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

worth, merit, regard, Distinctive mark of honour or privilege granted by a royal or other authority, excellence, eminence, order, regularity

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்த – சிறு 217,218

(புலவரின்)தகுதியை அறிதலையும், குறையாமல் கொடுத்தலையும்(உள்ள அவனை)
பரிசில் (பெற்று வாழும்)வாழ்க்கையையுடைய பரிசிலர் புகழ்ந்துசொல்ல,

வரிசை பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை – கலி 85/35

உன் புகழைப் பாராட்டும் பெரிய பாராட்டுரைகளைக் கேட்டு மீதியுள்ள எல்லாப்பாலையும் பருகுவாயாக,

வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை – புறம் 47/6

தம்மைப் புரப்போராற் பெறும் சிறப்புஏதுவாக வருந்தும் இப் பரிசிலான் வாழும் வாழ்க்கை

நின், ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப
பாடுவன்மன்னால் பகைவரை கடப்பே – புறம் 53/14,15

நினது, வென்றிகொண்ட சிறப்பிற்குப் பொருந்த
பாடுவேன், நீ பகைவரை வென்ற வெற்றியை

வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன் – புறம் 200/14

பகைவரைப் போர்செய்யும் முறைமையால் பொருது அவர்களைத் தாழ்விக்கும் வாளால் மேம்பட்டவன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்.

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *