வல்சி என்றால் வாழத் தேவையான உணவு
1. சொல் பொருள்
(பெ) 1. வழக்கமாக உண்ணும் உணவு, 2. வாழ்க்கைக்கான உணவு,
2. சொல் பொருள் விளக்கம்
நாம் எந்த உணவை உண்டு உயிர்வாழ்கிறோமோ அதுதான் நமக்கு வல்சி. அது என்ன பொருளாக இருந்தாலும், எந்த நிலையில்
இருந்தாலும் அது வல்சிதான்.
உழவர்களுக்கு நெல், பருப்பு வகை எல்லாமே வல்சிதான் என்கிறது பெரும்பாணார்ருப்படை. அந்த நெல்லைக் குற்றி அரிசி ஆக்கினால் அதுவும் வல்சியே. அந்த அரிசியைச் சோறாக ஆக்கினால் அதுவும் வல்சியே. அந்த நெல்லைக் குற்றி, உமியிலிருந்து தவிட்டைப் புடைத்தெடுத்து அதனைப் பன்றிக்குக் கொடுப்பர். அந்தப் பன்றிக்குத் தவிடுதான் வல்சி.
ஒரு பசுவை வளர்த்து, அதினின்றும் கிடைக்கும் பால், மோர், வெண்ணெய், நெய் ஆகியவற்றை விற்று, அதில் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு பிழைப்பு நடத்துவோருக்கு வல்சி வழங்குவது அந்தப் பசு. அதனை ஓர் ஆன் வல்சி என்கிறது குறுந்தொகை. கூகை எனும் ஆந்தைக்கு எது உணவு? வீட்டில் வாழும் எலிதானே. எனவே எலி என்பது கூகையின் வல்சி.
ஒவ்வொருவருக்கும் வாழ்வுதரும் உணவு அவர்களுக்கு வல்சி
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
usual food, life-giving food
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
இல் எலி வல்சி வல் வாய் கூகை – அகம் 122/13
இல்லிலுள்ள எலியை வழக்கமான உணவாகக் கொண்ட வலிய வாயினதாகிய கூகையின் சேவல்
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை – குறு 295/4
ஒரு பசுவினால் வரும் வருமானத்தால் உணவு கொண்டு வாழும் சிறப்பில்லாத வாழ்க்கை
குடி நிறை வல்சி செம் சால் உழவர் – பெரும் 197
குடியிருப்பு நிறைந்த, உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள்
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி/மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 255,256
உழவர் தந்த வெண்மையான நெற்சோற்றை
நெல்மா வல்சி தீற்றி பல் நாள் – பெரும் 343
நெல்லின் உமியை மாவாக்கிய (தவிட்டு)உணவினை (வயிறு நிறைய)த் தின்னப் பண்ணிப், பலநாளும்
கோழ் ஊஉன் குறை கொழு வல்சி/புலவு வில் பொலி கூவை – மது 141,142
கொழுத்த ஊனையுடைய இறைச்சித்துண்டு கலந்த கொழுமையான சோற்றினையும்,
தீம் புழல் வல்சி கழல் கால் மழவர் – மது 395
இனிய குழல்போன்ற தின்பண்டங்களை உணவாகக்கொண்ட கழலணிந்த காலினையுடைய மழவரின்.
மன்னனுடைய முரசை ஒலிக்கும் வீரர்கள் எப்போதும் முரசின் அருகிலேயே இருக்கவேண்டும்; எந்த நேரமும் அறிவிக்கப்படவேண்டிய செய்தி வரலாம் இல்லையா? அப்போது தம் பசிக்கு உண்டுகொள்வது அவர்களின் வல்சி. மதுரைக்காஞ்சி சொல்வதைப் பாருங்கள். இங்கே தீம் என்பது சுவைத்தால் இனிப்பது. புழல் என்பது உள்துளை. குழல் போன்று இனிப்பானது எது? தெரியவில்லையா? சுருண்டு சுருண்டு இருக்குமே! நமது ஜிலேபியேதான்! தளர்வுற்றிருக்கும்போது இனிப்பை இன்றும் உண்கிறோமே! அன்றைக்கு நம் மறவர்கள் உண்டிருக்கின்றனர்.
குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி/அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ – மலை 183,184
குறமகள், (தான்)ஆக்கிய அருமையாக மலர்ந்து உதிரிஉதிரியான சோற்றை,
வளம் செய் வினைஞர் வல்சி நல்க – மலை 462
(போரடித்து)வளம் சேர்க்கும் தொழிலாளிகள் நெல்லை முகந்து தர,
எறி மட மாற்கு வல்சி ஆகும் – நற் 6/8
துள்ளிக்குதிக்கும் இளைய மானுக்கு உணவு ஆகும்
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை – நற் 24/5
விளாம்பழங்களையே உணவாகக் கொண்ட வேற்று நாட்டு அரிய வழியில்
அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் – நற் 43/5
அரிய பாலை வழியில் செல்வோர்க்கு உண்ணும் உணவாக ஆகும்
களிறு பெறு வல்சி பாணன் கையதை – நற் 310/9
களிற்றைக்கொண்டு பிழைப்பு நடத்தும் பாணனின் கையில் உள்ள
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை – குறு 295/4
ஒரு பசுவினால் வரும் வருமானத்தைக் கொண்டு வாழும் சிறப்பில்லாத வாழ்க்கை
வலைவர் தந்த கொழு மீன் வல்சி/பறை தபு முது குருகு இருக்கும் – ஐங் 180/2,3
வலைவீசும் மீனவர் கொண்டுவந்த மிகுதியான மீனைத் தனக்கு உணவாகக் கொள்ள
முளவுமா வல்சி எயினர் தங்கை – ஐங் 364/1
முள்ளம்பன்றியை உணவாகக் கொண்ட எயினரின் தங்கையான
நிண ஊன் வல்சி படு புள் ஓப்பும் – ஐங் 365/2
கொழுப்புள்ள தசையுணவினைக் கவர்ந்து செல்ல வரும் பறவைகளை விரட்டும்
பச்சூன் பெய்த பைம் நிண வல்சி/பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ – ஐங் 391/3,4
பச்சை ஊன் கலந்த புதிய கொழுப்புள்ள சோற்றினைப்
கொள்ளை வல்சி கவர் கால் கூளியர் – பதி 19/1
பகைவர் நிலத்தில் கொள்ளையிட்டதையே உணவாகக் கொண்ட, முன்னேறிச் செல்லும் கால்களையுடைய ஏவலர்கள்
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/8
வெண்மையான நிணம் கலந்த ஊன்சோற்றினையும் உணவாகக் கொண்ட மழவர்களின் கவசம் போன்றவனே!
செந்நெல் வல்சி அறியார் தத்தம் – பதி 75/12
அங்குள்ளோர் செந்நெல் உணவினை அறியமாட்டார்; எனவே, அவரவருடைய,
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை – அகம் 8/2
புற்றாஞ்சோறை உணவாகக் கொண்ட பெரிய கையை உடைய ஆண்கரடியின்
களிறு பெறு வல்சி பாணன் எறியும் – அகம் 106/12
களிற்றியானையைப் பரிசிலாகப் பெறுவதனால் உண்டு வாழ்கின்ற அம்மன்னனுடைய பாணன் அடிக்கின்ற
கொழு மீன் வல்சி என்றனம் இழுமென – அகம் 110/17
கொழுமீனால் ஆக்கிய சோறு” என்று கூறினோம், சட்டென்று
இல் எலி வல்சி வல் வாய் கூகை – அகம் 122/13
வீட்டு எலிகளை உணவாகக் கொண்ட வலிமையான வாயினைக் கொண்ட கூகை
கொல் பசி முது நரி வல்சி ஆகும் – அகம் 193/10
கொல்லுகின்ற பசியையுடைய முதிய நரிக்கு உணவாக அமையும்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு-உறுத்த – அகம் 224/12
நன்கு உலர்ந்த உணவுப் பொருளாகிய தானியத்தை இட்டு, கையால் சுற்றுகின்ற
மட மான் வல்சி தரீஇய நடுநாள் – அகம் 238/3
அதற்கு இளைய மானாகிய உணவைக் கொண்டுவந்து தர, நடு இரவில்
கொழு மீன் வல்சி புன் தலை சிறாஅர் – அகம் 290/3
கொழுத்த மீன்களை உணவாகக் கொண்ட புன்மையான தலையையுடைய சிறுவர்களின்
வித்தா வல்சி வீங்கு சிலை மறவர் – அகம் 377/4
தாம் விதைத்து விளைவிக்காத அந்த உணவினை உண்ணும் பெரிய வில்லையுடைய மறவர்கள்
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும் – புறம் 190/2
உணவைக் கொண்டுவந்து தன்னுடைய வளையில் நிறையச் சேமித்துவைக்கும்
வல்சி இன்மையின் வயின்_வயின் மாறி – புறம் 211/18
உணவில்லாததால் என் வீட்டின் பழைய சுவர்களில் வேறுவேறு இடங்களில் மாறிமாறித் தோண்டிய
வேளை வெந்ததை வல்சி ஆக – புறம் 246/8
வேகவைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு,
பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது – புறம் 269/7
பிழிந்த மதுவாகிய உணவை உண்ணுமாறு உன்னை வேண்டியும், நீ அந்த
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி/கான கோழியொடு இதல் கவர்ந்து உண்டு என – புறம் 320/10,11
மான் தோலின் மேல் பரப்பி உலரவைத்த தினை அரிசியான தீனியைக்
புல்_அகத்து இட்ட சில் அவிழ் வல்சி/புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு – புறம் 360/18,19
தருப்பைப் புல்லைப் பரப்பிய இடத்தில் படைக்கப்பட்ட கொஞ்சம் சோற்றை உணவாகப்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்