Skip to content

வள்ளைப்பாட்டு

வள்ளைப்பாட்டு

1. சொல் பொருள் விளக்கம்

வள்ளை – உலக்கை; மகளிர் நெற்குத்தும் போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு.நெல், தினை ஆகியவற்றை உரலில் இட்டு, இரண்டு பெண்கள் உலக்கையால் மாறிமாறிக் குற்றும்போதுஏற்படும் களைப்பு தெரியாமல் இருப்பதற்காகப் பாடிக்கொள்ளும் பாடல் வள்ளைப்பாட்டு எனப்படும்.

இது உலக்கைப் பாட்டு, உரற்பாட்டு, பொற்சுண்ணம், அம்மானை வள்ளை, வள்ளைக் கூத்து எனப் பல்வேறு பெயர்களில் வழங்கப்பெற்று வருகின்றது.

மகளிர் நெல் முதலான தானியங்களைக் குற்றுவர். அப்போது அவர்களது வளையல்கள் குலுங்கும். ஒருவர் இரு கைகளும் மாறி மாறி வர உலக்கைமூச்சு போடும்போதும், இருவர் சேர்ந்து, இருவரது நான்கு கைகளாலும் உலக்கைமூச்சுப் போடும்போதும் வளையல் பண்ணிசை பிறக்கும். இதற்கு வள்ளை என்று பெயர். இப்படிக் குற்றும்போது பாடலும் பாடுவர். இதற்கு வள்ளைப்பாட்டு என்று பெயர்.

இப்படிப் பாடும்போது இறைவனையோ, அரசனையோ, சகோதரனையோ, தலைவனையோ வைத்துப்பாடுவது வள்ளைப்பாட்டு மரபு. அதோடு உரலில் உலக்கையைக் கொண்டு இடிக்கும் சத்தத்தோடு பாடலின் சந்தம் பொருந்தி வரவேண்டும்.

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

Song in praise of a hero, sung by women when husking or hulling grain

3.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பா அடி உரல பகு வாய் வள்ளை
ஏதில்மாக்கள் நுவறலும் நுவல்ப – குறு 89/1,2

பரந்த அடிப்பகுதியையுடைய உரலிடத்து பகுத்த வாயாற் பாடும் வள்ளைப்பாட்டை
அயலோராகிய பெண்கள் குறையும் கூறுவர்;

தினை குறுமகளிர் இசை படு வள்ளையும் – மலை 342

தினையைக் குற்றுகின்ற பெண்களுடைய தாளத்தோடு கூடிய வள்ளைப்பாட்டும்

கொல் யானை கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்
வள்ளை அகவுவம் வா இகுளை – கலி 42/7,8

கொல்லுகின்ற யானையின் கொம்பினால், மூங்கில் நெல்லைக் குற்றியவாறு நாம்,
வள்ளைப்பாடலாய்ப் பாடுவோம், வா, தோழியே!

தெய்வமாகிய கண்ணகியை வள்ளைப்பாட்டுப் பாடி வாழ்த்தும் மகளிர் இவ்வாறு வாழ்த்துகின்றனர்.

பாடல் சால் முத்தம் பவள உலக்கையால்
மாட மதுரை மகளிர் குறுவரே
வானவர்கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்
மீனக் கொடி பாடும் பாடலே பாடல்
வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் - சிலப்பதிகாரம் 29 வாழ்த்துக்காதை வள்ளைப்பாட்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *