Skip to content
வானி

வானி என்பது ஒரு ஆறு, ஒரு மரம், ஒரு பூ

1. சொல் பொருள்

(பெ) வானி ஆறு, ஒரு மரம் / பூ,

2. சொல் பொருள் விளக்கம்

கொங்கு மண்டலத்தின் மேற்கு எல்லை சேரநாடு. சேரருக்கு வானவர் என்ற பெயரும் உண்டு. வானவன் மாதேவி என்பது சேரகுல அரசியின் பெயர்.

பாண்டியருக்கும், சோழருக்கும் அரண்மனை சமவெளியில் இருந்தது. சேரருக்கோ மலையில் இருந்தது. மலையில் இருந்து அரசாண்டதால் இவர்கள் வானவர் எனப்பட்டனர். பிற்காலத்தில் அக்காரணம் பற்றி வந்த சொல்லே மலையாளி.

வானி
வானி

வானவர் நாட்டு மலையிலிருந்து வருவதால், ‘வானி’ எனப் பெயர் பெற்ற இந்த சேரநதியை மலையடிவாரத்தில் தெற்கே சேரும் சிற்றாறு ‘சிறுவானி’.

பதிற்றுப்பத்து 86 பாடல் வானியாற்றின் சிறப்பை கூறுகிறது.

உறல்உறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்(று)அமர்க் கடந்த வெம்திறல் தடக்கை
வென்வேல் பொறையன் என்றலின் வெருவர
வெப்(பு)உடை ஆடூஉச் செத்தனென் மன்யான்

நல்இசை நிலைஇய நனம்தலை உலகத்(து)
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின்
பாடுநர் புரவலன் ஆடுநடை அண்ணல்

கழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும்
புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த
பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்துவரு வானி நீரினும்
தீந்தண் சாயலன் மன்ற தானே. – பதிற்றுப்பத்து 86

பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை
பாடியவர்: பெருங்குன்றூர்கிழார்

இளஞ்சசேரல் இரும்பொறை வானியாற்று நீரைக்காட்டிலும் குளுமையான குணப்பாங்கினைக் கொண்டவன்.

வானி
வானி

அதே ஆறு கிழக்கே பாய்ந்து வந்து, காவிரியுடன் கூடுமிடம் வானிக்கூடல் எனப்படுகிறது. இந்த நதிக்கு பூவானி என்ற பெயரும் உண்டு. அதுதான் பார்வதி தெய்வத்தின் பெயரில், பவானி என்று அழைக்கப்படுகிறது.

பவானி என்பது வடமொழி. பவானி ஆற்றின் தமிழ்ப்பெயர் ‘வானி ஆறு’ என்பதாம். இன்றைக்கும் பவானி ஆற்றங்கரையில் கீழ்வானி, மேல்வானி, பூவானி ஆகிய பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன.

இது பெரிய வானி ஆறு. இன்னொன்று சிறிய வானி ஆறு. அந்தச் சிறிய வானி ஆறுதான் ‘சிறுவானி ஆறு’ கோவைக்கு நீர் கொடுப்பது.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

River Bhavani, a tree / its flower

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வானி
வானி

சாந்து வரு வானின் நீரினும்
தீம் தண் சாயலன் மன்ற தானே – பதி 86

சந்தன மரங்கள் மிதந்து வரும் வானியாற்றின் நீரைக் காட்டிலும்
இனிய குளிர்ந்த இயல்பினன்(இளஞ்சசேரல் இரும்பொறை), உறுதியாக.

பயினி வானி பல் இணர் குரவம் – குறி 69

இந்தப் பூவைப் பற்றி வேறு சங்க இலக்கியங்களில் குறிப்பு இல்லை.

இதனை ஓமம் (Biship’s-weed, herbaceous plant, Carum copticum – Trachyspermum copticum) என்று
குறிப்பிடுகிறது தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர் (பக்கம் 442)

பவானி
பவானி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *