சொல் பொருள்
(வி) 1. வாய்க்கப்பெறு, கிடைக்கப்பெற்றிரு, 2. நன்கு அமை, 3. சித்தி, வெற்றியாகு, 4. நிச்சயமாய் நிகழ், 5. சரியாக நிகழ்,
2 (பெ) 1. உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு, 2. மலர்களின் மேற்புறம், 3. திறப்பு, 4. உதடுகள், 5. விளிம்பு, 6. பாத்திரம், பை முதலியவற்றின் திறந்த மேல்பகுதி, 7. ஆயுதத்தின் முனை, 8. உண்மை, 9. இடம், 10. வாசல், சாளரம், 11. பேச்சு, மொழி, 12. சித்தித்தல், நிகழ்தல், 3. (இ.சொ) ஏழாம் வேற்றுமை உருபு,
சொல் பொருள் விளக்கம்
வாய்க்கப்பெறு, கிடைக்கப்பெற்றிரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
possess, have, properly situated, be well-formed, succeed, be gained, happen with certainty, come true, happen correctly, mouth or beak of birds, upper portion of flowers, opening, lips, rim, opening or mouth of a vessel or bag, pointed edge as of a spear, truth, place, gate, window, talk, speech. coming true, succeeding, A sign of the locative case
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அளியன்தானே முது வாய் இரவலன் – திரு 284 அருள்புரியத் தகுந்தவன் (இந்த)அறிவு வாய்க்கப்பெற்றோனாகிய இரவலன், நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 62,63 நேருக்கு நேராக அமைந்த சாளரங்கள் திறக்கப்படாமல், சிக்கென்ற நிலையினையுடைய தம்முள் பொருதுதல் வாய்த்த (இரட்டைக்)கதவுகள் தாழிட்டுக் கிடக்க; வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே – நற் 148/12 வருந்தமாட்டேன் தோழி, வெற்றியடையட்டும் அவரின் பயணம் தெவ்வர் முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து வருதல் தலைவர் வாய்வது நீ நின் பருவரல் எவ்வம் களை மாயோய் – முல் 18-21 பகைவர் மண்ணை வெற்றிகொண்டு பெற்ற திறையினையுடையோராய், (தமது)வினையை முடித்து வருவது (நம்)தலைவர்க்கு நேர்வது (உறுதி), நீ நின் துன்பம் தீராமையைப் போக்கு, மாமை நிறத்தையுடையோளே’ மாரி வாய்க்க வளம் நனி சிறக்க – ஐங் 10/2 மழை காலம் தவறாமல் பெய்யட்டும்; வளம் மிகுந்து சிறக்கட்டும் வாள் வாய்த்த வடு பரந்த நின் மற மைந்தர் – புறம் 98/12,13 பகைவரின் வாள் குறிதவறாமல் தைத்த வடுப் பரந்த நின்னுடைய மறத்தையுடைய வீரரது புல்லென் யாக்கை புலவு வாய் பாண – பெரும் 22 பொலிவழிந்த உடம்பினையும் புலவு நாறும் வாயினையுமுடைய பாணனே உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின் கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் – திரு 47-51 காய்ந்து போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும், சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், கொடிய பார்வையினையும், பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு, கொடிய பாம்பும் தூங்கும் அளவிற்குப் பெரிதான பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், சொரசொரப்பான பெரிய வயிற்றையும், (கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள் கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் – பொரு 34 கிளியின் வாயோடு ஒப்பினையுடைய ஒளிவிடுகின்ற பெரிய நகங்களையும் இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த முள் தாள் தாமரை – திரு 72,73 கரிய சேற்றினையுடைய அகன்ற வயலில் முறுக்கவிழ்ந்து மேற்புறமும் மலர்ந்த முள்ளிருக்கும் தண்டையுடைய தாமரைப் பூவில் துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி – பொரு 10 (பத்தலிரண்டும் சேர்த்தற்குத் திறந்த)துளைகளின் வாய் மறைய முடுக்குதலமைந்த ஆணியினையும் இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் பல உறு முத்தின் பழி தீர் வெண் பல் – பொரு 27,28 இலவின் இதழை ஒக்கும் இனிய சொல்லையுடைய சிவந்த வாயினையும், பலவும் சேர்ந்த முத்துக்கள் போல் குற்றம் தீர்ந்த வெண்மையான பல்லினையும், அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும் – பொரு 144 அர(த்தின்) வாய் (போலும் வாயையுடைய)வேம்பின் அழகிய தளிரால் செய்த மாலையினையும் ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு – சிறு 253 ஆரக்கால்களைச் சூழ்ந்த இரும்புப்பட்டையை மேற்புறம் கொண்ட சக்கரத்துடன் முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி – பெரும் 99 விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி, வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 119 கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே – மது 198 பொய்யைத் தூர விலக்கிய வாய்மையுள்ள நட்பினையுடையாய் இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள் – கலி 24/3 இனிய, சுவை மிக்க சொற்களையுடையவளே! மெய்யே முக்காலும்; உன்னுடைய உறவான என் கணவன் விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் – நெடு 73 விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிறு வளி நுழையும் வாய் பொருந்தி – பட் 151 தென்காற்று வரும் சாளரங்களைச் சேர்த்து வெம் வாய் பெண்டிர் கவ்வை தூற்ற – நற் 133/6 கொடியனவற்றைப் பேசும் பெண்டிர் பழிச்சொற்களைத் தூற்ற, வாய் ஆகின்றே தோழி ஆய் கழல் சே இலை வெள் வேல் விடலையொடு தொகு வளை முன்கை மடந்தை நட்பே – குறு 15/4-6 வாய்த்தல் ஆனது தோழி ஆய்ந்தெடுத்த வீரக் கழலையும் செம்மையான இலையையுடைய வெள்ளிய வேலையும் உடைய இளைஞனோடு தொகுத்த வளைகள் அணிந்த முன்கையையுடைய மடந்தையின் காதல். நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோ —————- —————————– —– யார்வாய் கேட்டனை காதலர் வரவே – குறு 75 நீ நேரில் பார்த்தாயா? அல்லது பார்த்தவர் சொன்னதைக் கேட்டாயா? ——————- ——————— ——————- யார்வாயிலாகக் கேட்டாய்? காதலர் வந்துவிட்ட செய்தியை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்