Skip to content

சொல் பொருள்

(பெ) 1. விளைச்சல், 2. வருமானம், வருவாய், 3. வெள்ளம், 4. யானையை அகப்படுத்தும் இடம்,

வாரி – நெடுங்கம்பு, கடல், வருவாய், வாய்க்கால், கமலைத் தடம்

சொல் பொருள் விளக்கம்

வாரி என்பது நெடுங்கம்பு, கடல், வருவாய் எனப் பொதுப் பொருள் பல கொண்ட சொல். இச்சொல் திண்டுக்கல் வட்டாரத்தில் வாய்க்காலையும் கமலைத் தடத்தையும் குறித்து வழங்குகின்றது. நெடுங்கம்பு வாரி எனப்படுதல் வண்டியில் பார மேற்றப் பயன்படுத்தும் வாரிக்கம்பு ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

produce, resources, income, flood, Kheddha, an enclosure constructed to trap wild elephants

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் – புறம் 35/27

மழை பெய்யுங்காலத்துப் பெய்யாதொழியினும், விளைவு குறையினும்

பாடி சென்றோர்க்கன்றியும் வாரி
புரவிற்கு ஆற்றா சீறூர் – புறம் 330/5,6

பாடிச் சென்ற பரிசிலர்க்கேயன்றியும், தனது வருவாய்
புரவுவரி செலுத்துவதற்கும் ஆற்றாத சிறிய ஊர்

எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப
தணிவு_உற தாங்கிய தனி நிலை சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் – பரி 9/4-7

தீயைப் போன்று மலர்ந்திருக்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் விழச்செய்த பெரு வெள்ளத்தைத்
தன் விரித்த சடையினில் பாரமாக, மலர்ந்து விழும் புதிய மலரைத் தாங்குவது போன்று,
விழுகின்ற வேகம் தணியும்படியாகத் தாங்கிய ஒப்பற்ற நிலையையுடைய சலதாரி என்னும் பெயர்கொண்ட
நீல நிறக் கழுத்தினையுடைய சிவபெருமானுக்கு, மதிப்பு வாய்ந்த கார்த்திகை மகளிரிடத்தில் பிறந்தவனே!

வாரி கொள்ளா வரை மருள் வேழம் – மலை 572

யானைபிடிக்குமிடத்தில் கொள்ளாத (பகைவரது), மலையோ என்று நினைக்கத்தோன்றும் யானைகளையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *