Skip to content

சொல் பொருள்

(வி) 1. ஏவு, ஏவலை மேற்கொள், 2. வழிவிடு, வழியேசெல்,

சொல் பொருள் விளக்கம்

ஏவு, ஏவலை மேற்கொள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

order, command,

obey the command

give way, go by the way

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி
நின் குறி வந்தனென் இயல் தேர் கொண்க
செல்கம் செல வியங்கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே – குறு 114

நெய்தல் மணற்பரப்பில் எனது பாவையைக் கிடத்திவிட்டு
உனது குறிப்பிட்ட இடத்துக்கு வந்தேன், நன்கு செய்த தேரையுடைய தலைவனே!
அங்குப் போகின்றோம்; அவளைப் போகும்படி நீயே ஏவுவாயாக; இரவு வருவதால்
ஆரல் மீனைத் தின்று நிறைந்த வயிற்றையுடைய
நாரை மிதித்துவிடும் என் பாவையின் நெற்றியை
– வியங்கொள்ளல் – ஏவலை மேற்கொள்ளல் – உ.வே.சா உரை விளக்கம்

செல வியங்கொண்மோ – செல்ல நீ விடுப்பாயாக – வியங்கொள்ளல் – விடுத்தல் – செல்ல விடு என்றவாறு –
பொ.வே.சோ. உரை, விளக்கம்.

செலவியம் – செல்லவிடுதல் – ச.வே.சு.உரை விளக்கம்.

நிலம் தப இடூஉம் ஏணி புலம் படர்ந்து
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப
தோமர வலத்தர் நாமம் செய்ம்-மார்
ஏவல் வியம்கொண்டு இளையரொடு எழுதரும்
ஒல்லார் யானை காணின்
நில்லா தானை இறை கிழவோயே – பதி 54/12-17

எதிர்ப்பாரின் நிலப்பகுதி குறைவுபடும்படி அமைக்கப்பட்ட, அவரின் எல்லைக்குட்பட்ட நிலத்துப்பாசறையில் தங்கி,
ஒலிக்கின்ற முகப்பையுடைய முரசம் பாசறையின் நடுவில் முழங்க,
வலக்கையில் தண்டினை ஏந்தியவராய், போரினைச் செய்வதற்காக,
முரசின் ஏவலை மேற்கொண்டு இளைய வீரருடன் நிற்கின்ற,
உன்னுடன் உடன்படாதோரின் யானைப் படையைக் கண்டால்,
நில்லாமல் சென்று தாக்கும் சேனைகளையுடைய அரசுரிமை உடையவனே!

படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை
கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே
தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ
ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை
ஆங்கு வியம்கொள்-மின் அது அதன் பண்பே – மலை 423-427

‘தனக்குப் படியாதாரை அழித்த (யாருக்கும்)அடங்குதல் இல்லாத ஆளுமையுள்ளவனும்,
(பூங்)கொடிபோன்றவளின் கணவனும் ஆகிய (நன்னனிடம்) செல்கின்றோம்’ என்று சொன்னால்,
தசைகளையும் கிழங்குகளையும் இறையாகப்பெற்றவராய் (அவற்றை உமக்குக்)கொடுத்து,
(உம்மைப்)பேணுபவர் அன்றி, வருத்துபவர்கள் இல்லை;
(பின்னர்)அங்கே (அவர்)போகச்சொன்ன வழியைக் கொள்வீர் – அதுவே அக்காட்டின் தன்மையாம்

கண்டல் வேலி கழி சூழ் படப்பை
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என
வியம்கொண்டு ஏகினை ஆயின் – நற் 363/1-3

கண்டல் மரங்களால் ஆன வேலியும், கழி சூழ்ந்துகிடக்கும் கொல்லையையுமுடைய
தெளிந்த கடலையுடைய நாட்டுக்குச் செல்வேன் யான் என்று
வழியினை மேற்கொண்டு போவாயாயின்

சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று
நினக்கு வருவதா காண்பாய் அனைத்து ஆக
சொல்லிய சொல்லும் வியம்கொள கூறு – கலி 114/8-11

“தன்னுடைய விருப்பத்தைப் பற்றி ஒரு சொல்லும் சொல்லாத பேதையிடம், இளம்பெண்ணே! ‘ஏடா!
இந்தத் திருமணம் உனக்கில்லாமல் உன் கையைவிட்டுப்போகும், அதற்கும் நெடுநாள் இல்லை,
அந்த மணம் உனக்கே வரவேண்டுமென்று உறுதியாய் எண்ணுவாய்’, என்று இவ்வாறாக
நீ சொல்லிய சொல்லும் உன் ஏவலை அவன் மனம் ஏற்றுக்கொள்ளும்படி சொல்;
– வியங்கொளக்கூறுதலாவது – ஏவியதனைக் கேட்டாங்கு உடனே செய்யுமாறு திறம்படக் கூறுதல் என்க.
– நச்.உரை- பெ.விளக்கம்

வியம் என்ற பெயர்ச்சொல்லுக்கு (1) ஏவல், கட்டளை order, command (2) வழி, way, course என்ற இரண்டு
பொருள் உள்ளதாக அகராதிகள் குறிப்பிடுகின்றன. சங்க இலக்கியத்தில் வியம் என்ற சொல் கொள் என்ற
வினையுடன், வியம்கொள் (வியங்கொள்) என்றே சேர்த்து ஒரே தொடராகவே வரக் காண்கிறோம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *