Skip to content
வெள்ளெலி

வெள்ளெலி என்பது வெள்ளை எலி

1. சொல் பொருள்

வெள்ளை எலி

2. சொல் பொருள் விளக்கம்

வெள்ளெலி என்றோர் எலி சங்க இலக்கியத்தில கூறப்பட்டுள்ளது .

” குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர்ப்
புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம்பரல் மும்பில் சிதர்ந்த பூழி
நன்னாள் வேங்கைள் நன்களம் வரிப்பக்
கார் தலை மணந்த பைம்புதற் புறவின் “

–அகம் , 133 .
குன்றிமணி போலக் கருமையான கண்மணியுடைய எலி கூறப்பட்டுள்ளது . வெள்ளெலிகள் பழுப்பு நிறமாகக் ( Greyish brown ) காணப்படும் .வறட்சியான நிலங்களில் , பாலைப் பகுதிகளில் வெண்மை கலந்த பழுப்பு நிறமாகக் காணப்படும் . குரூஉ மயிர் என்றது இந்தப் பழுப்பு நிறத்தையே குறித்ததாகும் .இந்த எலி செம்பரல் முரம்பில் , சிதர்ந்த பூழியில்
காணப்பட்டதாகக் கூறியதிலிருந்து இந்த எலி விலங்கு நூலின் படி எது என்பதை ஐயமறத் தெளிந்து கொள்ளலாம் . எலியினத்தில் ஒரே ஒரு வகை எலியை வளைக்குப் பக்கத்தில் குவித்துள்ள புது மண்ணால் கண்டுபிடித்து விடலாம் . ( The presence of mole rat is . always made drawn by a pile of fresh earth resembling a large mole -hill , hence its name , mole – rat . )

அகநானூறு 133 ஆம் பாடல் செம்பரல் முரம்பில் சிதர்ந்த பூழியில் வேங்கைப் பூ வீழ்ந்து களத்தை வரித்ததுபோல் இருந்ததாகக் கூறுகின்றது . வெள்ளெலி எடுத்துப் போட்ட பூழி சிதர்ந்து இருப்பதாகக் கூறியதை நோக்குக . வெள்ளெலியின் வளைகள் நீண்டு மிகுதியாகக் காணப்பட்டால் வெளியே விட்டு விட்டுப் புதுமண் குவித்துக் காணப்படு மென்பர். இதையே அகநானூறு கூறுவதாகத் தெரிகின்றது! பூழி என்பது புதியதாகத் தோண்டியெடுக்கப்பட்ட மண்ணைக் குறிக்கின்றது . குழிப் பூழியைப் போல் இது வளைப் பூழி , இத்தகைய வளைப் பூழியை எடுத்துப் போகும் எலி என்பதில் ஐயமேயில்லை. இந்த எலி வறட்சியான நிலத்திலும் வாழும் ; தோட்டங்களிலும் விளைச்சல் நிலங்களின் அருகிலும் வாழும் .
( The Indian mole – rat commonly lives in cultivated plains. and gardens not pasture lands but is found even in waste lands. )

இந்த வெள்ளெலிகள் வளைகளைக் குறுக்கும் நெடுக்குமாக உள்ளே சுரங்கப் பாதைகளை வைத்துள்ளது போல அமைத்துக் கொள்ளும் . வளைகள் வாய் திறந்து காணப்பட்டாலும் இவ்வெலி தூங்கும் அறைக்கு அருகில் அமைத்திருக்கும் வெளியே வரும் வளையின் வாய் மூடியிருக்கும். பொய் வளையாக முடுக்குத் தெரு போல இவ்வளை இருக்கும். இந்தப்
பொய் வளை வழியாக எலி வேறு வழியின்றி மாட்டிக்கொண்டால் தப்பித்து ஓடிவிடும் . திறந்த வளைகளின் வழி வெளிவராது . இந்தப் பொய்வளை வழியாக வெளியே வந்து தப்பிக்கும் இதன் செயலை நாட்டுப் புற மக்கள் தெரிந்து வைத்துள்ளனர் . மூடிய பொய் வளையின் வாயில் உள்ள மண்ணைத் தள்ளிவிட்டு வெளியே ஓடும் இந்தத் துளையைப் பொய்ப்பான்,
( Bolt holes ) என்று இன்றும் நாட்டு மக்கள் வழங்குகின்றனர் . இந்த எலிகள் விளைச்சலைப் பாழாக்கும்

முற்றிய கதிர்களை விளைச்சலிலிருந்து கொண்டு வந்து வளைக்குள் உள்ள அறைகளில் சேர்த்து வைக்கும் . இதை நன்கு உணர்ந்த குடியானவர்கள் பஞ்சகாலத்தில் இந்த வளைகளைத் தோண்டி உணவைத் தேடுவர் . ( The burrows of mole – rats and gerbilles are often dug up by hungry people for the hoards of grain stocked during the harvest time. )

வெள்ளெலி
வெள்ளெலி

” விளைபதச் சீறிட நோக்கி வளைகதிர்
வல்சி கொண்டளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி யுள்ள தம்
வளன்வலி யுறுக்கு முளமி லாளரொடு “

–புறம் , 190 .
முற்றி விளைந்த கதிர்களிலிருந்து தன் நிறையைத் தேடி வளைக்குள் வைக்கும் எலியிதுனுடைய முயற்சியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது . புறநானூறு கூறும் இந்த எலி வெள்ளெலி ( mole – rat ) ஆகவே இருக்கும் . வெள்ளெலிக்கு அகன்றவாய் உண்டென்று விலங்கு நூலார் கூறுவர் . அகநானூறும் இந்த எலியின் வாயை மோவாய் ( Broad muzzle ) என்பே
கூறுவதைக் காணலாம் . இச்செய்தியும் வெள்ளெலி எதுவென உறுதியாகக் காண உதவுகின்றது . வெள்ளெலியைச் சிலர் ( gerbille ) எனப்படும் எலி என்று கொண்டனர் : சென்னைப் பல்கலைக்கழக அகராதி அவ்வாறு கொண்டது . சங்க இலக்கியத்தில் காணும் செய்திகள் வழி ஆராய்ந்து பார்த்தால் தவறாகவே தோன்றுகின்றது . வெள்ளெலியை ( Mole – rat ) என்றே கொள்ள வேண்டும் .. இந்த எலியை விலங்கு நூலார் ( Bandicota Bengalensis ) என்று கூறுவர் .

இந்த வெள்ளெலி பெருச்சாளி இனத்தைச் சார்ந்த மிகச் சிறிய எலியாகும் .

“ வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும் “

— நற்றிணை , 83 .

நற்றிணைப் பாடலில் ( 83 ) எலிவான் என்பதை வான்எலி என்று கொண்டு வெள்ளெலி என்று பொருள் கொண்டனர். இந்த வெள்ளெலியும் இதே எலியாகவே இருக்கலாம் . வான் சூட்டோடு என்று கொண்டு எலியின் வெண்மையான சூட்டிறைச்சி
என்று கொள்வது பொருத்தமென்று தோன்றுகிறது . நிகண்டுகளில் காரெல் , சீறெலி , அகழெலி , இல்லெலி , பெருச்சாளி ஆகிய எலிகளின் பெயர்கள் வருகின்றன . காரெலி கருப்பையாகும் . சீறெலியும் பெருச்சாளியும் ( Bandicoot rat ) ஓரினமெனவே தோன்றுகின்றது . இரண்டும் சீறுவன . அகழெலி என்பது அகழான் என்றழைக்கப்படுகின்றது . இதை (Beld mice ) என்பர் . இது தவிர நாட்டு மக்கள் சருகெலி (Bush rat ) , கொல்லை எலி அல்லது புல்லெலி ( Mole rat ) என்ற பெயர்களையும் வழங்குவர் . சருகெலி மரத்திலும் புதர்களிலும் வாழ்வது. சீறெலி என்பது வெள்ளெலியே என்று தெரிகின்றது , பெருச்சாளி போல இந்த வெள்ளெலியும் சீறுவதும் உடல்

மயிரைச் சிலிர்ப்பதும் ஆகிய செயல்களை யுடையது . இவை தவிர , சுண்டெலி ( House mouse ) என்பது வீட்டில் வாழ்வது . இதை யெல்லாம் நாட்டுப் புற மக்கள் நன்கு தெரிந்துள்ளனர் .சங்க இலக்கியத்தில் எலிகளில் முக்கியமான மூன்று எலிகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன வென்பதைத் தெளிந்து கொள்ளவேண்டும் .

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Mole – rat, Bandicota Bengalensis, Hamster – Cricetinae

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர்
புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை – அகம் 133/1,2

குன்றிமணி போன்ற கண்களையும், நல்ல நிறம் வாய்ந்த மயிரையும்
மெல்லிய கால்களையும் தாடியினையுமுடைய ஆண் வெள்ளெலி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *